Published : 12 Apr 2019 01:15 PM
Last Updated : 12 Apr 2019 01:15 PM
அலிகர் முஸ்லிம் பல்கலைக்கழகத்தில் தலித்துகள் மற்றும் முஸ்லிம்களுக்கு இட ஒதுக்கீட்டைப் பெற்றுத் தருவோம் என உ.பி. மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் உறுதி அளித்துள்ளார். இவர் நேற்று அலிகர் நகரில் இரண்டு தேர்தல் பிரச்சாரக் கூட்டங்களில் பேசினார்.
சுமார் 150 வருடங்களுக்கு முன் உ.பி.யின் அலிகரில் சர் சையது அகமது கான் என்பவரால் அலிகர் முஸ்லிம் பல்கலைக்கழகம் தொடங்கப்பட்டது . மத்திய பல்கலைக்கழகங்களில் ஒன்றான இதற்கு அதன் சிறுபான்மை அந்தஸ்து மறுக்கப்பட்டுள்ளது. இதன் மீதான மேல்முறையீட்டு வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், உ.பி.யில் அலிகர் நகரில் மக்களவைத் தேர்தலுக்கானப் பிரச்சாரக் கூட்டத்தில் அம்மாநில முதல்வரான யோகி ஆதித்யநாத் கலந்து கொண்டார். அப்போது அவர் அலிகர் பல்கலை.யின் சிறுபான்மை அந்தஸ்தை தம் கட்சி அரசு அமைந்தால் பெற்றுத்தரும் என உறுதி அளித்தார்.
இது குறித்து யோகி கூறும்போது, ''சிறுபான்மை நிறுவன அந்தஸ்து மறுக்கப்பட்டு அலிகர் பல்கலை.யில் தலித்துகளுக்கும், முஸ்லிம்களுக்கும் இட ஒதுக்கீடு கிடைக்காமல் உள்ளது. இந்த நலிந்த பிரிவினருக்கு அதை பெற்றுத்தர நடவடிக்கை எடுப்போம்'' எனத் தெரிவித்தார்.
அயோத்தியில் பாபர் மசூதி இடிக்கப்பட்ட போது உ.பி. முதல்வராக இருந்த கல்யாண் சிங்கின் சொந்த நகரம் அலிகர். இதை நினைவுகூரும் வகையில் ராமர் கோயில் மீது முதல்வர் யோகி பேசினார். இதன் மீது யோகி, ''அலிகரில் இருந்து நான் அளிக்கும் உறுதி என்னவெனில், பாஜக அரசால் மட்டுமே அயோத்தியில் ராமர் கோயில் கட்டித்தர முடியும்'' எனத் தெரிவித்தார்.
இந்திய ராணுவத்தின் துல்லியத் தாக்குதலை தேர்தலில் பிரச்சாரம் செய்து பலன் பெறக் கூடாது என மத்திய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இதைப்பற்றி சிறிதும் கவலைப்படாத யோகி அதன் மீதும் தன் உரையில் குறிப்பிட்டார்.
இது குறித்து முதல்வர் யோகி கூறுகையில், ''ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் சீனா இந்தியாவை மிரட்டி வந்தது. ஆனால், மோடி ஆட்சி வந்ததும் அந்நாட்டை டோக்லாமில் இருந்து விரட்டி அடித்தார். இதேபோல், சர்வதேச எல்லைக்குள் புகுந்து துல்லியத் தாக்குதலை நடத்தி பாகிஸ்தானுக்கு தக்க பதிலடி கொடுத்தார் மோடி'' எனத் தெரிவித்தார்.
காங்கிரஸ் அரசில் முதல் உரிமை முஸ்லிம்களுக்கு எனக் கூறுவதாகவும் சுட்டிக்காட்டிய யோகி, தம்கட்சி அரசில் அந்த உரிமை அனைவருக்கும் சமமாகப் பிரித்து அளிக்கப்படுவதாகவும் தெரிவித்தார்.
தேர்தல் ஆணையம் நோட்டீஸ்
இதுபோன்ற பிரச்சாரம் மதவாதப் பேச்சாக இருப்பதாக யோகி மீது தேர்தல் ஆணையத்தில் தொடர்ந்து பல புகார்கள் வருகின்றன. இவர் மூன்று தினங்களுக்கு முன் சஹரான்பூரில் பேசியபோது ‘அலி’ என முஸ்லிம் மற்றும் ‘பஜ்ரங்பலி’ என இந்துக்கள் வாக்குகளையும் குறிப்பிட்டு பேசினார்.
இது விதிமீறல் எனக் கூறி மத்திய தேர்தல் ஆணையம் யோகியிடம் விளக்கம் கேட்டு நேற்று நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இதேபோல், அலிகரில் யோகி பேசியதன் மீதும் ஆணையத்திற்கு புகார் அனுப்பப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT