Published : 22 Apr 2019 04:52 PM
Last Updated : 22 Apr 2019 04:52 PM
உ.பி.யின் புந்தேல்கண்ட் பகுதியில் உள்ள சம்பல்வாசிகளின் தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. இதை அப்பகுதியின் முன்னாள் கொள்ளைக்காரியான பூலான்தேவியின் தாயான மூலாதேவி வெளியிட்டார்.
இவர், உ.பி.யின் சம்பல் பகுதியில் அமைந்துள்ள ஜலோன் மாவட்டத்தின் ஷேக்புரா குடா கிராமத்தில் வசிக்கிறார். கொள்ளையில் இருந்து சரணடைந்த தன் மகள் சமாஜ்வாதியின் எம்பியாகவும் இருந்தமையால் முலாதேவிக்கு அப்பகுதியில் முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது.
இதனால், சம்பல் பகுதியின் சமூகசேவகரான ஷா ஆலம் தயாரித்த மக்களவைத் தேர்தலுக்கான அறிக்கையை மூலாதேவி கைகளால் வெளியிடப்பட்டது. இதில் பலவேறு அரசியல் கட்சிகளுக்காக சம்பல்வாசிகளின் கோரிக்கையாக இந்த தேர்தல் அறிக்கை அமைந்துள்ளது.
இதில், சம்பல்வாசிகளின் பிரச்சனைகளை கண்டறிய ‘சம்பல் ஆயோக்’ எனும் அமைப்பு அமைக்கப்பட வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது. சம்பல் வளர்ச்சி வாரியம் அமைத்து அப்பகுதியை மேம்படுத்தவும் கோரப்பட்டுள்ளது.
சம்பலில் உள்ள மணற்குன்றுகள், குளங்கள் மற்றும் காடுகளின் இயற்கை அழகை பயன்படுத்தி அங்கு ஒரு திரைப்பட நகரம் அமைக்கவும் கோரியுள்ளனர். சம்பல் பகுதியின் பெயர் கொள்ளைக்காரர்களுக்கானது எனக் களங்கப்படுத்தப்பட்டிருப்பதாகவும் அந்த அறிக்கையில் புகார் உள்ளது.
இதை அகற்றி அங்குள்ள சாதாரண, ஏழைப்பொதுக்களின் வளர்சிக்கு பாடுபடும் வேட்பாளர்களுக்கு வாக்களிக்கப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது. தன் மீதான கொள்ளையர் கிராமங்கள் எனும் களங்கத்தை அகற்ற சம்பலில் ஒரு பல்கலைகழகம் அமைக்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
உபி, ராஜஸ்தான் மற்றும் மத்தியபிரதேசம் மாநிலங்களுக்கு இடையே இந்த சம்பல் பகுதி அமைந்துள்ளது. இதனால், அப்பகுதியில் அமைந்துள்ள அனைத்து தொகுதிகளின் கிராமங்களுக்கும் ஒரே வகையான அவலநிலை நிலவுவதாகக் கருதப்படுகிறது.
இங்கு மல்லா எனும் மீனவர் சமுதாயத்தினர் அதிகம் வாழ்கின்றனர். இங்கு முன்புபோல் கொள்ளையர்கள் ஆதிக்கம் இல்லை. எனினும், உயர்சமூகத்தினரால் பாதிக்கப்பட்டு துப்பாக்கி தூக்கும் சிலர் கும்பலாகக் கொள்ளையில் ஈடுபட்டு வருகின்றனர்.
அழிக்கப்பட்ட பூலான்தேவி ஓவியம்
இதனிடையே, மபியின் இந்தேர் நகரின் ரயில் நிலையச் சுவரில் மதர் தெரஸா, ஜான்சி ராணி லக்குமிபாய் ஆகிய 35 சிறந்த பெண்களுடன் பூலான்தேவியின் உருவப்படமும் வரையப்பட்டிருந்தது. இதில் பூலான்தேவி படத்தினை அப்பகுதியின் தாக்கூர் சமூகத்தினர் அழித்து விட்டதாகப் புகார் எழுந்துள்ளது.
இதற்கு பூலானின் மல்லா சமூகத்தினர் இந்தோர் ரயில் நிலையம் முன் ஆர்பாட்டம் செய்தனர். அழிக்கப்பட்ட பூலான் படத்தினை அங்கு மீண்டும் வரைய வேண்டும் என ரயில் நிர்வாகத்திடம் வலியுறுத்தி வருகின்றனர்.
அப்பகுதியில் உள்ள ஒரு தனியார் பல்கலைகழகத்தின் சார்பில் இந்த சிறந்த பெண்களின் ஒவியங்கள் ஏப்ரல் 13-ல் வரையப்பட்டன. இதில், பூலனின் ஓவியம் மட்டும் அழிக்கப்பட்டது சர்ச்சையாகி உள்ளது.
பூலான்தேவி விவரம்
உபியின் கிராமத்தின் உயர்சமூகத்தினரால் பாலியியல் சித்தரவதைக்கு உள்ளானதால் பழி தீர்க்க துப்பாக்கி ஏந்தியவர் பூலான்தேவி. சம்பலின் பள்ளத்தாக்குகளில் பிரபல கொள்ளைக்காரியாகவும் மாறினார்.
தன்னை சித்தரவதைக்கு உள்ளாக்கிய தாக்கூர் சமூகத்தினர் 22 பேரை பேமாய் கிராமத்தில் கடந்த பிப்ரவரி 14, 1981-ல் சுட்டுக் கொலை செய்தார். இதன் பிறகு பிரபலமாகி ’சம்பல் ராணி’ என்றழைக்கப்பட்டார் பூலன் தேவி. உபி,
ராஜஸ்தான் மற்றும் மபி மாநிலங்களில் பரவியுள்ள சம்பல் பள்ளத்தாக்கின் கொள்ளைக்காரியாகவும் இருந்தார்.
பூலானை அம்மூன்று மாநில போலீஸாராலும் கைது செய்ய முடியவில்லை. பிறகு சரணடைந்த பூலனை, தனது சமாஜ்வாதியில் சேர்த்தார் முலாயம்சிங்.
பிறகு, மக்களவை தேர்தலில் உபியின் மிர்சாபூர் தொகுதியிலும் போட்டியிட்டு இருமுறை எம்பியாக இருந்தவர் டெல்லியில் தன் அரசு குடியிருப்பில் 2001-ல் சுட்டுக் கொல்லப்பட்டார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT