Published : 14 Apr 2019 08:28 AM
Last Updated : 14 Apr 2019 08:28 AM
இது.. பொதுத் தேர்தல் நேரம். ஒருசில வாக்குறுதிகள்; பலவகை வசவுகள் தாராள மாகக் கிடைக்கின்றன. ஒரு குறிப்பிட்ட, மிக முக்கியமான துறையை, அரசியல் கட்சிகள் கண்டுகொள்வதாகவே இல்லை.
‘அயல் நாடுகளில் வேலை வாய்ப்பு'!
ஆச்சரியமாக இருக்கிறது. இளைஞர் களை, அதிலும் முதன்முறை வாக்களிக்க இருக்கிறவர்களை பெரிதும் ஈர்க்கக் கூடிய ஒரு முக்கிய பிரச்சினையில், சொல்லி வைத்தாற் போல், அத்தனை தலைவர்களும் கடுமையான மவுனம் சாதிக்கிறார்கள்.
இந்தியாவில் அபாயகரமாக வளர்ந்து வருகிற வேலையில்லாப் பிரச்சினைக்கு உள்நாட்டில் மட்டுமே முழுத் தீர்வும் கிட்டி விடாது. ‘வெளிச் சந்தை' மீதும் நாம் கவனம் செலுத்தியாக வேண்டும். நமது நாட்டுப் பொருளாதார வளர்ச்சியில், அயல் நாடு சென்று சம்பாதித்து அனுப்பும் பணம், முக்கிய பங்கு வகிக்கிறது. 1960-70-களில், அரபு நாடுகளுக்குச் சென்று கடுமையாக உழைத்துத் தம் குடும்பத்தை முன்னேற்றியவர்கள் ஏராளம்.
உண்மையில், ‘வெளிநாட்டு வேலை' மூலம் வரும் ‘அந்நியச் செலாவணி' என்கிற கருத்துரு உருவாகக் காரணமாக அமைந் ததே, தமிழக, கேரள மக்கள் மேற்கொண்ட அயல் நாட்டுப் பயணங்கள்; அரபு நாட்டுப் பணிகள்தாம். இதற்கு அடுத்தபடியாக வேண்டுமானால், பஞ்சாப், குஜராத் மாநிலத் தவர், இங்கிலாந்து அமெரிக்கா, கனடா நாடுகளுக்குப் பயணித்ததைச் சொல்லலாம்.
1980-களுக்குப் பின்னர், மென்பொருள் துறையின் வளர்ச்சியினால், தென் இந்தியா வில் இருந்து, அமெரிக்கா, ஐரோப்பிய நாடு களுக்குச் செல்வோரின் எண்ணிக்கை வெகு வாக அதிகரித்தது. உலகின் எல்லா மூலை களுக்கும் சென்று, அங்குள்ள சூழ்நிலைக்கு ஏற்ப தங்களை தகவமைத்துக் கொண்டு, வெற்றியாளர்களாகத் தம்மை நிலை நிறுத்திக் கொள்கிற தமிழர்கள் உண்மை யில், தமிழகத்தை உலக அரங்கில் தலை நிமிர வைக்கின்றனர்.
நம்முடைய கலை, பண்பாடு மட்டுமன்றி, நம் நாட்டுத் தொழில் களையும் ஊக்குவிக்கிற சக்தியாக, அயல் நாடு வாழ் தமிழர்கள் விளங்குகின்றனர். மேலும், சாமானியர்கள் இடையே பொருளா தார சமமின்மை விலகுகிறபோதே, சமூகத் தில் படிந்து உள்ள சமுதாயப் பாகுபாடுகளும் மெல்ல மெல்ல களையப்படுகின்றன. சமய, சாதியக் கட்டுப்பாடுகள், இறுக்கங்களை அற்றுப் போகச் செய்வதில், அயல் நாட்டுப் பணி வாய்ப்பு, ஆரோக்கியமான காரணியாக இருக்கிறது.
அயல் நாட்டவர்க்கான வேலை வாய்ப்பு தொடர்பாக ஒரு முக்கிய நடைமுறை மாற் றத்தைக் கனடா நாட்டு அரசாங்கம் மேற் கொள்ள இருப்பதாகச் செய்திகள் தெரிவிக் கின்றன. ‘உலகளாவிய திறன் தொடரியக்கம்' (Global Talent Stream) திட்டத்தை விரை வில் செயல்படுத்த இருக்கிறது. இதன் மூலம், அறிவியல், தொழில் நுட்பக் கல்வி பயின்றவர்களுக்கு, கனடா நாட்டில் நிரந்தரப் பணி கிடைப்பதற்கான வாய்ப்புகள் கூடி இருக்கின்றன.
அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப், தான் பதவி ஏற்ற நாளில் இருந்தே ‘அமெரிக்கா முதலில்' என்கிற கொள்கையில் தீவிரம் காட்டி வருகிறார். அதாவது, தங்கள் நாட்டு வேலை வாய்ப்புகளில் அமெரிக் கருக்குப் போக எஞ்சியதுதான் பிற நாட்ட வருக்கு என்பதில் உறுதியாக நிற்கிறார்.
இந்த நிலையில்தான், அமெரிக்காவின் அண்டை நாடான கனடா, மன மகிழ்ச்சி தருகிற திட்டம் ஒன்றை முன் வைத்துள்ளது. இதற்காக நம் தலைவர்கள், கனடா அரசுக்கு, முறைப்படி நன்றி சொல்ல வேண்டும். காரணம், கனடா நாட்டு திட்டத்தினால் அதிகம் பயன் பெறப்போவது இந்தியர்தாம். அமெரிக்கா, கனடா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளில் இந்தியருக்கான வேலை வாய்ப்புகள் அதிகரிப்பு, விசா நடைமுறைகளைத் தளர்த்துதல் ஆகியன இந்திய இளைஞர்கள் நலனில் நேரடியாகத் தொடர்புடையவை. பிரான்சு, ஜெர்மனி, இத்தாலி போன்ற ஐரோப்பிய நாடுகளில் தங்கி, உயர்கல்வி பெறுகிற இந்திய மாணவர்களில் விருப்பம் உள்ளோர், அங்கேயே உடனடி வேலை வாய்ப்பு பெறவும் வழி செய்து தரலாம்.
இந்திய நிறுவனங்களுக்கு, இந்தியாவில் இருந்து செல்லும் தனி நபர்களுக்கு, ஆப்பிரிக்க நாடுகளில் நல்ல வரவேற்பு உள்ளது. ஆனாலும் நாம், உதாசீனமாக நடந்து கொள்கிறோம்.
ஆப்பிரிக்கா பற்றிய நம் பார்வை, பொதுக் கருத்து மாறுவதாக இல்லை; மாற்றுவதற்கு யாரும் முயற்சிப்பதாகவும் இல்லை. அரபு நாடுகளுடன் நமது உறவு எப்போதுமே ஆரோக்கியமாகவும் வலுவானதாகவும் இருந்து வருகிறது. அங்கு அல்லது இங்கு, ஆட்சி மாற்றம் ஏற்பட்டாலும், ராஜ்ஜிய உறவுகளில் மட்டும் ஒரு பொழுதும், எந்தப் பின்னடைவும் சிறிதளவும் ஏற்பட்டது இல்லை. வளைகுடாப் பிரதேசம், தென்னாட்டவர் மத்தியில் ஒரு நிரந்தர பணி மையமாக இருந்து, தனிநபர், குடும்பங்களின் பொருளாதார வளர்ச்சியில் பெரும் பங்கு வகிக்கிறது.
இத்தனையும் இருந்தும், அயல் நாட்டுப் பணிகள் குறித்த உறுதியான செயல் திட்டம் எதையும் இந்தப் பொதுத் தேர்தலில் எந்த கட்சியும் முன் வைக்கவில்லை. அயல் நாடுகளில் நிலவும் பணிச் சூழல், பணிக்கான உத்தரவாதம், குறைந்தபட்ச ஊதியம், உயிர், உடைமைகளுக்குப் பாதுகாப்பு முதலிய பல அம்சங்களில் நாம் எடுக்க வேண்டிய முன்னேற்பாடுகள், அரசுமுறை ஒப்பந்தங்கள், சட்ட நடவடிக்கைகள் குறித்து தீர்மானமான செயல் திட்டத்தை தலைவர்கள் இந்த நேரத்தில் விளக்கிச் சொல்லி இருக்க வேண்டும்.
இப்போதும் காலம் தாழ்ந்து விடவில்லை. இளைஞர்களின் முன்னேற்றத்தில் அக்கறை கொண்ட எல்லாருமே, எந்தெந்த வகைகளில் அயல் நாட்டு வேலைவாய்ப்புகளை அதிகரிக்கச் செய்யலாம் என்பது குறித்த தமது திட்டங்களை வெளியிடலாம்; அயல் நாடுகளில் உயர் கல்வி / வேலை வாய்ப்பு தொடர்பான தமது கொள்கை, வழிமுறைகளைத் தெளிவுபடுத்தலாம். அளவுக்கு மீறிய இலவசங்களை விடவும், பாதுகாப்பான அயல் நாட்டுக் கல்வி / பணிகளுக்கு வழிவகை செய்து தந்தாலே, இளைஞர்களின் ஆதரவு, தானாகப் பெருமளவில் கிட்டும். தலைவர்கள் சிந்திக்கட்டும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT