Published : 18 Apr 2019 05:46 PM
Last Updated : 18 Apr 2019 05:46 PM
வாரணாசியில் பிரதமர் நரேந்திர மோடியை எதிர்த்து பிரியங்கா வத்ரா போட்டியிடுவரா? இல்லையா? எனும் கேள்வி தொடர்கிறது. இதன் மீது ‘தி இந்து’ ஆங்கில நாளிதழில் இன்று வெளியான பேட்டியில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி அதை மறுக்கவில்லை.
இந்தமுறை மக்களவை தேர்தலில் பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராக எதிர்கட்சிகள் ஒன்றிணைய முயன்றனர். ஆனால், அதில் தோல்வி அடைந்தவர்கள் ஆங்காங்கே சில மாநிலங்களில் அளவில் கூட்டணி அமைத்துள்ளனர்.
எனினும், உ.பி.யின் வாரணாசியில் போட்டியிடும் பிரதமர் மோடியை எப்படியும் தோற்கடிக்க வேண்டும் என்ற எண்ணம் தொடர்கிறது. இதற்காக அனைத்து எதிர்கட்சிகள் சார்பில் ஒரு வேட்பாளரை நிறுத்துவது என திட்டமிடப்பட்டும் வருகிறது.
இதனிடையே, உ.பி. மேற்கு பகுதியின் தலீத் சமூகத் தலைவரும் பீம் ஆர்மி கட்சி நிறுவனருமான சந்திரசேகர், வாரணாசியில் மோடியை எதிர்ப்பதாக அறிவித்திருந்தார். தமக்கு எதிர்கட்சிகள் அனைவரும் ஆதரவளிக்க வேண்டும் எனவும் கோரி வந்தார்.
இந்நிலையில், உபியின் கிழக்குப்பகுதியில் பிரச்சாரம் செய்த பிரியங்கா, ’நான் வாரணாசியில் பிரதமர் மோடியை எதிர்க்கவா? எனப் பொதுமக்களிடம் கேட்டிருந்தார். இதை வைத்து பிரியங்கா வாரணாசியில் போட்டியிடுவதாக பேச்சுக்கள் எழுந்தன.
உபியின் மெகா கூட்டணி உறுப்பினர்களான மாயாவதி, அகிலேஷ்சிங் யாதவ் மற்றும் அஜித்சிங் ஆகியோரும் தமக்கு ஆதரவளித்தால் பிரியங்கா போட்டியிடுவது உறுதி என்றிருந்தது. இதன் மீதான கேள்வி ஒன்றுக்கு ராகுல் காந்தி, ‘தி இந்து’ ஆங்கில நாளிதழுக்கு அளித்த பேட்டியில் பதிலளித்துள்ளார்.
அதில் ராகுல் கூறும்போது, ‘இந்த கேள்விக்கு உங்களை புதிரில்(சஸ்பென்ஸ்) விட விரும்புகிறேன். புதிர் என்பது ஒன்றும் தவறான வார்த்தை அல்ல.’ எனத் தெரிவித்துள்ளார்.
பிரியங்கா போட்டியிடுவரா? இல்லையா? என்ற நேரடிக் கேள்விக்கு ராகுல் அளித்த பதிலில், ‘இதை நான் மறுக்கவும் மாட்டேன். ஆம் எனவும் ஏற்க மாட்டேன்.’ எனத் தெரிவித்துள்ளார்.
உ.பி.யில் கடைசியாக ஏழாவது கட்ட தேர்தலில் வாரணாசியின் வாக்குப்பதிவு மே 19-ல் நடைபெறுகிறது. பிரதமர் மோடி அங்கு வரும் ஏப்ரல் 25-ல் மனு தாக்கல் செய்ய உள்ளார். இதற்காக அங்கு இரண்டு நாள் தங்கி தீவிரப் பிரச்சாரம் செய்யவும் திட்டமிட்டுள்ளார்.
இங்கு எதிர்கட்சிகளில் ஒருவர் கூட தன் வேட்பாளரை அறிவிக்காமல் உள்ளனர். ராகுலும் அதற்கு நேரடிப் பதிலை கூறாமையால் எதிர்கட்சிகள் சார்பில் பிரியங்கா போட்டியிடும் வாய்ப்புகள் அதிகம் உள்ளதாக எதிர்பார்க்கபப்டுகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT