Published : 30 Apr 2019 11:59 AM
Last Updated : 30 Apr 2019 11:59 AM
விவசாயத்தை வாழ்வியலாகக் கொண்ட நமது தேசம் உலகமயமாக்கலின் விளைவாக கொஞ்சம்.. கொஞ்சமாக விலகிக் கொண்டே வந்து கொண்டிருக்கிறது.
இதன் காணமாக நமது விவசாயத்தின் தற்சார்பு நிலை பன்னாட்டு நிறுவனங்களால் அழிக்கப்பட்டு வருவதால் விதைக்கான நமது உரிமைகளை, நமது விவசாயிகளின் சுதந்திரத்தையும் சிறிது, சிறிதாக இழந்து வருகிறோம்.
ஆம் லேஸ் சிப்ஸ் (LAYS )தயாரிப்புக்கு பயன்படுத்தப்படும் காப்புரிமை பெற்ற உருளைக்கிழங்கு ரக விதைகளை, குஜராத் விவசாயிகள் அனுமதியின்றிப் பயிரிட்டு விற்பனை செய்து வந்ததாக அம்மாநிலத்தைச் சேர்ந்த 9 விவசாயிகள் மீது பெப்சி நிறுவனம் வழக்கு தொடர்ந்துள்ளது.
லேஸ் சிப்ஸ் உருளைக்கிழங்கு விதைகளுக்கு அறிவுசார் சொத்துரிமை தங்கள் நிறுவனத்துக்கு இருப்பதால் அதைப் பயிர்செய்து நிறுவன உரிமைகளை மீறிய விவசாயிகள் நஷ்ட ஈடாக ரூ.4.2 கோடி அளிக்க வேண்டுமென்றும் பெப்சி நிறுவனம் கேட்டுள்ளது.
இந்த நிலையில் இந்த வழக்கில் ஏப்ரல் 26 வரை இந்த வகை உருளைக் கிழங்கு பயிரிடவும், விற்கவும், வளர்க்கவும் குஜராத் நீதிமன்றம் தடை விதித்து விசாரணைக் குழுவையும் அமைந்துள்ளது.
இது தொடர்பான அடுத்த விசாரணை ஜூன் 12 ஆம் தேதி நடைபெறவுள்ளது.
இந்த நிலையில் இந்த வழக்கு விவசாயிகளின் தற்சார்பு இறையாண்மைக்கு எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தது என்று இப்பதிவில் பதிவிடப்பட்டுள்ளது.
கேள்விக்குள்ளாக்கப்படும் இந்திய இறையாண்மை
: வெற்றிச்செல்வன் ( வழக்கறிஞர், பூவுலகின் நண்பர்கள் அமைப்பு )
1987- லிருந்து தொடர்ச்சியாக நடந்த காட் (GATT) ஒப்பந்த மாநாடுகளில் பின் காலங்களில்தான் உலக மயமாக்கல் பொருளாதார கொள்கைகள் உருவானது. இந்த உலகமயமாக்கல் பொருளாதார கொள்கைகள் உலகமெங்கும் வருவதற்கு காரணமாக இருந்த இந்த காட் மாநாடுகளில் ஐரோப்பிய யூனியனிலிருந்த விவசாயிகள் சார்பாக சில கோரிக்கைகள் வைக்கப்பட்டன. இந்த மாநாட்டில் பெரும் விவசாயிகளின் நலனை காப்பதற்கான சட்டங்களை உலக நாடுகள் அனைத்திலும் கொண்டுவர வேண்டும் என்ற கோரிக்கை வைக்கப்பட்டது.
அப்படி என்றால் அவர்களின் விதைகளுக்கு காப்புரிமை வழங்க வேண்டும் என்பது அதன் அடிப்படையான நோக்கம். அப்போது அதனை இந்தியா மாதிரியான மூன்றாம் நாடுகள் எல்லாம் எதிர்த்தன.
விதைகளுக்கு காப்புரிமை கொடுக்க கூடாது அவ்வாறு கொடுத்தால் விவசாயிகள் பாதிக்கப்படுவார்கள். காப்புரிமை கொடுத்துவிட்டால் யாருக்கு அதன் உரிமை இருக்கிறதோ அவர்கள் அந்த பொருட்களை உற்பத்தி செய்து விற்பனை செய்ய முடியும் என்று கூறி, காப்புரிமைக்கு பதிலாக அதற்கு நிகரான வேறொரு உரிமையை வழங்கலாம் என்று வலியுறுத்தினர். அதன்பிறகு பேச்சுவார்த்தைகள் நடைபெற்று மாற்று உரிமைகள் வழங்கப்பட்டன.
அதன்பிறகு 95 - களில் காட் மாநாட்டிலிருந்து உலக வர்த்தக அமைப்பு உருவாகியது. இதிலிருந்த அனைத்து ஒப்பந்தங்களிலும் இந்தியா கையெழுத்திட்டது. இதில் இந்தியா கையெழுத்து போட்ட ஒப்பந்தங்களை எல்லாம் சட்டமாக்க 10 ஆண்டு கால அவகாசம் அளிக்கப்பட்டது. அதன்படி 2005 க்குள் இந்தியா எதில் எல்லாம் கையெழுத்து போட்டதோ அதில் எல்லாம் சட்டமாக்க வேண்டிய தேவை இந்தியாவுக்கு இருந்தது..
உலக வர்த்தக அமைப்பில், ஒரு நாட்டிற்கும் மற்றொரு நாட்டிற்கும் வர்த்தக ரீதியான வர்த்தக உறவு எப்படி இருக்க வேண்டும், வரிகள், வர்த்தகம் சார்ந்த ஒப்பந்தங்கள் எவ்வாறு இருக்க வேண்டும் வேண்டும் போன்றவை இந்த அமைப்பில் உள்ளன. அதில் அறிவு சார் சட்டங்கள் எப்படி இருக்க வேண்டும் என்று பேசப்பட்டது. அதுதான் ட்ரிப்ஸ் ஒப்பந்தம் ( Trade-Related Aspects of Intellectual Property Rights)அதாவது வணிகம் சார்ந்த அறிவுசார் சொத்துரிமை குறித்தான ஒப்பந்தம்.
இதில் கையெழுத்திட்ட இந்தியா அதன் அறிவுசார் சொத்துரிமை சட்டங்களை மாற்றியமைக்க வேண்டும். இதன் காரணமாக இந்தியா இதனை எதிர்த்தது. இந்தியா இதனை எதிர்க்க முக்கிய காரணம் இந்தியாவின் மருத்துவ உற்பத்தியிலும், உணவு உற்பத்தியிலும் இது மிக பிரச்சனை ஏற்படுத்தும் என்று நினைத்தது.
அதுவரை இந்திய அரசு உணவு உற்பத்தியிலும், மருத்து உற்பத்தியிலும் கட்டுபாட்டுடனே காப்புரிமைகளை அளித்தது. இதில் விதைகளுக்கு காப்புரிமை வழங்குவது இல்லாமல் இருந்தது.
ஆனால் ட்ரிம்ஸ் ஒப்பந்தத்தில் இந்தியா கையெழுத்து போட்டதால் காப்புரிமைக்கு நிகரான புதிய சட்டம் கொண்டுவர தேவை ஏற்பட்டது. அப்படி கொண்டுவரப்பட்டதுதான். protection of plant variety and famers rights act இந்த சட்டத்தின்படி ஒரு செடியின் விதையை நான் எனது புதிய கண்டுபிடிப்பு என்று பதிவு செய்துவிட்டால் அந்த செடியை பயிர் செய்து விற்பனை செய்வதற்கான முழு உரிமை எனக்கு மட்டும்தான் உள்ளது.
இந்த சட்டத்தின்படி நிறைய நிறுவனங்கள் அவர்களது விதைகளை பதிவு செய்திருக்கிறார்கள். இவ்வாறுதான் பெப்சி உருளை கிழங்கு விதையை தங்களது விதை என்று பதிவு செய்து இருக்கிறார்கள். தற்போது விவசாயிகள் இந்த விதையை பயிர் செய்து விற்பனை செய்ய வேண்டும் என்றால் இதற்காக நிறுவனத்துடன் விவசாயிகள் ஒப்பந்தம் செய்து கொள்ள வேண்டும். இதை மீறி குஜராத் விவசாயிகள் செயல்பட்டிருக்கிறார்கள் என்று தான் பெப்சி நிறுவனம் விவசாயிகள் மீது வழக்கு பதிவு செய்துள்ளது.
இந்தியாவில் இம்மாதிரியாக வழக்கு வருவது இதுதான் முதல்முறை. உலகமயமாக்கலில் நாம் பயந்தபடியே விதைகளில் இந்த காப்புரிமை சட்டம் ஏக போக உரிமையாக மாறிவிடும் என்பது நடந்துவிட்டது.
தற்சாப்பு நிலையில் இருந்த விவசாயம் பசுமைப் புரட்சி காலங்களில் மாற்றியமைக்கப்பட்டது. இதில் விதையிலிருந்து உரம் வரை எல்லாவற்றையும் நீங்கள் வெளியிலிருந்துதான் வாங்க வேண்டும். இதற்கு அடுத்தக்கட்டமாக விதைகளை செயற்கையான முறையில் மரப்பணு மாற்றம் செய்து அது புதிய ரகம் என்று பதிவு செய்துவிடுகிறார்கள்.
இதை உணவு உற்பத்தியை கட்டுப்படுத்துக்கிற ஆரம்ப கட்ட நடவடிக்கையாகத்தான் இதை பார்க்கிறோம். தற்போது இந்தியாவில் இருக்கிற 90% பருத்தி, பிடி பருத்திதான்.
விவசாயிகள் அவர்களது பழைய விதைகளை இழந்துவிட்டார்கள். மண் உட்பட எல்லாம் மாறிவிட்டதால் அவர்களால் மீண்டும் பழைய விதைகளை நோக்கியும் செல்ல முடியாது. இதனால் கடனாளியாகி தற்கொலைகளையும் செய்து கொள்கிறார்கள். தற்போது கடைசியாக வழக்குகளை சந்திக்கும் நிலையில் விவசாயிகள் தள்ளப்பட்டிருக்கிறார்கள்.
இந்த வழக்கில் உள்ள சட்டப் பிரிவுகளை பார்த்தோம் என்றால் பன்னாட்டு நிறுவனங்களுக்காகத்தான் இந்த சட்டம் சாதகமாக இருக்கும். இந்த சட்டமே அவர்களுக்காகத்தானே உருவாக்கப்பட்டுள்ளது. அப்படி இருக்கையில் விவசாயிகளுக்கு எதிராகதான் தீர்ப்பு வர அதிகம் சாதகம் இருக்கிறது.
விவசாயிகள் விதைகளை பகிர்ந்து கொள்ளலாம் என்ற சட்டப் பிரிவு இருக்கிறது. ஆனால் அது பாரம்பரியான விதைகளுக்குத்தான் பிராண்டட் விதைகளுக்கு அல்ல.இதை பெப்சி இது தங்களுடைய பிராண்டட் விதைகள் என்று கூறுகிறது. ஆனால் விவசாயிகளோ இல்லை என்கிறார்கள் இதனைத்தான் நாம் விசாரிக்க வேண்டும்.
அமெரிக்காவில் இம்மாதிரியான விவசாயிகள் மீதான வழக்கு நிறைய இருக்கிறது.நாம் ஏற்கெனவே வேளாண்மையிலிருந்து, உணவு தொழிற்சாலைகளாக மாறி வருகிறோம். இது தற்போது கார்ப்ரரேட் ஆக மாறும் தன்மை ஏற்பட்டுள்ளது.
இது தொடர்ந்தால் பெப்சி போன்ற பன்னாட்டு நிறுவனங்கள் சொல்லும் விதைகளைத்தான் நீங்கள் பயிர்விக்க முடியும். நாம் நாட்டில் என்ன உணவு தயாரிக்க வேண்டும் என்பதை அவர்கள் தான் முடிவு செய்வார்கள். ஏனெனில் நாம் பாரம்பரிய விவசாய விதைகளை இழந்துவிட்டோம். பெரும்பாலான விவசாயிகள் பூசிகொல்லிக் மருந்துகள் சார்ந்த விவசாயத்துக்கு சென்றுவிட்டார்கள்.
புதிய ரக விதைகளின் அடிப்படையில்தான் விவசாயம் செய்து கொண்டிருக்கிறார்கள். இது நமது இந்திய இறையாண்மையை கேள்விக்குள்ளாக்க கூடிய விஷயம். இதைத்தான் நம்மாழ்வார் பலமுறை எச்சரித்தார். தற்போது நாம் இதனை நேரடியாக எதிர் கொள்ள இருக்கிறோம்.
இவ்வாறு வெற்றிச்செல்வன் தெரிவித்தார்.
தமிழக தற்சார்பு விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்பாளர் கி.வே.பொன்னையன் இதுகுறித்து கூறியதாவது:
விதையே பறிக்கப்பட்டப் பிறகு எங்களுக்கு என்ன சுதந்திரம் இருக்கிறது
பெப்சி ஒரு அமெரிக்க நிறுவனம். அந்த பன்னாட்டு நிறுவனம் காப்புரிமை வாங்கிவிட்டு இந்தியாவில் அதன் சொந்த நாட்டு விவசாயிகளின் விவசாயத்தை முடக்குகிறது. இதனை எப்படி ஏற்பது.
எங்களுடைய கேள்வி என்னவென்றால், மத்தியிலும், மாநிலத்திலும் தற்போது பாஜக அரசுதான் இருக்கிறது. அவர்கள் தங்களை தேச பக்தர்கள் என்றுதானே அடையாளப்படுத்திக் கொள்கிறார்கள். குஜராத் விவசாயிகள் மீது பெப்சி நிறுவனம் வழக்கு போட்டுள்ளதில் இந்த தேசபக்தர்களின் நடவடிக்கை என்ன?
இந்திய விவசாயிகளுக்கு இங்குள்ள விதைகளை வைத்து பயிர்செய்ய உரிமை இல்லை என்றால், இந்த நாட்டின் சுதந்திரம் கேள்விக்கு உள்ளாகிவிட்டது என்றுதான் உணர வேண்டி உள்ளது.
இதன் மூலம் விவசாயிகளின் இறையாண்மை பறிக்கப்பட்டிருக்கிறது. இது எப்படி ஜனநாயகமாகும். இதில் குற்றச்சாட்டப்பட்டுள்ள விவசாயிகளுக்கு ஆதரவாக விவசாயிகள் சங்கங்கள் எல்லாம் அணிதிரண்டுள்ளன. குஜராத் விவசாயிகளுக்கு ஆதரவாக 30ம் தேதி சென்னையில் ஆர்பாட்டம் நடத்தப்பட இருக்கிறது. நாங்கள் மக்களிடம் கூறுவது என்னவென்றால் பெப்சி நிறுவனங்களை மக்கள் புறக்கணிக்க வேண்டும்.
நமது நாட்டு விவசாயி உருளைக்கிழங்கை உற்பத்தி செய்து நமக்கு தருவதையே தடுக்கிறார்கள் என்றால், இந்த நாட்டின் உணவு உரிமையே அந்த பன்னாட்டு நிறுவனங்கள் பறிக்கிறது என்று தானே அர்த்தம். இதில் நாம் எந்தவகை பயிரை பயிரிட வேண்டும் என்று அவர்கள் முடிவு செய்கிறார்கள். இதன்மூலம் லேஸ் சாப்பிட வேண்டும் என்பது மறைமுகமாக கட்டாயமாக்கப்படுகிறது.
விவசாயிகளுடைய வேளாண்மை செய்யக் கூடிய இறையாண்மை என்பது விதையும், தண்ணீருமே, விதையே பறிக்கப்பட்டப் பிறகு எங்களுக்கு என்ன சுதந்திரம் இருக்கிறது. விவசாயிகளை பாதுகாப்பதற்கு குஜராத் அரசும் வரவில்லை, மத்திய அரசும் வரவில்லை. இதற்காகத்தான் அவர்களுடைய தேசபக்தியை நாங்கள் கேள்வி கேட்கிறோம். இதில் காங்கிரஸும் குரல் கொடுக்கவில்லை. இதுவரை ராகுல் காந்தி இதுபற்றி பேசவில்லை. அம்பானியையும், அதானியையும் பற்றி பேசுகிறார் ஆனால் விவசாயிகளை பற்றி பேசவில்லை.
இவை எல்லாவற்றுக்கும் பின்னணியில் உலக வர்த்தக அமைப்பு உள்ளது. இது நமது அரசியலமைப்புச் சட்டத்தை கட்டுப்படுத்துகிறது. நமது அரசியலமைப்புச் சட்டத்தை தற்போது பாதுக்காக்க வேண்டிய தேவை நமக்கு வந்துள்ளது.
அமெரிக்காவில் இம்மாதிரியான முந்தைய வழக்குகளில் பன்னாட்டு நிறுவனங்களுக்கு சாதகமாகவே தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. ஒரு ஏழை விவசாயி எப்படி கார்பரேட் கம்பெனியை எதிர்த்து வழக்கு நடத்துவான். தற்போது பாதிக்கப்பட்ட விவசாயிகளுடன் விவசாய அமைப்புகள் சேர்ந்துதான் வழக்கை அணுகி உள்ளன.
என்று தெரிவித்தார்.
இந்திய விவசாயிகள் இறையாண்மைக்கு அச்சத்தை ஏற்படுத்தியுள்ள பெப்சியின் இந்த வழக்கு வரலாற்றில் நிச்சயம் முக்கித்துவம் வாய்ந்தது. இதுவே எதிர்காலத்துக்கும் ஒரு வழிகாட்டுதலாக அமையும்.
எனவே இதனை கருத்தில் கொண்டு விவசாயிகளின் உரிமையை மீட்கப்படுமா?.. அல்லது காப்புரிமை சட்டத்துக்கு உட்பட்டு பன்னாட்டு நிறுவனத்துக்கான வெற்றியாக இருக்குமா? என்பதை பொறுந்திருந்து பார்ப்போம்...
தொடர்புக்கு: indumathy.g@thehindutamil.co.in
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT