Last Updated : 11 Apr, 2019 01:10 PM

 

Published : 11 Apr 2019 01:10 PM
Last Updated : 11 Apr 2019 01:10 PM

டெல்லியில் ஆம் ஆத்மி-காங்கிரஸ் பேச்சுவார்த்தை தோல்வி: மும்முனைப் போட்டியால் பலன்பெறும் பாஜக

டெல்லியில் ஆம் ஆத்மி மற்றும் காங்கிரஸுக்கு இடையிலான கூட்டணிப் பேச்சுவார்த்தை முடிவிற்கு வந்தது. இதில், இருவரும் தனித்தனியாகப் போட்டியிடுவது என முடிவாகி உள்ளது.

பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராக எதிர்க்கட்சிகள் ஒன்று திரண்டது முதல் ஆம் ஆத்மி-காங்கிரஸுக்கு இடையில் பேச்சுவார்த்தை தொடங்கியது. இடையில், பலமுறை முறிந்த பேச்சுவார்த்தை ஏதோ சில காரணங்களால் மீண்டும், மீண்டும் தொடர்ந்தது. இதற்கு டெல்லியில் தொடர்ந்து மூன்று முறை ஆண்ட காங்கிரஸிடம் இருந்து அதை ஆம் ஆத்மி பறித்தது காரணமானது. அருகிலுள்ள ஹரியாணா, பஞ்சாப் மற்றும் கோவாவிலும் ஆம் ஆத்மியின் வளர்ச்சி காங்கிரஸுக்குப் பாதிப்பை ஏற்படுத்தின.

மக்களவையில் கூட்டணி ஏற்பட்டால், சட்டப்பேரவையில் எதிர்த்துப் போட்டியிட முடியாது என காங்கிரஸின் முன்னாள் முதல்வர் ஷீலா தீட்சித் எதிர்ப்பு தெரிவித்தார். இவரையும் சமாளித்த ராகுல், டெல்லி காங்கிரஸ் தொண்டர்களிடம் கருத்து கேட்டு பேச்சுவார்த்தையைத் தொடர்ந்தார். இந்நிலையில், ஆம் ஆத்மிக்கு குறைந்த தொகுதிகளை ஒதுக்கி தம் தலைமையிலான கூட்டணி அமைக்க காங்கிரஸ் முயன்றது. இதை ஏற்காத ஆம் ஆத்மியின் தலைவர்கள் கூட்டணியில் சமபங்கும், டெல்லியில் அதிக தொகுதிகளும் ஒதுக்க வலியுறுத்தி வந்தன.

இதனால், முடிவிற்கு வந்த பேச்சுவார்த்தையில் இரண்டு கட்சிகளுக்கும் தோல்வியே கிடைத்தது. இதனால், பாஜக டெல்லியில் மீண்டும் பலன்பெறும் வாய்ப்புகள் உள்ளன. இது குறித்து ஆம் ஆத்மியின் மாநிலங்களவை உறுப்பினரான சஞ்சய்சிங் கூறும்போது, ''கூட்டணி அமைப்பதற்கான அனைத்து பாதைகளும் காங்கிரஸுடன் அடைக்கப்பட்டு விட்டன. காங்கிரஸ் ஒதுக்கிய தொகுதிகள் எண்ணிக்கையில் எங்களுக்கு உடன்பாடு ஏற்படவில்லை'' எனத் தெரிவித்தார்.

டெல்லியில் தனி மெஜாரிட்டியில் ஆளும் ஆம் ஆத்மிக்கு 7-ல் மூன்று தொகுதிகள் ஒதுக்கப்பட்டதை அக்கட்சி ஏற்கவில்லை. இதற்கு பஞ்சாபில் 4 எம்.பி.க்கள் இருந்தும் அங்கு ஒன்று கூட ஒதுக்க காங்கிரஸ் முன்வரவில்லை. கோவாவில் எம்எல்ஏ, எம்.பி.க்கள் இல்லை எனினும், அங்கு ஆறு சதவீதம் வாக்குகளை ஆம் ஆத்மி பெற்றிருந்தது. சட்டப்பேரவை மற்றும் 2014 மக்களவைத் தேர்தல்களில் பல தொகுதிகளில் இரண்டாம் இடமும் அக்கட்சி பெற்றிருந்தது.

இதுபோன்ற காரணங்களால் முற்றுபெற்ற பேச்சுவார்த்தை இனி தொடரும் வாய்ப்புகள் இல்லை எனக் கருதப்படுகிறது. இதன் மீதான இறுதி முடிவு எடுக்க நேற்று காங்கிரஸின் மூத்த தலைவரான அகமது பட்டேல் அம்மாநில தலைவரான ஷீலா தீட்சித்தை சந்தித்துப் பேசினார். இதிலும் கூட்டணிக்கு சாதகமான முடிவு எடுக்கப்படவில்லை. 

இந்தக் கூட்டணிக்கு டெல்லி முதல்வரும் ஆம் ஆத்மியின் தேசிய அமைப்பாளருமான அர்விந்த் கேஜ்ரிவால் வற்புறுத்தி வந்தார். இந்த இரண்டு கட்சிகளின் தனித்துப் போட்டி, பாஜகவின் வெற்றிக்கு வழிவகுக்கும் எனவும் கேஜ்ரிவால் வலியுறுத்தி வந்தார். இதற்காக அவர் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியுடனும் சந்தித்துப் பேசி இருந்தார்.

இதனிடையே, இவ்விரு கட்சிகளின் வேட்பாளர் பட்டியலுக்காக பாஜக காத்திருந்தது. இவர்கள் கூட்டணி முடிவிற்கு ஏற்றபடி தம் வேட்பாளர்களை தேர்வு செய்து அறிவிக்கவும் காத்திருந்தது. தற்போது கூட்டணியின் முடிவு தெரிந்துவிட்டதால், பாஜகவின் வேட்பாளர் பட்டியல் இன்று வெளியாகும் வாய்ப்புகள் உள்ளன. காங்கிரஸ் மற்றும் ஆம் ஆத்மி கட்சிகளின் வேட்பாளர்களும் இன்று அறிவிக்கப்படலாம்.

டெல்லியின் ஏழு தொகுதிகளும் பாஜகவின் கையில் உள்ளன. இங்கு ஒரே கட்டமாக மே 12-ல் நடைபெறவிருக்கும் தேர்தலின் முடிவுகள் மே 23-ல் வெளியாக உள்ளன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x