Published : 12 Apr 2019 12:00 AM
Last Updated : 12 Apr 2019 12:00 AM
மத்திய அரசின் புள்ளிவிவரப் படி, இந்தியாவில் சுமார் 65 சதவீதமக்கள் கிராமங்களில் வாழ்கிறார்கள். இவர்கள்தான், மக்களவைத் தேர்தலில் வெற்றி யாருக்கு என்பதை தீர்மானிக்கும் சக்தியாக விளங்குகிறார்கள்.
இந்தியாவில் 6 லட்சம் கிராமங்கள் உள்ளன. இதில், பெரும்பாலானவர்களாக இருக்கும் விவசாயிகளில், நிலமற்ற தினக்கூலிகளே அதிகம். இவர்களில் மிகவும் பிற்படுத்தப்பட்ட மற்றும் பழங்குடி இன சமூக மக்களின் எண்ணிக்கை அதிகம் உள்ளது.
நம் நாட்டின் இயற்கை வளத்தையும் இந்த கிராமப்பகுதிகளே வளர்த்து வருகின்றன. இவர்கள்தேர்தலின்போது தம் சமூகத்தினருக்கு வாக்களிப்பதில் முன்னுரிமைஅளிப்பது உண்டு. ஒரு பகுதியினர்தங்கள் வளர்ச்சிக்கு உதவியவர்களுக்கும் வாக்களித்து வருகிறார்கள். இதன் காரணமாக, தொடக்கம் முதலாக கிராமப்புறங்களின் வளர்ச்சியிலும் தமது அரசு கவனம் செலுத்தி வந்ததாக பிரதமர்நரேந்திர மோடி தனது பிரச்சாரங்களில் முன்வைக்கிறார். இதன் பின்னணியில், இந்த மக்களவை தேர்தலில் அவர்களின் வளர்ச்சியே முக்கிய இடம்பெறும் என பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்ட அரசு நம்புகிறது.
கடந்த 5 வருடங்களில் செய்தது என்ன?
கடந்த 5 வருடங்களில் விவசாயிகள், தொழிலாளர்கள், மிகவும் பிற்படுத்தப்பட்ட மற்றும் பழங்குடியினருக்கு பல திட்டங்களை செய்ததாக கூறுகிறது மோடி அரசு.
இவர்கள் நேரடியாக பலன்பெறும் வகையில் அனைவரையும் டிஜிட்டல் முறையில் இணைத்திருப்பதாகவும் பெருமை கொள்கிறது. இதற்கு முன்பாக, கிராமங்களின் அடிப்படையான குடிநீர், மின்சார இணைப்பு மற்றும் சாலை வசதி அமைக்கும் பணிகளை விரைவுபடுத்தியதாகவும் தெரிவித்துள்ளது.
உஜ்வாலா, கிராம ஜோதி, தேசிய வாழ்க்கை முறை, ஷியாமா பிரசாத் முகர்ஜி அர்பன் மிஷன் போன்றவை அதன் திட்டங்கள் ஆகும். கிராமவாசிகளைபொதுவளர்ச்சி திட்டத்திலும் இணைக்கும் வகையில் ஆயுள்காப்பீடு திட்டம், கிராமப்புற வீடு கட்டும் திட்டம், கிராமப்புறங்களுக்கான தூய்மை இந்தியா திட்டம் ஆகியவற்றை அமலாக்கி உள்ளது.
பஞ்சாயத்துராஜ் முறையை மேலும் வெளிப்படையாக செயல்படும் வகையில் மாற்றி அமைத்துள்ளது. இவை அனைத்திலும் கிடைத்த பலனையும், வளர்ச்சியையும் கிராமப்புற மக்களிடம் பாஜகவினருடன் சேர்ந்து ஆர்எஸ்எஸ் அமைப்பினரும் எடுத்துக் கூறி வருகின்றனர்.
மோடி அரசுக்கு துவக்கம் முதலாக, விவசாயிகள் மத்தியில் எழுந்த எதிர்ப்பை சமாளிக்கும் வகையில் அவர்களுக்கான பல திட்டங்கள்வகுக்கப்பட்டிருந்தன. விவசாயிகளின் வருமானத்தை 2022-ம் ஆண்டுக்குள் இருமடங்காக உயர்த்துவதாகவும் உறுதி அளித்து வந்தது.
இதற்கு வழிவகுக்கும் திட்டங்களாக, மண் வள ஆரோக்கிய அட்டை, விவசாய வளர்ச்சிப் பத்திரம், பயிர்களுக்கான காப்பீடு, பிரதமர் ஏழை வளர்ச்சி திட்டம் உள்ளிட்ட பலவற்றை அடுக்குகின்றனர்.
இந்த வகையில், கடைசி பட்ஜெட்டில் விவசாயிகளுக்காக பிஎம் கிசான் யோஜனா, கடன்வரம்பு உயர்வு, காப்பீட்டில் சலுகை ஆகியவை அறிவிக்கப்பட்டது. பிஎம் கிசானில் 12.5 கோடி சிறு, குறு விவசாயிகளுக்கு வருடம் ஒன்றுக்கு ரூ.6000-ஐ அறிவித்தது. இதன் முதல் தவணையான ரூ.2000 நாட்டின் விவசாயிகள் கணக்கில் செலுத்தியாகி விட்டது.
பல்வேறு மாநிலங்களை ஆளும் எதிர்க்கட்சி அரசுகளின் ஒத்துழைப்பு இல்லாமலும், முறையான ஆவணங்கள் சமர்ப்பிக்கப்படாமலும் அதன் பலனை அனைவரும் உடனடியாகப் பெற முடியவில்லை. இதில், இந்தியாவின் 67.11 லட்சம் விவசாயிகள் பாதிக்கப்பட்டனர். எனினும், அவர்களுக்கு இந்ததொகை தாமதமானாலும் கிடைப்பது உறுதியாக உள்ளது.
அச்சா தின் (நல்ல நாள்)
எனினும் ஏழை மற்றும் விவசாயிகளுக்கு எதிரானது எனவும், செல்வந்தர்களுக்கான கட்சி எனவும் பாஜகவை எதிர்க்கட்சிகள் விமர்சனம் செய்து வருகின்றனர். இதற்கு அடிப்படையாகப் பிரதமர் மோடியின் பணமதிப்பு நீக்கத்தால் ஏற்பட்டப் பாதிப்பை சுட்டிக் காட்டுகின்றனர். எதிர்கட்சிகளின் விமர்சனம் தாங்க முடியாமல் மோடி அரசு ‘அச்சா தின்(நல்லநாள்)’ என அடிக்கடிக் கூறுவதையும் நிறுத்திக் கொண்டது.
எனினும், இவ்வாறு பாஜக கூறியதில் உண்மை இருக்குமேயானால், கிராமப்புறவாசிகள் மோடி அரசுக்கு மீண்டும் வாக்களித்து பதவியில் அமர வைக்கும் வாய்ப்புகள் உள்ளன. இதன் முடிவுகள் அறிய அனைவரும் மே 23 வரை காத்திருக்க வேண்டும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT