Last Updated : 11 Apr, 2019 03:24 PM

 

Published : 11 Apr 2019 03:24 PM
Last Updated : 11 Apr 2019 03:24 PM

வேலையில்லா பட்டதாரியான கன்னையா குமாரின் 2 ஆண்டு வருமானம் ரூ.8.5 லட்சம்

பிஹாரின் பேகுசராயில் போட்டியிடும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (சிபிஐ) வேட்பாளர் கன்னையா குமார்(32). வேலையில்லா பட்டதாரியான அவரது 2 வருட கால வருமான ரூ.8.5 லட்சம் எனத் தெரியவந்துள்ளது.

இந்த வருமானத்தை நூல், தனது எழுத்துகள், பல்வேறு பல்கலைக்கழகங்களில் அளித்த சொற்பொழிவுகளில் ஈட்டியதாகவும் தெரிவித்துள்ளார். இந்த தகவல் கன்னையா தாக்கல் செய்த வேட்புமனுவில் குறிப்பிட்டுள்ளது.

டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் மாணவர் பேரவைத் தலைவராக இருந்தபோது மத்திய அரசிற்கு எதிராக நடத்திய போராட்டத்தால் பிரபலமானவர் கன்னையா. இங்கு முனைவர் பட்டம் பெற்றவருக்கு இன்னும் வேலை கிடைக்கவில்லை.

ஆனால், அவர் மாணவர் போராட்டத்தில் கைதான அனுபவத்தை எழுதி, ‘பிஹாரில் இருந்து திஹார்’எனும் பெயரில் நூலாக வெளியாகி அதிகம் விற்பனையானது. தனது கையிருப்பு ரொக்கம் ரூ.24,000 எனவும் வங்கியில் உள்ள சேமிப்பு ரூ.3,57,848 என்றும் சொத்து மதிப்பாக அவர் தெரிவித்துள்ளார்.

தன் தந்தை விவசாயி, தனது தாய் அங்கன்வாடி பணியாளர் எனவும் குறிப்பிட்டுள்ள கன்னையாவின் பரம்பரை சொத்து 1.5 ஏக்கர் நிலம் மட்டுமே. இதன் மதிப்பு ரூ.2 லட்சம் ஆகும். எனினும், தன் தேர்தல் செலவிற்காக பொதுமக்கள் தலா ரூ.1 தரும்படி கன்னையா வேண்டுகோள் விடுத்திருந்தார். இதில் அவருக்குப் போதும் எனக் கூறிய பின்பும் ரூ.70 லட்சம் சேர்ந்துள்ளது.

கடந்த பிப்ரவரி 2016-ல் தேசவிரோத வழக்கில் கன்னையா கைதாகி சிறையில் அடைக்கப்பட்டார். இதனால், நாடு முழுவதிலும் பிரபலமானவர் மீது தேசவிரோதம் உள்ளிட்ட 4 வழக்குகள் நடைபெற்று வருவதையும் தனது மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

பிஹாரின் பேகுசராயில் முக்கியத்துவம் வாய்ந்த வேட்பாளாகிவிட்ட கன்னையாவிற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மற்றும் பல இளம் அரசியல் தலைவர்களும் ஆதரவளித்து வருகின்றனர். குஜராத்தின் தலித் சமூகத் தலைவர் ஜிக்னேஷ் மேவானி, காங்கிரஸில் இணைந்து விட்ட ஹர்திக் பட்டேல் ஆகியோரும் கன்னையாவிற்காக பேகுசராயில் பிரச்சாரம் செய்கின்றனர்.

பாலிவுட் பிரபலங்களான சப்னா ஹாஸ்மி, அவரது கணவரான ஜாவீத் அக்தர், ஸ்வரா பாஸ்கர் ஆகியோரும் கன்னையாவிற்காகப் பிரச்சாரம் செய்ய உள்ளனர். இவரை எதிர்த்து பாஜகவில் கிரிராஜ் சிங் போட்டியிடுகிறார்.

ராஷ்டிரிய ஜனதா தளம் தலைமையிலான மெகா கூட்டணியும் கன்னையாவிற்கு ஆதரவளித்து எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக நிறுத்த திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால், இதற்கு லாலு பிரசாத் யாதவின் மகனான தேஜஸ்வீ பிரசாத் யாதவ் எதிர்ப்பு தெரிவித்திருந்தார்.

இதனால், லாலு கட்சியின் சார்பில் தன்வீர் ஹசன் போட்டியிடுகிறார். இவரையும் சேர்த்து மும்முனைப் போட்டி நிகழ்ந்தாலும் கன்னையாவிற்கு வெற்றி வாய்ப்பு அதிகம் தெரிகிறது.

பிஹாரில் நடைபெறும் ஏழுகட்டங்களில் பேகுசராய் தேர்தல் ஏப்ரல் 29-ல் நடைபெறுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x