Published : 09 Apr 2019 05:14 PM
Last Updated : 09 Apr 2019 05:14 PM
வீடற்ற குழந்தைகளுக்கு நிழல்தந்து உணவளிக்கும் தன்னலமற்ற சேவைக்கொரு முன்மாதிரியாகத் திகழும் ஒடிசாவைச் சேர்ந்த கூலித் தொழிலாளி ஷ்யாம் சுந்தர் ஜால், தனக்குப் பிறகும் இக்குழந்தைகள் மகிழ்ச்சியோடு வாழ்வார்கள் என்று நம்பிக்கைத் தெரிவிக்கிறார்.
நாம் சிலநேரங்களில் ஆதரவுகுறைவான குழந்தைகளுக்கு நம்மால் ஏதாவது நல்லது செய்யமுடியுமா? சாத்தியமா என்றெல்லாம் யோசிப்பதுண்டு. ஆனால் அதற்குள் காலம் கடந்துவிடும். ஆனால் அதை சிலர் செய்துகொண்டுதான் இருக்கிறார்கள்.
தன் அறுபது வயதுகளில் இருக்கும் ஷ்யாம்சுந்தர் ஜால், குழந்தைகளைப் பராமரிக்கும் இப்பணியை தனது சொந்த முயற்சியில் 35 ஆண்டுகளாக தொடங்கி நடத்தி வருகிறார்.
பெரிய ஆசிரமம் என்று சொல்லமுடியாது. ஆனால் அவரது அர்ப்பணிப்பு, கடும் உழைப்பு செலுத்தியும் சின்னச் சின்ன வீடுகளை கட்டி அதில் குழந்தைகளைத் தங்க வைத்திருக்கிறார். ஒருவகையில் இது ஆசிரமம்தான். அதில் 76 பெண்கள், 22 சிறுவர்கள் என மொத்தம் 98 குழந்தைகளைத் தங்கவைத்துள்ளார்.
இந்த முன்முயற்சியில் அவரது மனைவி கஸ்தூரி ஜாலின் ஆதரவும் அவருக்கு கிடைத்து வருகிறது. அவரது முதல் குழந்தைகளில் ஒருவர் ஆசிரமத்தில் தினசரி வேலைகளை சுமக்க ஆரம்பித்துள்ளார்.
தையல்காரராக சிலகாலம்
ஷ்யாம்சுந்தர் ஏஎன்ஐயுடன் பேசுகையில், ''நான் இந்த ஆசிரமத்தை என் தாயின் பெயரால் 35 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கினேன். இதைத் தொடங்கும்போது எனக்கு திருமணம் ஆகவில்லை. ஆரம்பத்தில் ஒரு வீட்டுஉதவி வேலைகளை செய்துவந்தேன்.
இக்குழந்தைகளுக்கு தொடர்ந்து உணவளிப்பதற்காக நானே தையல்காரரானேன். தற்போது இக்குழந்தைகளில் பலரும் வெவ்வேறு வயதுள்ளவர்கள். இவர்கள் வேறுவேறு பள்ளிகளில் கல்லூரிகளில் படித்து வருகிறார்கள். தற்போது பார்வை மங்கியுள்ளதால் டெய்லராக பணியாற்ற முடியவில்லை. அதனால் வேறொரு இடத்தில் மீண்டும் கூலித்தொழிலாளியாக வேலை பார்த்துவருகிறேன்.
ஆசிரமத்திற்கு அருகில் உள்ள பிரதான சாலையில் ஷ்யாம்சுந்தரின் ஒரு அறை இருக்கிறது. குழந்தைகளை வைத்திருக்க முடியாதவர்கள் அவருடைய இடத்தில் விட்டுவிட்டு போனால் போதும்; பின்னர் அக்குழந்தைகள் ஆசிரமத்திற்கு அழைத்துச் செல்லப் படுவார்கள்.
ஆரம்பத்தில் பெற்றோர்கள் குழந்தைகளை சாலையோரம், கோவில் போன்ற வெவ்வேறு இடங்களில் விட்டுவிட்டுச் சென்றுவிட்டனர். இதனால் அவர்கள் நிறைய பாதிக்கப்பட்டனர். எனவே, அவர்களுக்காக வென்று இந்த அறையை உருவாக்குவதென நாங்கள் முடிவு செய்தோம். இங்கு யார் வேண்டுமானாலும் தங்கள் குழந்தைகளை விட்டுச் செல்லலாம்.
ஆசிரமத்தில் வளர்ந்து வந்த கிட்டத்தட்ட 14 பெண்கள் மற்றும் 7 இளைஞர்கள் உரிய வயதில் அவர்களுக்கு திருமணம் செய்துவைக்கப்பட்டது. முதல்
தத்தெடுக்கப்பட்ட குழந்தையான ரஞ்சீதா ஜால் இந்த ஆசிரமத்திற்காகவே தன் வாழ்வை அர்ப்பணித்துக்கொள்ள முடிவு செய்துவிட்டார்.
முதல்குழந்தை ரஞ்சிதா
இதுகுறித்து ரஞ்சிதா தெரிவிக்கையில், ''நான் மிகவும் சிறிய வயதில் இங்கு வந்தேன். எனது குழந்தைப் பருவத்திலிருந்து இங்கு வசித்து வருகிறேன். தற்போது என் வயது 36. நாங்கள் அனைவரும் இங்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறோம்.
இதற்காகவே நான் என் வாழ்க்கையை அர்ப்பணிக்கவும் முடிவு செய்துள்ளேன். இங்கு குழந்தைப் பருவத்திலிருந்து நீண்ட நாட்களாக வளர்ந்துவந்த பல பேருக்கு மணம் முடிக்கப்பட்டுள்ளது. இங்கு யாருடனும் பிரச்சினைகள் இல்லை, நாங்கள் அனைவரும் மகிழ்ச்சியாக இருக்கிறோம்'' என்கிறார்.
காலப்போக்கில், ஷ்யாம்சுந்தர் தொடர்ந்து குழந்தைகளை தத்தெடுத்து வளர்த்ததற்கு உள்ளூர் மக்கள், நிர்வாகம், அரசாங்கம் ஆகியவற்றின் ஆதரவும் ஒரு காரணம் எனலாம்.
மேலும், வருங்காலத்தில் இதுபோன்ற குழந்தைகளுக்கு சிறப்பாக செயல்படும் தனது ஆசிரமம் மூலம் தொடர்ந்து உணவளித்துவரும் ஒரு மரபை விட்டுச்செல்வதுதான் அவரது ஆசையும்கூட.
ஆசிரமத்தின் எதிர்காலம் குறித்து பேசும்போது, ''எனக்கு 60 வயதாக இருக்கும்போதே எந்தவிதமான குறைகளும் இன்றி இந்த ஆசிரமக் குழந்தைகளுக்கு அனைத்துவிதமான வசதிகளையும் ஏற்படுத்திவிட்டேன்.
நான் இந்த உலகை விட்டுப்போனாலும் என் குழந்தைகள் எந்த சிரமமும் படமாட்டார்கள். மகிழ்ச்சியாக வாழ்வார்கள். ஏனெனில் வாழ்க்கையின் எல்லாவகையான மனிதர்களும் ஆசிரமத்திற்கு உதவிகள் பல செய்து வருகிறார்கள்.'' என்று கூறும் ஷ்யாம்சுந்தரின் கண்களில் இந்த வயதிலும்கூட தன்னலமற்ற தொண்டுள்ளம் மட்டுமே பளிச்சிட்டது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT