Published : 18 Apr 2019 01:01 PM
Last Updated : 18 Apr 2019 01:01 PM
உ.பி.யின் வாரணாசியில் போட்டியிடப் போவதில்லை என ‘ராவண்’ என்கிற சந்திரசேகர ஆசாத் அறிவித்துள்ளார். தலித் கட்சிகளில் ஒன்றான பீம் ஆர்மி தலைவரான அவர் தனது ஆதரவை மெகா கூட்டணி வேட்பாளருக்கு அளிப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
உ.பி.யின் மேற்கு பகுதியில் தலித் சமூகத்தின் செல்வாக்குடன் வளர்ந்து வருபவர் சந்திரசேகர ஆசாத். தனது சமூக அமைப்பான பீம் ஆர்மியை அரசியல் கட்சியாக மாற்றி இருந்தார்.
இக்கட்சியின் மூலம் உ.பி.யில் மக்களவை தேர்தலில் போட்டியிடுவதாகவும் ஆசாத் அறிவித்திருந்தார். பிறகு பிரதமர் நரேந்திர மோடியை எதிர்க்க வாரணாசியில் மட்டும் தானே போட்டியிடுவதாகவும் கூறி இருந்தார்.
ஆசாத்தின் முடிவு வாரணாசியில் தலித் சமூகத்தின் வாக்குகளை பிரிக்கும் எனவும், அவர் ஒரு பாஜகவின் முகவர் என்றும் பகுஜன் சமாஜ் தலைவி மாயாவதி புகார் கூறி இருந்தார். இதனால், தன் முடிவை மாற்றிக் கொள்வதாக ஆசாத் தெரிவித்துள்ளார்.
இது குறித்து ஆசாத் தனது அறிவிப்பில், ‘வாரணாசியில் நான் போட்டியிடப் போவதில்லை. எனது போட்டியால் பாஜக பலனடைவதையும், மோடி வெல்வதையும் நான் விரும்பவில்லை. எனது ஆதரவு அங்கு சமாஜ்வாதி, பகுஜன் சமாஜின் மெகா கூட்டணிக்கு இருக்கும்.’ எனத் தெரிவித்துள்ளார்.
தனது சமூகத்தின் தலைவரே தன்னை பாஜக முகவர் எனக் கூறும் புகார் மீதும் ஆசாத் கவலை தெரிவித்துள்ளார். மாயாவதி இந்நாட்டின் பிரதமர் ஆவதையே தான் விரும்புவதாகவும் ஆசாத் குறிப்பிட்டுள்ளார்.
பகுஜன் சமாஜின் முக்கிய தலைவரான சதீஷ் சந்திர மிஸ்ராவை வாரணாசியில் போட்டியிட வைத்தால் நிச்சயம் வெல்வார் எனவும், பிராமணரான அவருக்கு
உயர்சமூகத்தினரின் வாக்குகளும் கிடைக்கும் என்றும் ஆசாத் யோசனை கூறி உள்ளார்.
இதற்கு முன் ஏப்ரல் 14-ல் அம்பேத்கர் ஜெயந்தி அன்று பேசிய ஆசாத், தலீத் சமூகத்தின் உண்மையான காவலர்கள் பீம் ஆர்மியே தவிர, மாயாவதி அல்ல எனத் தெரிவித்திருந்தார். தற்போது அவரது கருத்தில் திடீர் மாற்றம் ஏற்பட்டுள்ளது.
உபியின் சஹரான்பூரில் ஆசாத், மெகா கூட்டணிக்கு எதிராகப் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் இம்ரான் மசூதிற்கு ஆதரவளித்திருந்ததும் நினைவுகூரத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT