Published : 20 Apr 2019 04:01 PM
Last Updated : 20 Apr 2019 04:01 PM
வாக்களித்து தங்களை பெரும்பான்மையுடன் தேர்வு செய்த மக்களுக்கு பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு துரோகம் செய்துவிட்டது என்று காங்கிரஸ் பொதுச்செயலாளரும், உபி. கிழக்கு மண்டலப் பொறுப்பாளருமான பிரியங்கா காந்தி சாடினார்.
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மக்களவைத் தொகுதியில் அமேதி தொகுதியிலும், கேரளாவின் வயநாடு மக்களவைத் தொகுதியிலும் போட்டியிடுகிறார். வயநாடு தொகுதியில் தனது சகோதரர் ராகுல் காந்திக்கு ஆதரவாக பிரியங்கா காந்தி இன்று பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.
வயநாடு தொகுதியில் உள்ள மனன்தவாடே நகரில் இன்று நடந்த தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் பிரியங்கா காந்தி பங்கேற்றார். அப்போது அவர் பேசியதாவது:
கடந்த 2014-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் மக்கள் பாஜகவுக்கு பெரும்பான்மை ஆதரவளித்து ஆட்சியில் அமரவைத்தனர். ஆனால், தங்களை பெரும்பான்மையாக தேர்வு செய்து ஆட்சி செய்ய வாய்ப்பளித்த வாக்காளர்களுக்கு பாஜக துரோகம் செய்துவிட்டது.
பாஜக கடந்த 5 ஆண்டுகளாக நாட்டை துண்டாடும் செயலில் இறங்கி இருக்கிறது. என்னைப் பொருத்தவரை இது என்னுடைய தேசம், இந்த மலைகள் என்னுடைய தேசம்தான், உத்தரப்பிரதேசத்தில் உள்ள வயல்கள் என்னுடைய தேசம்தான், தமிழகம் என்னுடைய தேசம், குஜராத்தும் என்னுடைய தேசம், வடகிழக்கு மாநிலங்களும் என்னுடைய தேசம்.
கடந்த 5 ஆண்டுகளுக்கு முன் நம்பிக்கையுடன் ஆட்சியில் பாஜகவை மக்கள் அமரவைத்தனர், அதீதமான நம்பிக்கை வைத்திருந்தனர். ஆனால், தேர்தலின்போது, விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக உயர்த்துவேன், ஆண்டுக்கு 2 கோடி வேலைவாய்ப்புகளை இளைஞர்களுக்கு உருவாக்குவேன் என்று வாக்குறுதி அளித்த பாஜக ஆட்சிக்கு வந்தபின் அனைத்தையும் மறந்துவிட்டது.
பாஜக ஆட்சி அதிகாரத்தைத்தான் முழுமையாக நம்புகிறதே தவிர மக்களின் அதிகாரத்தை நம்பவில்லை. மக்களின் வங்கிக்கணக்கில் ரூ.15 லட்சம் டெபாசிட் செய்வோம் என்று பாஜக வாக்குறுதி அளித்தது. ஆனால், அனைத்தும் வெற்றுவாக்குதான், தேர்தல் முடிந்தபின் அப்படிபேசவில்லை என்கிறார்கள். காங்கிரஸ் கட்சி பேச்சு சுதந்திரம், கருத்து சுதந்திரம், பன்முக கலாச்சாரம், மொழிகள் ஆகியவை மீது நம்பிக்கையும் மரியாதையையும் வைத்துள்ளது.
நான் பிறந்ததுமுதல் நான் அறிந்திருக்கும் எனது சகோதரருக்காக நான் வாக்குக் கேட்டுவந்திருக்கிறேன். இந்த தொகுதியின் வேட்பாளராக உங்களை நம்பி ராகுல் போட்டியிடுகிறார். கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக பல்வேறு வகையான தனிநபர் தாக்குதல்களை ராகுல் சந்தித்து வருகிறார் . ராகுலின் குணங்களைப் பற்றி எதிர்க்கட்சிகள் குறிப்பிடும் விஷயங்கள் அனைத்தும் உண்மைக்கு புறம்பானவை, உண்மையில் இருந்து வெகுதொலைவில் இருப்பவை
இவ்வாறு பிரியங்கா காந்தி பேசினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT