Published : 16 Apr 2019 07:20 PM
Last Updated : 16 Apr 2019 07:20 PM
உத்தரப் பிரதேச அமைச்சரும் சுஹல்தேவ் பாரதிய சமாஜ் கட்சியின்(எஸ்பிஎஸ்பி) தலைவருமான ஓம் பிரகாஷ் ராஜ்பர் தேசிய ஜனநாயகக் கூட்டணியில்(என்டிஏ) இருந்து விலகினார். தனித்து போட்டியிட வேண்டி உ.பி.யில் 39 வேட்பாளர்களை அறிவித்தது பாஜகவிற்கு பின்னடைவாகக் கருதப்படுகிறது.
உ.பி.யில் ராஜ்பர் எனும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான கட்சிகளில் ஒன்றாக இருப்பது எஸ்பிஎஸ்பி. கிழக்கு உ.பி.யில் செல்வாக்குள்ள இந்த கட்சி அப்பகுதியை பூர்வாஞ்சல் எனும் தனிமாநிலமாகப் பிரிக்க கோரி வருகிறது. இந்த பகுதியில் அதன் ராஜ்பர் சமூகத்தினர் சுமார் 18 சதவிகிதம் உள்ளனர். 2017-ல் சட்டப்பேரவை தேர்தலில் பாஜக தலைமையிலான என் டிஏவுடன் கூட்டணி அமைத்து எட்டு தொகுதிகளில் போட்டியிட்டது. இதில் எஸ்பிஎஸ்பி நான்கு எம்எல்ஏக்கள் பெற்றதால் அதன் தலைவரான ஓம் பிரகாஷ் ராஜ்பரை தனது கேபினேட் அமைச்சராக்கியது.
இக்கட்சிக்கு மக்களவை தேர்தலில் ஒரு தொகுதியில் தன் தாமரை சின்னத்தில் போட்டியிட பாஜக வாய்ப்பளித்தது. ஆனால், ஐந்து தொகுதிகள் கேட்டு ஓம் பிரகாஷ் ராஜ்பர் வற்புறுத்தி வந்தார். அதேசமயம், காங்கிரஸுடனும் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தி வந்தார். இவர்களிடமும் அவர் கேட்ட தொகுதிகள் கிடைக்கவில்லை. இதனால், வெறுத்துப்போன எஸ்பிஎஸ்பி தலைவர் ராஜ்பர் நேற்று முன்தினம், உபியில் தனித்து போட்டியிடுவதாக அறிவித்திருந்தார். அதன்படி நேற்று உ.பி.யின் கிழக்குப்பகுதியில் 39 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை அறிவித்துள்ளார்.
இது குறித்து ‘இந்து தமிழ்’ நாளேட்டிடம் ஓம் பிரகாஷ் ராஜ்பர் கூறும்போது, ‘எங்கள் சின்னத்தில் போட்டியிட கேட்ட இரண்டு தொகுதிகளையும் பாஜக மறுத்து விட்டது. தாமரை சின்னத்தில் போட்டியிட்டால் எங்கள் பலத்தை காட்ட முடியாது. வேறுவழியின்று தனித்து போட்டியிட முடிவு செய்துள்ளோம்.’ எனத் தெரிவித்தார்.
வேட்பாளர் அறிவிப்பிற்கு முன்பாக தனது அமைச்சர் பதவியையும் ஓம் பிரகாஷ் ராஜ்பர் ராஜினாமா செய்தார். எனினும், வேட்பாளர் அறிவிப்பில் அவரது பெயர் இடம்பெறவில்லை. பிரதமர் நரேந்திரமோடியின் வாரணாசி, உ.பி. பாஜக தலைவர் மகேந்திரநாத் பாண்டே, மத்திய அமைச்சர்களான ராஜ்நாத்சிங் மற்றும் மனோஜ் சின்ஹா, பாஜகவின் முக்கியத் தலைவர்களான ரீட்டா பகுகுணா ஜோஷி, வருண் காந்தி ஆகியோரை எதிர்த்தும் வேட்பாளர்கள் நிறுத்தப்பட்டுள்ளனர்.
இதனிடையே, பிரதமர் மோடியை எதிர்த்து போட்டியிடும் கட்சியின் பொதுச்செயலாளரும் ஓம் பிரகாஷின் மகனுமான அருண் ராஜ்பர், ‘பாஜகவுடனான கூட்டணி என்பது சட்டப்பேரவைக்கானது மட்டுமே. இது மக்களவையில் அல்ல.’ எனக் குறிப்பிட்டுள்ளார்.
எனினும், எஸ்பிஎஸ்பியின் தனித்து போட்டி, பாஜகவிற்கு பின்னடைவாக இருக்கும் எனக் கருதப்படுகிறது. அதேசமயம், அமேதி, ராய்பரேலி உள்ளிட்ட காங்கிரஸின் வெற்றித்தொகுதிகள் சிலவற்றிலும் எஸ்பிஎஸ்பி தன் வேட்பாளர்களை அறிவித்துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT