Published : 25 Apr 2019 12:00 AM
Last Updated : 25 Apr 2019 12:00 AM
மக்களவைத் தேர்தல்கள் நடந்து கொண்டிருக்கின்றன. இதுவரை 3 கட்ட தேர்தல்கள் முடிந்துள்ளன. இன்னும் 4 கட்டங்கள் பாக்கி இருக்கின்றன. தேர்தல் நியாயமாக நடக்க தேர்தல் ஆணையம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. குறிப்பாக, ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்துடன், வாக்காளர்கள் தாங்கள் யாருக்கு வாக்களித்தோம் என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளும் வகையில் ஒப்புகை சீட்டு அளிக்கும் ‘விவிபாட்’ இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ளன. வாக்காளர் தாங்கள் வாக்களிக்கும் கட்சி, வேட்பாளருக்கு உரிய பட்டனை அழுத்தியதும் அந்தக் கட்சியின் சின்னம், வேட்பாளரின் பெயருடன் அருகில் உள்ள ‘விவிபாட்’ இயந்திரத்தில் 7 விநாடிகள் தெரியும். இதன் மூலம் தாங்கள் யாருக்கு வாக்களித்தோம் என்பதை வாக்காளர் உறுதிப்படுத்திக் கொள்ளலாம்.
இது ஒருபுறம் இருக்க, மம்தா பானர்ஜி, அகிலேஷ் சிங் யாதவ் உள்ளிட்ட பல்வேறு எதிர்க்கட்சித் தலைவர்களும் இந்தத் தேர்தலில் முக்கியமான ஒரு குற்றச்சாட்டை முன்வைக்கின்றனர். மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தின் மூலம் மோசடி நடக்கிறது. வாக்காளர் எந்தக் கட்சிக்கு வாக்களித்து அதற்குரிய பட்டனை அழுத்தினாலும் அது பாஜகவுக்கே வாக்குகளாக மாறும் வகையில் மின்னணு இயந்திரத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது என்று குற்றம்சாட்டுகின்றனர். ஆந்திர முதல்வரும் தெலுங்கு தேசம் கட்சியின் தலைவருமான சந்திரபாபு நாயுடு ஒருபடி மேலே போய்விட்டார். ‘‘மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை ரஷ்யா இயக்கி வருவதாக தகவல்கள் கிடைத்துள் ளன. வேறு ஒரு இடத்தில் இருந்து நவீன தொழில்நுட்பம் மூலம் ‘ரிமோட் கன்ட்ரோல்’ முறையில் வாக்குப்பதிவு இயந்திரங்களை ரஷ்யா இயக்கி வருவதாக எனக்கு தகவல் வந்துள்ளது. இந்த முறையில் ஒரு தொகுதியில் வேட்பாளரை வெற்றி பெற வைக்க ரூ.5 கோடியில் இருந்து ரூ.10 கோடி வரை பணம் கொடுக்க வேண்டும் என்ற நிலை இருக்கிறது.இதுபற்றி விசாரிக்க வேண்டும்’’ என்று அதிர்ச்சிகரமான குற்றச்சாட்டை கூறியுள்ளார்.
தேர்தலில் முறைகேடு செய்து ஆளும் கட்சி வெற்றி பெறுகிறது என்ற குற்றச்சாட்டு புதிதல்ல. தமிழகத்திலேயே இதற்கு முன்னுதாரணங்கள் உண்டு. அதிலும் ரஷ்யாவை தொடர்புபடுத்தியே என்பது சுவாரசியம். கொஞ்சம் ‘ஃபிளாஷ் பேக்’..
1971-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலுடன் தமிழக சட்டமன்றத்துக்கும் தேர்தல் நடந்தது. திமுக, இந்திரா காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகள் ஓரணியாகவும் காமராஜர் தலைமையிலான ஸ்தாபன காங்கிரஸ், ராஜாஜியின் சுதந்திரா கட்சி உள்ளிட்ட கட்சிகள் ஓரணியாகவும் தேர்தலை சந்தித்தன. திமுக கூட்டணியில் இந்திரா காங்கிரசுக்கு 10 மக்களவைத் தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. சட்டப்பேரவையில் ஒரு தொகுதி கூட அக்கட்சிக்கு ஒதுக்கப்படவில்லை. அகில இந்திய ரீதியில் காமராஜர், நிஜலிங்கப்பா போன்ற பெரும் தலைவர்களை வீழ்த்தி தன்னை நிலைநிறுத்திக் கொள்ள வேண்டும் என்பதற்காக இதற்கு இந்திரா காந்தியும் ஒப்புக் கொண்டார்.
திமுக கூட்டணி, முதல்வர் கருணாநிதி தலைமையில் தேர்தலை சந்தித்தது. அப்போது, திமுக பிளவுபட்டு அதிமுக உருவாகவில்லை. எம்.ஜி.ஆர். திமுகவில்தான் இருந்தார். தமிழகம் முழுவதும் திமுக கூட்டணியை ஆதரித்து சூறாவளி பிரச்சாரம் செய்தார். சட்டப்பேரவையில் திமுக 184 இடங்களைக் கைப்பற்றி சாதனை படைத்தது. மக்களவைத் தேர்தலிலும் தமிழகத்தின் 39 தொகுதிகளில் 38-ல் திமுக கூட்டணி வென்றது. நாகர்கோயில் மக்களவைத் தொகுதியில் மட்டும் காமராஜர் வெற்றி பெற்றார். சட்டப்பேரவையில் காமராஜரின் ஸ்தாபன காங்கிரசுக்கு 15 இடங்கள் மட்டுமே கிடைத்தன.
தேர்தல் முடிவுகள் பெரும் வியப்பை ஏற்படுத்தின. அரசியலில் எதிரும் புதிருமாக இருந்த காமராஜரும் ராஜாஜியும் கூட்டணி சேர்ந்தது மிகப் பெரிய அரசியல் திருப்பமாக பார்க்கப்பட்டது. சென்னை கடற்கரையில் இரு தலைவர்களும் கலந்து கொண்ட பிரச்சாரக் கூட்டத்திற்கு லட்சக்கணக்கான மக்கள் திரண்டனர். இருந்தும் தேர்தலில் மோசமான தோல்வி!
சோர்வடைந்த ஸ்தாபன காங்கிரஸ் நிர்வாகிகள், காமராஜரிடம் சென்று முறையிட்டனர். ‘தேர்தலின்போது ரஷ்யாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட ரகசிய மையை வாக்குச் சீட்டில் திமுகவுக்கு ஆதரவாக தடவி விட்டதால் தேர்தலில் திமுக வெற்றிபெற்றது’ என்பதுதான் அவர்களின் குற்றச்சாட்டு!
வந்ததே கோபம் காமராஜருக்கு. அவர் பேசும் பாணியிலேயே வெளுத்து வாங்கிவிட்டார்.
‘‘இதெல்லாம் என்ன பேச்சுண்ணேன். நாம நல்லா தோத்துட்டோம். முதல்ல அதைப் புரிஞ்சுக்குங்க. அப்பதான் அடுத்த தேர்தலிலாவது கடுமையாக உழைத்து வெற்றி பெறலாம். இல்லாட்டி அடுத்த தேர்தலிலும் தோற்க வேண்டியதுதான். போயி வேலையப் பாருங்க..’’
காமராஜரின் சீற்றத்தைக் கண்ட கட்சி நிர்வாகிகள் அமைதியாகத் திரும்பினர்.
காமராஜருக்கு இருந்த பக்குவமும் தொலைநோக்கும் கள எதார்த்தத்தை புரிந்து கொண்டு செயலாற்றும் தன்மையும் இப்போதைய தலைவர்களுக்கு இல்லை என்பது இன்றைய ஜனநாயகத்தின் குறைபாடுகளில் ஒன்று!
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT