Last Updated : 14 Apr, 2019 03:16 PM

 

Published : 14 Apr 2019 03:16 PM
Last Updated : 14 Apr 2019 03:16 PM

20-வது முறை நீ வெற்றி பெறுவாய்- குரு சொன்னதால் 17-வது முறையாக தேர்தலில் நிற்கும் 76 வயது துறவி

''20-வது முறை நீ  நிச்சயம் வெற்றிபெறுவாய்'' என்று குரு சொன்னதால் தொடர்ந்து 17-வது முறையாக தேர்தலைச் சந்திக்கிறார் உ.பி.யின் மதுரா தொகுதி சுயேட்சை வேட்பாளர் பாபா பகத்சிங்.

76 வயதான இத்துறவி கடந்த 8 முறை சட்டப்பேரவை மற்றும் அதற்கு இணையாக நாடாளுமன்றத் தேர்தலிலும் தொடர்ந்து மதுராவில் போட்டியிட்டு வருகிறார்.

வரும் மக்களவைத் தேர்தலில் 17-வது முறையாக போட்டியிடும் பாபா பகத்சிங் ஏஎன்ஐக்கு அளித்த பேட்டி:

''என்னுடைய குரு சொல்லித்தான் நான் தொடர்ந்து தேர்தலில் போட்டியிட்டு வருகிறேன். 'மக்களவைத் தேர்தலில் போட்டியிடுவதை நிறுததாதே,  20-வது முறை நீ நிற்கும்போது நிச்சயம் வெற்றி பெறுவாய்' என்று எனது குரு சொல்லியிருக்கிறார். அதனால் தொடர்ச்சியான தோல்விகளைக் கண்டு நான் பயப்பட மாட்டேன்.

மதுராவில் நடத்தப்படும் இந்நாடாளுமன்றத் தேர்தலைப் பொறுத்தவரை உப்பு நீர் மிகப்பெரிய பிரச்சினையாக உள்ளது. மதுராவுக்கு உப்பு நீக்கப்பட்ட குடிநீரை அளிக்க வேண்டுமென்பதுதான் எனது விருப்பம்''.

இவ்வாறு பாபா பகத்சிங் தெரிவித்தார்.

கான்பூர் மாவட்டத்தில் உள்ள பிதூர் கிராமத்தில் பிறந்த இத்துறவி 11 வயதிலேயே மதுரா வந்தவர் அப்போதிலிருந்தே துறவியாக மாறிவிட்டார்.

அவரை குடும்பத்தோடு வந்து வீட்டில் இருக்கும்படி ஊரிலுள்ள உறவினர்கள் கேட்டுக்கொண்டனர். ஆனால் இவர் மதுராவை விட்டுச் செல்வதாக இல்லை.

ராமர் கோயில் பற்றி பாபா பகத்சிங் கூறுகையில், ''பிரதமர் மோடி மீண்டும் பதவிக்கு வருவார். அடுத்த ஐந்து ஆண்டுகளில் ராமர் கோயிலை நிச்சயம் கட்டுவார். அதேநேரம் என்னுடைய விருப்பம் என்னவென்றால் ரத்தம் சிந்தாமல் இது நிறைவேற வேண்டும் என்பதுதான்'' என்கிறார்.

மதுராவில் பாஜக சார்பில் ஹேமமாலினி, காங்கிரஸ் சார்பில் மகேஷ் பகத் மற்றும் ராஷ்டிரிய லோக் தளம் சார்பில் கன்வார் நரேந்திர சிங் ஆகியோர் மும்முனைப் போட்டியில் களத்தில் உள்ளனர்.

உத்தரப் பிரதேசத்தில் ராஷ்டிரிய லோக் தளம் மற்றும் சமாஜ்வாதி கட்சி பகுஜன் சமாஜ் ஆகியவை மெகா கூட்டணியாக கைகோத்துள்ளன. இவர்களுடன் மதுரா மக்களுக்கு நன்கு அறிமுகமான பாபா பகத்சிங்கும் போட்டியிடுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

உத்தரப் பிரதேசத்தில் முதல்கட்டத் தேர்தல் முடிந்த நிலையில் அடுத்தகட்டத் தேர்தல் வரும் ஏப்ரல் 18-ம் தேதி அன்று நடைபெற உள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x