Last Updated : 10 Apr, 2019 03:32 PM

 

Published : 10 Apr 2019 03:32 PM
Last Updated : 10 Apr 2019 03:32 PM

மக்களவைக்கு நாளை முதல்கட்ட தேர்தல்: ஆந்திராவில் இறுதிகட்ட நிலவரம்

நாடுமுழுவதும் நாளை முதல்கட்ட மக்களவைத் தேர்தல் நடைபெறும் மாநிலங்களில் ஆந்திராவும் ஒன்று. இங்கு மக்களவை தேர்தலுடன் சேர்ந்து மாநில சட்டப்பேரவைக்கும் தேர்தல் நடைபெறகிறது. 25 மக்களவைத் தொகுதிகளுக்கும், 175 இடங்களை கொண்ட மாநில சட்டப்பேரவைக்கும் ஒரே கட்டமாக நாளை தேர்தல் நடைபெறுகிறது.

கடந்த தேர்தலில் தெலுங்குதேசம், பாஜகவுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டது. தனித்து போட்டியிட்ட ஓய்எஸ்ஆர் காங்கிரஸ் இரண்டாவது  இடத்தை பிடித்தது. மத்தியில் பாஜக அரசில் தெலுங்குதேசம் இடம்பிடித்தது. மாநிலத்தில் தெலுங்குதேசம் அரசில் பாஜக அங்கம் வகித்தது.

பிரதமர் மோடி ஆந்திராவுக்கு சிறப்பு நிதி அளிக்க தவறி விட்டதாக கூறி பாஜக கூட்டணியில் இருந்து வெளியேறினார்.சந்திரபாபு நாயுடு. காங்கிரஸுக்கு எதிராக உருவான அரசியல் கட்சியான தெலுங்கு தேசம், தெலங்கானா சட்டப்பேரவைத் தேர்தலில் அந்த கட்சியுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டது. எனினும் படுதோல்வியை சந்தித்து. இந்த கசப்பான அனுபவத்தால் இருகட்சிகளும் இந்த தேர்தலில் தனித்து போட்டியிடுகின்றன.  

ஆந்திராவில் நடைபெறவுள்ள மக்களவை மற்றும் மாநில சட்டப்பேரவை தேர்தலில் ஆளும் தெலுங்குதேசம் எதிர்ப்பு அலைகளை எதிர்கொண்டு வருகிறது. எதிரணியில் ஓய்எஸ்ஆர் காங்கிரஸ் இந்த அணிக்கு வலிமையான போட்டியை கொடுக்கும்.

காங்கிரஸ் செல்வாக்கை இழந்து  விட்டது. மற்றொரு தேசியக் கட்சியான பாஜகவுக்கு இங்கு ஆதரவு தளம் இல்லை. பவன் குமாரின் ஜனசேனா பகுஜன் சமாஜ் கட்சியுடன் இணைந்து தேர்தலை சந்திக்கிறது.

எனவே ஆந்திர தேர்தல் களத்தில் பலமுனை போட்டி நிலவுகிறது. திசைக்கு ஒருபுறம் வாக்குகள் சிதறுவதால் மிக குறைவான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறும் வாய்ப்புள்ளது.

இதனால் பலமுனை போட்டி இருந்தாலும், பிரியும் வாக்குகளால் அதிகம் பயனடைவது இரண்டாவது மாநில கட்சியான ஓய்எஸ்ஆர் காங்கிரஸ் என கருத்து கணிப்புகள் கூறுகின்றன. பவன் குமார் பெருமளவு வாக்குளை பிரிப்பார் என தெரிகிறது. இதனால் மற்றவர்களின் வெற்றி தோல்வியை தீர்மானிக்கும் சக்தியாக பவன்குமார் இருப்பார். அவர் பிரிக்கும் வாக்குகளை பொறுத்து பல தொகுதிகளில் தேர்தல் முடிவுகள் மாறவும் வாய்ப்புண்டு.

தமிழகத்தை போலவே ஆந்திராவிலும்  வருமான வரித்துறையின் அதிரடி சோதனை சர்ச்சையை ஏற்படுத்தியது. மத்திய பாஜக அரசு பழிவாங்குவதாக சந்திரபாபு நாயுடு புகார் தெரிவித்துள்ளார்.

ஆந்திராவில் தேர்தல் பிரச்சாரம் முடிந்து வாக்குப்பதிவுக்கான ஏற்பாடுகளை தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வருகிறது. அமைதியான முறையில் தேர்தல் நடைபெறும் வகையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x