Published : 12 Apr 2019 05:56 PM
Last Updated : 12 Apr 2019 05:56 PM
அமெரிக்காவிலிருந்து இந்தியா வந்துள்ள பெண் ஒருவர் தன்னுடன் அழைத்து வந்துள்ள நாய்க்குட்டி, பூனைக்குட்டி உள்ளிட்ட 14 செல்லப் பிராணிகள் தங்குவதற்கு இடம் கண்டுபிடிப்பதில் பல்வேறு சிரமங்களை எதிர்கொண்டு வருவதாக கூறப்படுகிறது.
தற்போது தங்கியுள்ள ஹோட்டலிலிருந்து அவரைக் காலி செய்ய முடியாமலும் ஹோட்டல் நிர்வாகம் கையைப் பிசைந்து கொண்டிருக்கிறது.
தன்னுடைய செல்லப் பிராணிகளுக்காக இடம்தேடி அலையும் பெண்ணின் பிரச்சினைதான் என்ன?
அமெரிக்கப் பெண் இந்தியாவுக்கு சுற்றிப் பார்க்க வந்துள்ளார். ஆனால் அவர் வந்து நீண்டகாலம் ஆகிவிட்டது. இந்நிலையில் குஜராத் மாநிலத்தின் அகமதாபாத் நகரில் உள்ள சில்வர் ஸ்பிரிங்ஸ் ஹோட்டலில்தான் அவர் வந்து தங்கினார். அவருடைய அறையில் ஆறு நாய்க்குட்டிகள், ஆறு பூனைக்குட்டிகள், ஒரு பெண் நாய் மற்றும் ஒரு ஆடு ஆகிய செல்லப் பிராணிகளும் தங்கின. ஆரம்பத்தில் இதில் எந்தச் சிக்கலும் இல்லை. ஆனால் போகப்போக இது பெரிய பிரச்சினையாக மாறியது.
இந்த செல்லப் பிராணிகளால் ஹோட்டலில் எல்லோருக்கும் தொல்லையாக உள்ளதாகவும் மோசமான வாசனைகள் வீசுவதாகவும் கூறி உடனடியாக செல்லப்பிராணிகளை அழைத்துக்கொண்டு இடத்தை காலி செய்யுமாறு ஹோட்டல் மேலாளர் பிரதீப் அகர்வால் அப்பெண்ணிடம் கூறினார்.
இடம் தேடிக்கொண்டிருக்கிறேன். என்றாலும் உடனடியாக காலி செய்யமுடியாது என்று அப்பெண் பதிலுக்குக் கூற சிறு பூசலே அவர்களுக்கிடையே ஏற்பட்டு வருகிறது.
இதுகுறித்து ஹோட்டல் மேலாளர் பிரதீப் அகர்வால் ஏஎன்ஐயிடம் தெரிவித்ததாவது:
''சில தினங்களுக்குமுன் ஏப்ரல் 9 அன்று அதிகாலை 3 மணி வாக்கில் அறை தேடி வந்தவருக்கு செக்யூரிட்டி ஒருவர் அவருக்கு அறை ஒதுக்கித் தந்துள்ளார். அன்று காலை வழக்கம்போல ஹோட்டலுக்கு வந்தபோது இச்செய்தி அறிந்து உடனடியாக அவரது அறைக்குச் சென்று பார்த்தேன். சகிக்கவில்லை.
உடனடியாக அறையை காலி செய்யுமாறு அப்போதே அவரிடம் சொல்லிவிட்டேன். ஆனால் அதற்கு மறுப்பு தெரிவித்த அப்பெண் ஏப்ரல் 11 வரை பணம்கட்டி அறை பதிவு செய்துள்ளேன் என்று கூறினார்.
இது தொடர்பாக நான் போலீஸை அழைக்கலாம் என்றிருந்தேன். ஆனால் நடந்ததே வேறு. அவருக்கு ஒரு அழைப்பு வந்தது. அமெரிக்க தூதரகத்தில் இருந்தா? அல்லது போலீஸில் இருந்தா என்று தெரியவில்லை.ஆனால் அகமதாபாத் நகர எல்லைக்குள் அமைந்துள்ள காக்டிபித் காவல் நிலைய ஆய்வாளர் சில மணிநேரங்களில் ஹோட்டலுக்கு வந்து சேர்ந்தார்.
சாதாரணமாக அவர் ஒரு அழைப்பில் எல்லாம் வருபவர் இல்லை. எனக்கு இதற்குப் பின்னால் ஏதோபெரிய அளவில் நடப்பது போலிருந்தது. அப்படியென்றால் அவரைத் தூதரகம்தான் அழைத்துக்கொள்ளவேண்டும். பெரிய தொல்லையாக உள்ளது.
ஆனால் இந்த நிமிடம் வரை அப்பெண்ணுக்கு எந்தவித ஏற்பாடும் செய்யவில்லை என்றுதான் தோன்றுகிறது''.
இவ்வாறு ஹோட்டல் மேலாளர் தெரிவித்தார்.
இடம் கிடைத்தால் போகமாட்டேனா?
இப்பிரச்சினை தொடர்பாக அப்பெண் ஏஎன்ஐ தொடர்புகொண்டபோது, முக்கியமாக தனது அடையாளத்தை அவர் வெளிப்படுத்த மறுத்துவிட்டார்.
''இந்தப் பெண் நாயை நான் ஜனவரி 2015-ல் உத்தரகாசியிலிருந்து மீட்டு வந்தேன். அதேபோல இந்த ஆடு எனக்கு மார்ச் 2015-ல் கிடைத்தது. எனது செல்லப்பிராணிகளை அன்போடு பார்த்துக்கொள்ளும் ஒரு நிர்வாகம் என்னை விரும்புமானால் நிச்சயம் நான் இங்கிருந்து செல்வதில் எனக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை.
இந்த என்னுடைய செல்லப் பிராணிகளைவிட்டுவிட்டு நான் எங்கும் செல்ல முடியாது. அதுமட்டுமில்லை, உதவிக்காக நான் ஒவ்வொருநாளும் முயற்சி செய்துகொண்டுதான் இருக்கிறேன்.
இப்பிரச்சினை தீர வேறு ஏற்பாடுகளையும் நான் செய்துகொண்டுதான் இருக்கிறேன்'' என்றார் அந்த அமெரிக்கப் பெண்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT