Published : 07 Apr 2019 12:00 AM
Last Updated : 07 Apr 2019 12:00 AM
கடந்த 1989 முதல் பாஜகவிடம் இருக்கும் மத்தியபிரதேசத்தின் தலைநகரான போபால் தொகுதி அக்கட்சிக்கு தற்போது சவாலாகி விட்டது. இங்கு கட்சியின் மூத்த தலைவர் எல்.கே.அத்வானி போட்டியிட மறுத்ததால் அவரது மகளான பிரதீபா அத்வானிக்கு கட்சி அழைப்பு விடுத்திருப்பது தெரியவந்துள்ளது.
மத்தியபிரதேச மாநிலத்தில் தொடர்ந்து மூன்றாவது முறை நீடித்த ஆட்சியை பாஜகவிடம் இருந்து பறித்துள்ளது காங்கிரஸ். எனினும், அங்கு பாஜக ஆட்சி வருவதற்கு முன்பிருந்து போபால் தொகுதி அக்கட்சியிடம் உள்ளது. எனவே, பாஜகவின் வெற்றித் தொகுதிகளில் ஒன்றாக மாநிலத் தலைநகரான போபால் அமைந்துள்ளது.
ஆனால், இங்கு மக்களவை தேர்தலில் காங்கிரஸ் சார்பில் அதன் மூத்த தலைவர் திக்விஜய்சிங் போட்டியிடுகிறார். இங்கு அவர் பெயரை முதல்வர் கமல்நாத் முன்மொழிந்த போது திஜ்விஜய் பலியாக்கப்படுவதாகக் கருதப்பட்டது. எனினும், தான் அம்மாநிலத்தின் முன்னாள் முதல்வர் என்பதால் திக்விஜய் சிங்கின் நம்பிக்கை தற்போது கூடி உள்ளது. அம்மாநிலத்தில் நிலவும் காங்கிரஸ் ஆட்சியும் திக்விஜய்சிங்கை உற்சாகப்படுத்தி உள்ளது. இதனால், அவரை தோற்கடிக்கும் விதமாக முக்கிய வேட்பாளரை பாஜக தேடி வருகிறது. போபாலில் மீண்டும் வெற்றி பெறுவது பாஜகவுக்கு சவாலாகி விட்டது.
ஏனெனில், இங்குள்ள முஸ்லிம் வாக்காளர்கள் சுமார் 3.50 லட்சம் பேரில் ஒருபகுதியினர் பாஜகவிற்கு வாக்களித்து வந்தனர். இந்தமுறை அவர்கள் முஸ்லிம்களுக்கு ஆதரவாக பேசிவரும் திக்விஜய்க்கு வாக்களிக்கும் வாய்ப்புகள் உள்ளன.
போபாலில் உள்ள ஏழு சட்டப்பேரவை தொகுதிகளில் மூன்று காங்கிரஸ் வசம் உள்ளது. இதன் இரண்டில் முஸ்லிம்கள் எம்எல்ஏக்களாக உள்ளனர். இத்துடன், சட்டப்பேரவையில் தோல்வியுறக் காரணமாக இருந்த பாஜக ஆதரவு வாக்குகளும் காங்கிரஸுக்கு செல்லும் அச்சம் பாஜகவுக்கு ஏற்பட்டுள்ளது. இதை சமாளிக்க பாஜகவின் மூத்த தலைவரான எல்.கே.அத்வானியை போபாலில் போட்டியிட வைக்க பாஜக தலைமை முயன்றது. இதற்கு அத்வானி(91), தான் குஜராத்தின் காந்திநகரை தவிர வேறு எங்கும் போட்டியிட முடியாது என மறுத்து விட்டதாகக் கூறப்படுகிறது. இதற்கு போபாலில் சிந்தி சமூகத்தின் வாக்காளர்கள் சுமார் 1.25 லட்சம் இருப்பது காரணமாகக் கருதப்படுகிறது.
இது குறித்து ’இந்து தமிழ்’ நாளேட்டிடம் மபி மாநில பாஜக நிர்வாகிகள் வட்டாரங்கள் கூறும்போது, ‘மக்களவையில் கட்சியின் தேசிய தலைவர் அமித் ஷாவை கொண்டுவருவதற்கு பாதுகாப்பான தொகுதி தேவைப்பட்டதும் அத்வானிக்கு சீட் மறுக்கப்பட்ட காரணங்களில் ஒன்று. எனினும், போபாலில் வெற்றிபெற இந்தமுறை சிந்தி வாக்குகள் உதவும் என்பதால் அந்த சமூகத்தை சேர்ந்த அத்வானியின் மகளான பிரதீபாவையாவது போட்டியிட வைக்க வலியுறுத்தப்பட்டு வருகிறது’ எனத் தெரிவித்தன.
முன்னாள் துணைப் பிரதமர் அத்வானியின் மூத்த மகளாக பிரதீபாவும், இளைய மகனாக ஜெயந்தும் உள்ளனர். இவர்களில் பிரதீபா தொலைக்காட்சிகளுக்காக பல்வேறு நிகழ்ச்சிகளை தயாரித்து வருகிறார். போபால் உள்ளிட்ட பல முக்கிய நகரங்களின் மேடைகளிலும் பலகலைநிகழ்ச்சிகளை தொகுத்துவழங்கியுள்ளார். அத்வானியின் மகள் என்பதுடன் இந்நிகழ்ச்சிகளின் மூலமாகவும் பிரதீபா போபால்வாசிகள் இடையே பிரபலம் அடைந்துள்ளார். இதன் காரணமாக, பிரதீபாவையாவது போபாலில் களம் இறக்க பாஜகமுயல்கிறது. ஆனால் இதற்குஅவர் இன்னும் சம்மதிக்கவில்லை என்பதால், மாற்று வேட்பாளரையும் பாஜக தயார் செய்து வருகிறது.
இதில், பாஜகவின் மூத்த தலைவரும் ம.பி.யின் முன்னாள் முதல்வருமான சிவராஜ்சிங் சவுகான் பெயரும் இடம் பெற்றுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT