Published : 16 Apr 2019 03:53 PM
Last Updated : 16 Apr 2019 03:53 PM
மாயாவதி, ஆதித்யநாத், ஆசம் கான் ஆகியோரின் பிரச்சாரத்துக்குத் தடை விதித்த தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கைக்கு உச்ச நீதிமன்றம் திருப்தி தெரிவித்துள்ளது.
அதிகாரம் இல்லை என்று கூறிய நிலையில், இப்போது அதிகாரம் கிடைத்துவிட்டதா என்று தேர்தல் ஆணையத்திடம் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகய் கேள்வி எழுப்பினார்.
உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி ஆகியோர் மத, சாதி உணர்வுகளைத் தூண்டிவிடுவதுபோல் பிரச்சாரத்தில் பேசியதாக தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பி இருந்தது.
பொதுநலன் மனு
இதுதொடர்பாக, வெளிநாடுவாழ் இந்தியரான ஹர்பிரீத் மன்சுகானி உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். அதில், "2019-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் வேட்பாளர்கள், அரசியல்வாதிகள் சாதி, மதரீதியாக மக்களிடத்தில் வெறுப்புணர்வையும், பிளவுபடுத்தும் வகையில் பேசுவதும் அதிகரித்துள்ளது.
இதைத் தடுக்க அரசியல் கட்சித் தலைவர்களுக்கு எதிராகவும், கட்சியின் வேட்பாளர்களுக்கு எதிராகவும் ஊடகங்களில் பேசினாலும், சமூக ஊடங்களில் கருத்துகள் தெரிவித்தாலும் கடும் நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்" எனத் தெரிவிக்கப்பட்டு இருந்தது.
இந்த மனு நேற்று உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது, தேர்தல் ஆணையத்தின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் அமித் சர்மா, "தேர்தல் ஆணையத்துக்கு வேறு எந்த அதிகாரமும் இல்லை. வெறுப்புணர்வோடு பேசும் வேட்பாளரைத் தகுதி நீக்கம் கூட செய்ய முடியாது. இதுதான் எங்களின் அதிகாரம்" என்று தலைமை நீதிபதி ரஞ்சன் கோகய் தெரிவித்தார்.
அதற்கு தலைமை நீதிபதி ரஞ்சன் கோகய், அடிப்படையில் தேர்தல் ஆணையம் ஒரு பல் இல்லாத அமைப்பு, மதரீதியாக, சாதிரீதியாக வெறுப்புணர்வைத் தூண்டும் வகையில் பேசுவோருக்கு எதிராக நடவடிக்கை எடுக்க அதிகாரமில்லை என்று கூறுகிறீர்கள். அடுத்த 24 மணிநேரத்துக்குள் வெறுப்புணர்வு பேச்சைப் பேசிய வேட்பாளர்களுக்கு எதிராக என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது, நடத்தை விதிமுறைகள் குறித்து தெரிவிக்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.
இந்நிலையில், இன்று காலை மீண்டும் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகய் தலைமையிலான அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. தேர்தல் ஆணையத்தின் சார்பில் மூத்த வழக்கறிஞர் சி.ஏ.சுந்தரம் ஆஜராகினார்.
மாயாவதி, ஆசம்கான் ஆதித்யநாத் ஆகியோர் தேர்தல் பிரச்சாரம் செய்யத் தடை விதித்து எடுத்துள்ள நடவடிக்கை குறித்து நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையத்தின் சார்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அப்போது, தலைமை நீதிபதி கோகய், "தேர்தல் ஆணையத்துக்கு இப்போது அதிகாரம் வந்துவிட்டது என்று நினைக்கிறோம்" எனத் தெரிவித்தார்.
அதற்கு தேர்தல் ஆணைய வழக்கறிஞர் சுந்தரம்,"தேர்தல் ஆணையம் பல்வேறு அதிகாரங்கள் இருப்பதைக் கண்டுபிடித்துவிட்டது" எனத் தெரிவித்தார்.
அதற்கு தலைமை நீதிபதி கோகய், "தேர்தல் ஆணையம் தன்னுடைய அதிகாரங்கள் என்ன என்று தெரிந்துகொண்டு விழித்துக் கொண்டுவிட்டது. தேர்தல் ஆணையம் சரியான, தகுந்த நடவடிக்கை எடுத்து அறிக்கை தாக்கல் செய்துள்ளது. ஆதலால், மேற்கொண்டு எந்த உத்தரவும் பிறப்பிக்கத் தேவையில்லை" எனத் தெரிவித்தார்.
அப்போது பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதிக்கு எதிராக தேர்தல் ஆணையம் பிறப்பித்த உத்தரவுக்கு எதிராக அவரின் வழக்கறிஞர் துஷ்யந்த் தவே மனுத்தாக்கல் செய்தார். அந்த மனுவை அவசரமாக விசாரிக்கக் கோரினார். ஆனால், அந்த மனுவை விசாரணைக்கு ஏற்க மறுத்த தலைமை நீதிபதி ஏற்கெனவே திட்டமிட்டபடி பல்வேறு வழக்குகள் இருப்பதால் விசாரிக்க முடியாது என்று தள்ளுபடி செய்துவிட்டார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT