Published : 18 Apr 2019 12:00 AM
Last Updated : 18 Apr 2019 12:00 AM
தமிழகத்தில் இன்று வாக்குப்பதிவு நடைபெறும் நிலையில் நேற்று முன்தினம் மாலை 6 மணியுடன் பிரச்சாரம் ஓய்ந்தது. தேர்தல் ஆணைய விதிமுறைகளின்படி ‘அமைதி காலம் (Silent Period)’ என அனுசரிக்கப்படுகிறது. இந்த அமைதி காலத்தில் சமூக வலைத்தளங்கள், வானொலி மற்றும் தொலைக்காட்சி ஊடகங்களில் பிரச்சாரம் செய்யக் கூடாது. இவை அனைத்தையும் சேர்த்து ‘மின்னணு ஊடகம்’ எனும் பிரிவாக ஆணையம் குறிப்பிடுகிறது. இவற்றில் எழும் ஓசை இன்றி அமைதியாகப் பிரச்சாரம் செய்வதால் அச்சிதழ்களில் மட்டும் அனுமதி அளிக்கப்படுகிறது.
இந்நிலையில், இன்று இரண்டாம் கட்ட தேர்தல் நடைபெறும் மாநிலங்களின் பகுதிகளில் இருந்து அமைதி காலத்தை மீறியதாக ஆணையத்திற்கு புகார்கள் குவியத் துவங்கி உள்ளன. முகநூலின் விளம்பரங்கள் குறித்து அதிகமான புகார்கள் வருகின்றன. உதாரணமாக, தமிழகத்தில் இருந்து நேற்று நண்பகல் வரை 26 புகார்கள் முகநூல் நிறுவனம் மீது கூறப்பட்டுள்ளன. இவற்றின் மீது நடவடிக்கை எடுக்க தமிழகம் உள்ளிட்ட மாநிலத் தேர்தல் அதிகாரிகளுக்கு அதிகாரம் இல்லை. இதனால், அவை மத்திய தேர்தல் ஆணையத்திற்கு நடவடிக்கை எடுப்பதற்காக அனுப்பி வைக்கப்பட்டு வருகின்றன.
இதுகுறித்து ‘இந்து தமிழ்’ நாளேட்டிடம் மத்திய தேர்தல் ஆணைய வட்டாரம் கூறும்போது, ‘‘தேர்தல் துவங்கும் போது வெளியான விளம்பரங்கள் கடைசி நாள் பிரச்சாரம் முடிந்தவுடன் அகற்றப்படும் வகையில் அமைத்திருக்கலாம். ஆனால், பிரச்சாரத்திற்கு பிறகும் பணம் சம்பாதிக்கும் நோக்கில் முகநூல் உள்ளிட்ட சில நிறுவனங்கள் இந்த தவறுகளை செய்கின்றன. மாநில தேர்தல் அதிகாரிகளின் புகார்களை சமூக வலைத்தள நிறுவனங்கள் ஏற்க முடியாது எனக் கூறியதால் நாங்களே அதை அளித்து நடவடிக்கை எடுத்து வருகிறோம்’’ எனத் தெரிவித்தனர்.
இதில், பாஜக 8, நாம் தமிழர் கட்சி 7, அதிமுக 5, திமுக 4, புதிய கட்சிகள் மற்றும் சுயேச்சை வேட்பாளர்களின் விளம்பரங்கள் இடம்பெற்றுள்ளன.
சி-விஜில் மூலம் குவிந்த புகார்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுத்தது தேர்தல் ஆணையம். இதனால், குறைந்த புகார்கள்,ஒருசில மட்டும் என தொடர்ந்தன. இவை, பிரச்சாரம் ஓய்ந்த பிறகு மீண்டும் அதிகரிக்கத் துவங்கி உள்ளன. இதுபோல், சமூக வலைத்தளங்களில் விதிமீறல் நடவடிக்கை என்பது முதன்முறை. எனவே, இந்த விதிமீறல்கள் தடுக்கப்பட்டதே தவிர, இதற்காக ஆணையம் யார் மீதும் வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT