Published : 17 Apr 2014 12:40 PM
Last Updated : 17 Apr 2014 12:40 PM
‘வாய்ப்பு வழங்கினால் முதல்வராக மக்களுக்கு சேவை செய்வேன்' என நடிகர் பாலகிருஷ்ணா கூறியதால், தெலுங்கு தேசம் கட்சியில் குழப்பமும், சந்திரபாபு நாயுடு ஆதரவாளர்களிடையே எதிர்ப்பும் கிளம்பி உள்ளது.
தெலுங்கு தேச கட்சியின் நிறுவனர், நடிகர், ஆந்திர மாநில முன்னாள் முதல்வர் மறைந்த என்.டி ராமா ராவுக்குப் பின்னர் அக்கட்சியை வழிநடத்தி செல்பவர் சந்திரபாபு நாயுடு.
சீமாந்திரா மாநிலத்தில் தெலுங்கு தேசம் கட்சி வெற்றி பெற்றால், சந்திரபாபு நாயுடு முதல்வராக பதவி வகிக்க உள்ளார். தெலங்கானா மாநிலத்தில் தெலுங்கு தேசம் வெற்றி பெற்றால் அங்கு, பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தை சேர்ந்தவர்களுக்கு முதல்வர் பதவி வழங்கப்படும் என ஏற்கெனவே அறிவித்துள்ளார்.
இந்நிலையில், நடிகர் பால கிருஷ்ணாவுக்கு ஹிந்துபூர் சட்டமன்ற தொகுதியில் இருந்து போட்டியிட வாய்ப்பு வழங்கப் பட்டுள்ளது. இதனையொட்டி, பாலகிருஷ்ணா புதன்கிழமை காலை ஹிந்துபூர் வந்தார். வேட்பு மனு தாக்கல் செய்த பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:
எனது தந்தை என்.டி.ஆர்., சகோதரர் ஹரி கிருஷ்ணா போன் றோர் சேவை செய்த ஹிந்துபூர் தொகுதியில் இருந்து போட்டியிடுவதை பெருமையாக நினைக்கிறேன். நான் வெற்றி பெற்று, தெலுங்கு தேசத்தை ஆட்சியில் அமர வைத்தால், மாநிலத்திலேயே ஹிந்துபூர் தொகுதியை ‘நம்பர் ஒன்' தொகுதியாக கொண்டு வருவேன் என்றார்.
முதல்வர் பதவி வழங்கினால் ஏற்றுகொள்வீர்களா? என்று செய்தியாளர்கள் கேட்டபோது, வாய்ப்பு வழங்கினால் மக்களுக்கு முதல்வராக சேவை செய்வேன் என கூறினார். பாலகிருஷ்ணாவின் இந்த பேச்சால், சந்திரபாபு நாயுடுவின் ஆதரவாளர்கள் கோபமடைந்துள்ளனர். சந்திரபாபு நாயுடு இருக்கும்போது, பாலகிருஷ்ணா எப்படி முதல்வர் பதவிக்கு ஆசைப்படலாம் என பகிரங்கமாக பேசி வருகின்றனர். இதனால் தெலுங்கு தேசம் கட்சியில் குழப்பம் ஏற்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT