Published : 15 Apr 2019 01:38 PM
Last Updated : 15 Apr 2019 01:38 PM
மேனகா காந்தி, யோகி ஆதித்யநாத் போன்றோரின் மக்கள் விரோத மனநிலைக்காகவே பாஜக ஆட்சி அதிகாரத்திலிருந்து தூக்கி எறியப்பட வேண்டும் எனக் கூறியுள்ளார் பகுஜன் சமாஜ் கட்சித் தலைவரும் உ.பி. முன்னாள் முதல்வருமான மாயாவதி.
பாஜகவினரின் வெறுப்புப் பிரச்சாரத்தால் உத்தரப் பிரதேச அரசியல் களம் நாளுக்கு நாள் சர்ச்சைப் பேச்சுக்களின் கூடாரமாக மாறிவருகிறது.
சுல்தான்பூரில் வேட்பாளராகக் களமிறக்கப்பட்டுள்ள மத்திய அமைச்சர் மேனகா காந்தி, முஸ்லிம்கள் தனக்கு வாக்களிக்க வேண்டும் இல்லையெனில் அவர்கள் கோரிக்கைகளை தான் புறக்கணிக்க வேண்டியிருக்கும் என்ற தொனியில் பேசியிருந்தார்.
பின்னர், பாஜக வேட்பாளர் சாக்ஷி மகாராஜ் ஒருபடி மேலே சென்று "நான் ஒரு சன்னியாசி. சாஸ்திரங்கள் சன்னியாசி யாசிப்பதைக் கொடுக்க வேண்டும் எனக் கூறுகிறது. ஒருவேளை அப்படி அவர் கேட்டும் கொடுக்காவிட்டால் அந்த சன்னியாசி தான் யாசகம் கேட்டு மறுத்த நபரின் நற்செயல் பலன்களை எடுத்துக் கொண்டு பாவத்தை திருப்பித் தருவார் என வேதங்கள் கூறுகிறது" என்று மிரட்டினார்.
அதாவது தனக்கு வாக்களிக்காவிட்டால் பாவம் சேரும் என்பதே அவர் பேச்சின் சாராம்சம்.
அந்த வரிசையில் உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத்தும் இணைந்தார். தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) பேசிய ஆதித்யநாத் "ராமரையும் கிருஷ்ணரையும் அங்கீகரிக்காதவர்கள்தான் இன்று அனுமரிடம் சரணடைகின்றனர். ஏன் மாயாவதிக்குக் கூட அனுமன் மீது நம்பிக்கை வந்திருக்கிறது" எனக் கூறினார்.
பாஜகவினரின் தொடர் சர்ச்சைப் பேச்சுகளை சுட்டிக்காட்டியுள்ள மாயாவதி தனது ட்விட்டர் பக்கத்தில், "மத்திய அமைச்சர் மேனகா காந்தியில் மிரட்டலுக்குப் பின்னர் இப்போது உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத் முஸ்லிம்களை வெளிப்படையாக மிரட்டியுள்ளார்.
எனக்கு வாக்களிக்காவிட்டால் வாழ்நாள் முழுதும் வேலைவாய்ப்பில்லாமல் இருக்க வேண்டியதுதான் என அவர் மிரட்டியுள்ளார்.
தேர்தல் ஆணையத்தின் எச்சரிக்கைகளை மீறியும் பாஜகவினர் இப்படிப் பேசுகின்றனர். இது பாஜகவின் அடங்காத்தனத்தை மட்டுமல்ல மக்கள் விரோத மனநிலையையும் காட்டுகிறது.
இந்த மனநிலைதான் வரவிருக்கும் தேர்தலில் தோற்கடிக்கப்பட வேண்டும்" என இந்தியில் பதிவு செய்துள்ளார்.
நாடு முழுவதும் மக்களவைத் தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறுகிறது. உத்தரப்பிரதேசத்தில் அனைத்து கட்டங்களிலும் தேர்தல் நடைபெறுகிறது.
உத்தரப் பிரதேசத்தின் வாக்குகள் பிரதமரைத் தீர்மானிப்பதில் பெரும் பங்கு வகிக்கிறது என்பதால் அங்கு ஆளும் பாஜக அரசு தங்கள் கட்சிக்காக சூறாவளிப் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
பிரச்சார நேரம் குறைப்பு:
இதற்கிடையில் உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத் மற்றும் மாயாவதி ஆகியோரின் பிரசார நேரத்தை குறைத்து தேர்தல் ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
தேர்தலுக்கு 72 மணி நேரத்துக்கு முன்பாக யோகி ஆதித்யநாத் பிரசாரத்தை முடிக்கவும், 48 மணி நேரத்துக்கு முன்பாக மாயாவதியும் பிரசாரத்தை முடிக்க தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT