Last Updated : 23 Apr, 2019 12:50 PM

 

Published : 23 Apr 2019 12:50 PM
Last Updated : 23 Apr 2019 12:50 PM

உ.பி.யின் அடையாளங்களில் ஒன்றான முலாயம்சிங் யாதவ்

உ.பி. என்றதும் தவறாமல் பலரது நினைவில் வருபவர் முலாயம்சிங் யாதவ் (79). இம்மாநிலத்தின் மூன்று முறை முதல்வராக இருந்தவர் உ.பி.யின் அடையாளங்களில் ஒன்றாகி விட்டார்.

சுதந்திரம் அடைந்ததில் இருந்து நாடு முழுவதும் தொடர்ந்து வந்த காங்கிரஸ் ஆட்சியை எதிர்த்துக் குரல் கொடுத்த முக்கியமான தலைவர் ஜெயப்பிரகாஷ் நாராயண். இவரது பாதையைக் கடைப்பிடித்து வட இந்திய மாநிலங்களில் பல தலைவர்கள் உருவானார்கள். இதில், முக்கியமானவர், உ.பி.யில் இந்திய சோஷலிசக் கட்சியின் பெயரில் அரசியல் செய்து வந்த ராம் மனோகர் லோகியா. இவரது செயல்பாடுகள் மற்றும் சமூகநீதிக் கருத்துகளால் கவரப்பட்டு அரசியலில் குதித்தவர்தான் முலாயம்சிங் யாதவ்.

இவர், உ.பி.யின் எட்டாவா மாவட்டத்தின் சைஃபை எனும் கிராமத்தில் வாழ்ந்த சுகார்சிங் யாதவ் மற்றும் மூர்த்தி தேவி எனும் விவசாயத் தம்பதிக்கு மகனாக நவம்பர் 21, 1939-ல் பிறந்தவர். இரண்டாவது குழந்தையான முலாயமுடன் பிறந்தவர்கள் நான்கு சகோதரர்கள் மற்றும் ஒரு சகோதரி.

உ.பி.யின் மெயின்புரியின் ஜெயின் கல்லூரியில் எம்.ஏ,பிடி வரை படித்தவர், அதில் ஆசிரியராகவும் பணியாற்றி வந்தார். அவருக்குப் படிக்கும் போதில் இருந்து வளர்ந்த சமூக நீதி மற்றும் சமதர்ம மனப்பான்மை முலாயம் சிங்கை அரசியலில் குதிக்க வைத்தது.

இதற்கு முக்கியமான காரணமாக அமைந்தது, ராம் மனோகர் லோகியா நடத்தி வந்த 'சௌகம்பா' (நான்கு தூண்கள்) எனும் இந்தி வார மற்றும் 'மேன் கைண்ட்' எனும் ஆங்கில மாத இதழ்கள். இதைத் தொடர்ந்து படித்து வந்த முலாயம் சிங், லோகியாவின் கருத்துகளால் கவரப்பட்டார். அப்போது, குஜராத்தின் அகமதாபாத்தில் ஜெயப்பிரகாஷ் நாராயண் 1966-ல் தொடங்கி வைத்த விலைவாசி உயர்வு போராட்டத்திற்கு உ.பி.யில் தலைமை வகித்தார் ராம் மனோகர் லோகியா. இதனால், முலாயமும் இந்திய சோஷலிசக் கட்சியின் சார்பில் குதிக்க அதே வருடம் ஜூலை 12-ல் அவருக்கு முதன் முதலாக சிறை செல்ல வேண்டி வந்தது.

அதன் பிறகு தீவிர அரசியலில் குதித்து விட்ட முலாயமிற்கு அடுத்த வருடம் நாடாளுமன்றத்துடன் சேர்த்து வந்த உ.பி. சட்டப்பேரவை தேர்தலில் அதன் பலன் கிடைத்தது. இங்குள்ள, எட்டாவா பகுதி இந்திய சோஷலிசக் கட்சியின் கோட்டையாக இருந்தது.  ஆனால், அதில் உள்ள ஜஸ்வந்த் நகர் தொகுதியின் இந்திய சோஷலிசக் கட்சி எம்எல்ஏ, எந்தப் போராட்டத்திலும் கலந்து கொள்ளாமல் ஒதுங்கி இருந்தார். இவரால், அங்குள்ள சிட்டிங் எம்.பி.யான அர்ஜுன் சிங் பதோலியாவிற்கும் தோல்வி ஏற்படும் சூழல் நிலவியது.

  எனவே, அப்போது கட்சியின் உ.பி. மாநிலத் தலைவராக இருந்த சுதந்திரப் போராட்ட வீரரான கேப்டன் அப்பாஸ் அலியிடம் வந்த அர்ஜுன்சிங், இந்தமுறை ஜஸ்வந்த் நகர் தொகுதியை மிகவும் துடிப்பாக இருக்கும் இளைஞரான முலாயம் சிங்கிற்கு தரும்படிக் கோரினார்.  இதற்கு, அப்பாஸ் அலியிடம் எதிர்ப்பு தெரிவித்த அதன் எம்எல்ஏ, ‘முலாயம் சிங்கிற்கு அப்போது வாக்களிக்கும் வயதை விட இரண்டு மாதங்கள் குறைவாக உள்ளது. அவருக்கு சீட் கொடுத்தால், வேட்புமனு ரத்தாகி விடும்’ எனப் புகார் தெரிவித்தார்.

ஆனால், முலாயமின் பெயர் வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றிருந்ததால் மறுத்த அப்பாஸ் அலி, ‘வேண்டுமானால் நீ ‘டம்மி’ வேட்பாளராக மனு தாக்கல் செய்து வை. ஒருவேளை முலாயமின் மனு கேன்சலானால், நீ போட்டியிடலாம்’ என அந்த எம்எல்ஏவிடம் ஆறுதல் கூறினார்.

ஆனால், அதிர்ஷ்டவசமாக மனு ஏற்கப்பட்டு விட, தேர்தலில் போட்டியிட்ட முலாயம் சிங் அதில் வென்று இந்தியாவின் இளம் எம்எல்ஏக்களில் ஒருவரானார். இதைத் தொடர்ந்து உ.பி.யின் வெவ்வேறு தொகுதிகளில் பத்து முறை எம்எல்ஏவாகப் போட்டியிட்ட முலாயம் சிங்கிற்கு வெற்றி மட்டுமே கிடைத்தது. 

இதில், மூன்றாவது முறை எம்எல்ஏவானவருக்கு 1977-ல் முதன் முறையாக கூட்டுறவுத்துறையின் அமைச்சர் பதவி கிடைத்தது. இதன் பிறகு, இந்திய சோஷலிசக் கட்சி, ஜன்சங், ஜனநாயக காங்கிரஸ் உட்பட பல கட்சிகள் சேர்ந்து மிசா சட்டத்தின் எதிர்ப்பில் உருவான ஜனதா கட்சியின் எம்எல்ஏவாக இருந்தார் முலாயம் சிங்.

பிறகு, ராஷ்டிரிய ஸ்வயம் சேவக்கின் தலையீட்டால் ஜனதா கட்சி இரண்டாக உடைந்தது. அடுத்து சரண்சிங்கை தன் தலைவராக ஏற்றார் முலாயம் சிங். இவரது தலைமையில் உருவான லோக்தளத்தின் உ.பி. மாநிலத் தலைவராக சில மாதங்கள் இருந்தார் முலாயம். சரண்சிங் இறப்பிற்குப் பின் அக்கட்சியும் உடைய, லோக்தளம் (பி-பகுகுணா) கட்சிக்கு முலாயம் உ.பி. மாநிலத் தலைவரானார். அப்போது பகுகுணாவும் இறந்து போக, இந்த சமயத்தில் காங்கிரஸில் இருந்து வெளியேறிய வி.பி.சிங், ஜனதா தளக் கட்சியை உருவாக்கி ஒரு தேசியத் தலைவராக உருவானார்.

இதனால், லோக்தளம் ‘ஏ(அஜீத்சிங்)’ மற்றும் ‘பி(பகுகுணா)‘ ஆகிய இரண்டும் ஜனதா தளத்துடன் ஒரே கட்சியாக இணைந்தது. இதனால், வி.பி.சிங்கின் ஆதரவாளரான முலாயம் சிங், ஜனதா தளத்தின் உபி மாநிலத் தலைவராக தொடர, அதன் சார்பில் சட்டப்பேரவை எதிர்கட்சித் தலைவராகும் வாய்ப்பும் கிடைத்தது. பிறகு, 1989-ல் அதே கட்சியின் சார்பில் உ.பி.யின் முதல்வராகும் வாய்ப்பும் மூன்று வருடத்திற்காகக் கிடைத்தது. இதற்கு, மத்தியில் தேசிய முன்னணியின் சார்பில் வி.பி.சிங் பிரதமராக முக்கிய ஆதரவு தந்த பாஜகவே, முலாயம்சிங் முதல்வராகவும் காரணமாக இருந்தது.

  இந்தச் சமயத்தில், நடந்த இரண்டு முக்கிய சம்பவங்கள் முலாயம் வாழ்க்கையில் நிகழ்ந்தன. இதில் ஒன்றாக முலாயமிற்கு ஒரு புதிய எதிரியாக அஜித்சிங் உருவானார். மற்றொன்று, உ.பி.யின் முஸ்லிம் வாக்குகள் முலாயமிற்கு சாதகமாக மாறத் துவங்கின.  முலாயம் முதல்வரான போது, ‘சரண்சிங்கின் மகனான தனக்கே முதல்வர் பதவி’ என அஜித்சிங் குரல் எழுப்பியதால், நடந்த வாக்கெடுப்பில் அவருக்குத் தோல்வி  கிடைத்தது. இதனால், வெளியேறிய அஜித்சிங், ராஷ்ட்ரிய லோக் தளம் எனப் புதிதாக ஒரு கட்சியைத் தொடங்கி நடத்தி வருகிறார்.

இரண்டாவது நிகழ்வுக்கு அயோத்தி காரணமாயிற்று. அப்போது, உ.பி.யில் மிகப்பெரிய சக்தியாக உருவாகி விஹெச்பி உருவாகி இருந்தது. தம் தோழமைக்கட்சியான பாஜக ஆதரவில் மத்திய மற்றும் மாநில அரசு இருக்கும் தைரியத்தில் அக்டோபர் 30, 1990 மற்றும் நவம்பர் 20-ல் கரசேவை தொடங்கி பாபர் மசூதியை உடைக்க முயன்றது. இதைக் கடுமையாக எதிர்த்த முலாயம் சிங், அவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தி, அதைத் தடுத்து விட்டார். இதில், 12 பேர் உயிரிழந்ததை வைத்து தனது ஆதரவை வாபஸ் வாங்கியது பாஜக. இதனால், முஸ்லிம் வாகுக்குகள் முலாயமிற்கு ஆதரவாகத் திரும்பத் தொடங்கின.

அதே சமயம், மண்டல் கமிஷனால் வி.பி.சிங் ஆட்சியும் மத்தியில் கவிழ்ந்தது. மீண்டும் வந்த மக்களவைத் தேர்தலில் ராஷ்டிரிய சமாஜ்வாதி கட்சியின் தலைவர் சந்திரசேகர் பிரதமராக, உ.பி.யில் பாஜக ஆட்சி வந்தது. இதன் முதல்வராக வந்த கல்யாண்சிங் ஆட்சியில் டிசம்பர் 6, 1992-ல் பாபர் மசூதி இடிக்கப்பட்டு விட, அவரது ஆட்சி கவிழ்ந்தது. இதற்கிடையே, முஸ்லிம்களின் ஆபத்தாண்டவனாகக் கருதப்பட்ட முலாயம் சிங், இவர்களுடன் தனது யாதவர் மற்றும் பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தினரையும் சேர்த்து அரசியல் செய்ய முடிவு செய்தார். இதற்காக, லக்னோவில் அக்டோபர், 4, 1992-ல் ‘சமாஜ்வாதி’ என்ற பெயரில் ஒரு புதிய கட்சியை உருவாக்கினார்.

இதையடுத்து, முஸ்லிம்களால் ‘மவுலானா’ எனவும் செல்லமாக முலாயம் அழைக்கப்பட்டார். மறுவருடம் வந்த தேர்தலில் அவருக்கு மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சி ஆதரவளிக்க, இரண்டாவது முறையாக முதல்வரானார் முலாயம் சிங். ஆனால், இரண்டு வருடம் மட்டுமே தொடர்ந்த இந்த ஆட்சியில், சட்டம் ஒழுங்கு கெட்டு விட்டதாக காங்கிரஸ் மற்றும் பாஜக உள்ளிட்ட எதிர்கட்சிகள் கடும் புகார் எழுப்பினர். இத்துடன் முலாயமிற்கு பகுஜன் சமாஜ் (பிஎஸ்பி) தந்து வரும் ஆதரவை வாபஸ் வாங்கினால், அனைவரும் சேர்ந்து அக்கட்சியை ஆட்சியில் அமரவைப்பதாக ஆசை காட்டினர்.

இதற்கு மயங்கிய பிஎஸ்பி நிறுவனரான கன்ஷிராம் எடுத்த முடிவால் முலாயம் எடுத்த முயற்சிதான் இருகட்சிகளையும் ஜென்ம விரோதிகாளாக்கி இருந்தது. லக்னோவில் நிகழ்ந்த இது ‘கெஸ்ட் ஹவுஸ் சம்பவம்’ என அழைக்கப்படுகிறது. இதில், லக்னோவின் அரசு கெஸ்ட் ஹவுசில் தங்கியிருந்த மாயாவதியை மிரட்டி சரிக்கட்ட முடிவு செய்தார் முதல்வர் முலாயம் சிங். இதற்காக, ஜூன் 2, 1995-ல் அங்கு வந்த ரவுடி மற்றும் கிரிமினல்கள் கும்பல், மாயாவதியைக் கொல்ல முயன்றதாகவும், அதை தெரிந்து கொண்ட பிஎஸ்பியினர் அவரைக் காப்பாற்றியதாகவும் பரபரப்பாகப் பேசப்பட்டது.

எனினும், பிஎஸ்பி தன் ஆதரவை வாபஸ் பெற்றதால் மறுதினம் கன்ஷிராமிற்கு நெருக்கமான தலைவரான மாயாவதி, முதன் முறையாக உ.பி. முதல்வரானார். இந்த சம்பவத்திற்குப் பின் 1996-ல் தேசிய அரசியலிலும் ஒருகால் பதித்த முலாயம் சிங், எம்.பி. தேர்தலிலும் போட்டியிட்டு வென்றார்.

அப்போது, பிரதமராக இருந்த தேவகவுடா அமைச்சரவையில் பாதுகாப்புத்துறை அமைச்சராகவும் இரண்டு ஆண்டுகள் பதவி வகித்தார். அப்போது முதல், மாயாவதியும், முலாயம் சிங்கும் உ.பி.யின் பிரதானக் கட்சிகளாக வளர்ந்து மாறி, மாறி ஆட்சி செய்தனர்.

2012 சட்டப்பேரவை தேர்தலில் வென்ற முலாயம் தன் மகனான அகிலேஷ் சிங் யாதவை முதன்முறையாக முதல்வராக்கினார். பிறகு அகிலேஷ் கட்சி தலைவராகவும் ஆகிவிட்டதால், முலாயம் மூத்த தலைவர் என ஓரம்கட்டப்பட்டு தேசிய அரசியலுக்கு அனுப்பப்பட்டார். இதையடுத்து 2014 மக்களவைத் தேர்தலில் சமாஜ்வாதியும், பிஎஸ்பியும் படுதோல்வி அடைந்தன. அடுத்த சட்டப்பேரவை தேர்தலில் உ.பி. ஆட்சியை பாஜக தனிமெஜாரிட்டியுடன் கைப்பற்றியது.

இதனால், தேசிய அரசியலில் கூட்டணிக் கட்சிகளுக்கு வாய்ப்பு கிடைத்தால் தான் பிரதமராகலாம் என முலாயம் கண்ட கனவும் நிறைவேறவில்லை. எனினும், எதிர்க்கட்சிகள் மதிக்கும் முக்கியத் தலைவராக முலாயம் தேசிய அரசியலில் தொடர்கிறார். இந்நிலையில், உ.பி.யில் பாஜகவிற்கு எதிராக மாயாவதியுடன் கைகோத்த அகிலேஷ் உ.பி.யில் மெகா கூட்டணி அமைத்துப் போட்டியிடுகிறார். இதன் சார்பில் முலாயம் மீண்டும் மெயின்புரியில் போட்டியிடுகிறார்.

முலாயம் கண்ட பிரதமர் கனவு தற்போது மாயாவதிக்குச் சொந்தமாகி விட்டது. இதை நிஜமாக்குவதற்காக மாயாவதி 24 வருடங்களுக்குப் பின் தன் பகையை மறந்து முலாயமுடன் மெயின்புரியில் கடந்த வாரம் ஒரே மேடை ஏறி இருந்தார்.  இப்போது, 2019 தேர்தல், முடிவில் கூட்டணி ஆட்சி வந்தால் பிரதமர் ஆகலாம் என முலாயமிற்கு பதிலாக மாயாவதி காத்திருக்கிறார். அடுத்து உ.பி.யில் தன் மகன் அகிலேஷ் முதல்வரானால் போதும் என முலாயம் முடங்கி விட்டார்.

தன் குடும்ப உறுப்பினர்களை அதிக அளவில் இறக்கி இந்தியாவின் குடும்ப அரசியலில் முன்னணித் தலைவராகவும் முலாயம் விளங்குகிறார். இவரது உடன் பிறந்த சகோதரர் ஷிவ்பால்சிங் யாதவ், பலமுறை எம்எல்ஏவாக இருந்தவர். இப்போது அகிலேஷுடன் மோதலினால் தனிக்கட்சி தொடங்கி மக்களவையில் போட்டியிடுகிறார். ஒன்றுவிட்ட சகோதரர் ராம்கோபால் யாதவ் மாநிலங்களவைக்கு சமாஜ்வாதி எம்.பி.யாகி உள்ளார்.

மருமகள் டிம்பிள் யாதவும், சகோதரி மகன்களான தர்மேந்தர் யாதவ், அக்‌ஷய் யாதவும் சமாஜ்வாதி எம்.பி.க்கள். முலாயமின் கட்சியில் கடைசி வாரிசாக பெரும் பேரனான தேஜ் பிரதாப் யாதவும் எம்.பி.யாக இருக்கிறார்.

 

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x