Last Updated : 18 Apr, 2019 10:35 AM

 

Published : 18 Apr 2019 10:35 AM
Last Updated : 18 Apr 2019 10:35 AM

ஜாட் சமூகத்தினரின் வாக்குகள் யாருக்கு? - இன்று 2ம் கட்ட தேர்தல் களம் காணும் உத்தரப் பிரதேசம்

தேர்தல் 2019-ல் மிகுந்த ஆர்வத்தை ஏற்படுத்தும் ஒரு மாநிலமாக உ.பி.உள்ளது. இங்கு பாஜக, சமாஜ்வாதி-மாயாவதி, காங்கிரஸ் என்று மும்முனைப் போட்டி நிலவுகிறது.

 இந்நிலையில் இங்கு தேர்தல் வெற்றி தோல்வியை தீர்மானிக்கும் ஜாட் சமூகத்தினரின் வாக்குகள் யாருக்கு என்பது ஆர்வமூட்டுவதாக அமைகிறது.

 

மேற்கு உத்தரப்பிரதேச ஜாட் சமூகத்தினர் அதிகம் வாழும் பகுதியில் ஒரு பயணம் மேற்கொண்ட போது 2014 தேர்தலின் போது நரேந்திர மோடிக்கு இருந்த ஆதரவு இப்பொது இல்லை என்று தெரிந்தது. ஆனால் இது பாஜக-வுக்கு எதிரான வாக்குகளாகத் திரும்புமா? ஜாட்கள் தங்கள் அசலான ராஷ்ட்ரிய லோக்தள் பக்கம் சாய்ந்து சமாஜ்வாதி-பகுஜன் கட்சிக்கு ஆதரவாக மாறுவார்களா?

 

இன்றைய தேர்தல் ஜாட் மக்களின் உணர்வுக்கான சோதனைக் களமாக உள்ளது. குறிப்பாக மதுரா, ஃபதேபூர் சிக்ரி, புலந்த்சாஹர், ஹத்ரஸ், அலிகார் உள்ளிட்ட தொகுதிகளைக் குறிப்பிடலாம். மதுராவின் மந்த் பகுதியில் பனிகவான் கிராமத்தில் இதுதொடர்பான கருத்துகளில் பிளவு உள்ளது. மதுராவில் பாஜகவின் ஹேமமாலினி நிற்கிறார், இவர் ஜாட் தர்மேந்திராவின் மனைவி என்பதால் ஜாட் வாக்குகள் நம்பகம் உள்ளது, நரேந்திர சிங் ஒரு செல்வாக்கான அரசியல் குடும்பத்திலிருந்து வந்த தாக்கூர் பிரிவைச் சேர்ந்தவர் நிற்கிறார்.  இங்கு ராஷ்ட்ரிய லோக் தள் கட்சி ஜாட் அல்லாதவரைக் களமிறக்கி சோதித்துப் பார்க்கிறது. எனவே இங்கு ஆர்.எல்.டி. வெற்றி பெற வேண்டுமெனில் தங்களது வேரடி ஆதரவைத் திரும்பப் பெறவேண்டும்.

 

பனிகவான் பகுதியில் மோடி மீது கடும் கோபத்தில் விவசாயிகள் இருப்பதால் இம்முறை மோடியை தோற்கடிக்க வேண்டும் என்று விரும்புவதாக இரண்டு விவசாயிகள் தெரிவிக்கின்றனர். இதே கிராமத்தில் வசிக்கும் உருளைக் கிழங்கு விவசாயி சவுத்ரி தன் பயிரை பெரிய அளவில் இழந்துள்ளார். அத்தனை உருளைக்கிழங்குகளும் அழுகிப்போய்விட்டன. ”எங்கள் உருளைக்கிழங்கை தேவையில்லை என்று கூறிவிட்டது அரசாங்கம்” என்று பாஜக மீது கடும் கோபத்தில் இருக்கிறார். 2014ல் மோடி ‘நாட்டை ஒழுங்காக நடத்துவார் என்று வோட்டு போட்டோம்’ என்று கூறும் இவர்கள் இந்த முறை மோடி மாயையை நம்பத் தயாராக இல்லை.

 

கோவர்தனில் ஹேமமாலினி பயிர்களை சுமந்து சென்ற பெண் ஒருவருக்கு கை கொடுத்து உதவியதாக படங்களைப் ஒன்றை பகிர்ந்துள்ளார். ஆனால் ஒரு பெண் ஹேமமாலினிக்கு சால்வைப் போர்த்த முயன்ற போது காரிலிருந்து கீழேயே இறங்கவில்லை என்று கோபாவேசப்படும் சவுத்ரி, “காரிலிருந்து கூட இறங்கவில்லை நாங்கள் என்ன நாற்றம் அடிக்கிறோமா?” என்று காட்டமாகக் கேட்டுள்ளார்.

 

இதே சவுத்ரி பாலகோட் தாக்குதல் பற்றி கூறும்போது, “மக்களிடம் பொய் கூறுகின்றனர்” என்றார்.

 

ஆனால் மஹாவீர் சிங் என்பவர் இதிலிருந்து மாறுபட்டு பாஜகவுக்கு வாக்கு என்கிறார்.  ஜாட் வாக்குகள் பிரதான பங்கு வகிக்கும் இன்னொரு தொகுதி ஃபதேப்பூர் சிக்ரி.  இங்கு ஜாட் வேட்பாளர் ராஜ்குமார் சாஹர் இவருக்கு எதிராக ராஜ் பப்பர் என்ற காங்கிரஸ் வேட்பாளர், பகுஜன் கட்சியின் குத்தூ பண்டிட், இவர் ஒரு பிராமணர் ஆகியோர் களத்தி உள்ளனர். இங்கும் கூட ஜாட்கள் காங்கிரஸ், பாஜகவிடையே பிளவுண்டு கிடக்கின்றனர்.

 

ஆகவே உ.பி.யில் ஜாட் வாக்குகள் ராஷ்ட்ரிய லோக்தள், சமாஜ்வாதி-பகுஜனுக்கு கிடைக்குமா என்பதில் இழுபறி நிலையே நீடிக்கிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x