Published : 10 Apr 2019 01:51 PM
Last Updated : 10 Apr 2019 01:51 PM
காங்கிரஸ், பகுஜன் சமாஜ்(பிஎஸ்பி)-சமாஜ்வாதி(எஸ்பி)யிடம் அலி இருந்தால், எங்களிடம் இருப்பது பஜ்ரங்பலி என உபி முதல்வர் யோகி ஆதித்யநாத் கருத்து கூறி உள்ளார். இதுபோன்ற மதவாதப் பிரச்சாரத்தை அவர் தொடர்வதாகப் புகார் எழுந்துள்ளது.
உபியின் 8 தொகுதிகளில் நாளை முதல்கட்ட வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதில் முஸ்லிம்கள் அதிகம் உள்ள சஹரான்பூரில் மாயாவதி, அகிலேஷ்சிங் யாதவ் மற்றும் அஜித்சிங் ஆகிய மெகா கூட்டணி தலைவர்கள் இரண்டு தினங்களுக்கு முன் பிரச்சாரக் கூட்டம் நடத்தி இருந்தனர்.
இங்கு பேசிய பிஎஸ்பி தலைவர் மாயாவதி, முஸ்லிம்கள் தங்கள் வாக்குகளை பிரித்து விடாமல் அவற்றை மெகா கூட்டணிக்கு அளிக்கக் கோரினார். இதை காங்கிரஸுக்கு அளித்தால் வாக்குகள் பிரிந்து வீணாகி விடும் எனவும் குறிப்பிட்டிருந்தார்.
இதற்கு பதில் அளிக்கும் வகையில் நேற்று தன் பிரச்சாரக் கூட்டத்தில் பேசிய முதல்வர் யோகி, ’காங்கிரஸ், பிஎஸ்பி-எஸ்பியிடம் இருப்பது அலி என்றால், எங்களிடம் பஜ்ரங்பலி உள்ளனர்’ எனத் தெரிவித்தார்
உபியில் முஸ்லிம்களை அலி என்றும், இந்துக்களை பஜ்ரங்பலி(அனுமர்) எனவும் குறிப்பிடுவது உண்டு. இதைத்தான் யோகி மறைமுகமாக சுட்டிக் காட்டி இருந்தார்.
இதற்கு முன் மாயாவதி, முஸ்லிம்கள் அனைவரும் தம் மெகா கூட்டணிக்கு வாக்களிக்கும்படி வேண்டினார். இதற்கு பதிலளித்து பேசிய யோகி, மீதியுள்ள இந்துக்கள் அனைவரும் பாஜகவிற்கு வாக்களிக்க வேண்டும் எனக் குறிப்பிட்டார்.
இதுபோல், யோகி தொடந்து மதவாதப் பேச்சுக்களை பிரச்சாரங்களில் பயன்படுத்துவதாக சமாஜ்வாதி அவர் மீது மத்திய தேர்தல் ஆணையத்தில் புகார் தெரிவித்துள்ளது. ’மோடிஜி கி சேனா’ என யோகி கூறியதை கண்டித்து ஆணையம் அவருக்கு கடந்த வாரம் நோட்டீஸும் அனுப்பி இருந்தது.
இது குறித்து ஒரு கூட்டத்தில் பேசிய யோகி, ‘காங்கிரஸ் தீவிரவாதிகளுக்கு பிரியாணி ஊட்டுகிறது. ஆனால், மோடியின் சேனை தீவிரவாதிகளுக்கு துப்பாகிக்தோட்டாக்களும், பீரங்கிக்குண்டுகளும் ஊட்டுகிறது. இதுதான் இருவருக்குள்ளும் வித்தியாசம்.’ எனத் தெரிவித்திருந்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT