Published : 18 Apr 2019 02:08 PM
Last Updated : 18 Apr 2019 02:08 PM
மேற்கு வங்க மாநிலம், டார்ஜ்லிங் தொகுதி, ராய்காஞ்ச் பகுதியில் வாக்குப்பதிவை பார்வையிடச் சென்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வேட்பாளரின் கார் மீது மர்ம நபர்கள் கல்வீசியதால், கண்ணாடி நொறுங்கியது. போலீஸார் தடியடி நடத்தி கூட்டத்தினரை கலைத்தனர்.
மேலும், டார்ஜ்லிங் தொகுதியில் பல்வேறு இடங்களில் வன்முறை வெடித்ததால், போலீஸார் கண்ணீர் புகைக் குண்டுகளை வீசி வன்முறையாளர்களை விரட்டியடித்தனர்.
மக்களவைத் தேர்தலில் 2-ம் கட்ட வாக்குப்பதிவு 95 தொகுதிகளுக்கு இன்று விறுவிறுப்பாக நடந்து வருகிறது. மேற்கு வங்கத்தில் உள்ள 42 தொகுதிகளில் டார்ஜ்லிங், ராய்குஞ்ச், ஜல்பைகுரி ஆகிய 3 தொகுதிகளுக்கு இன்று தேர்தல் நடக்கிறது.
இந்நிலையில் ராய்கஞ்ச் புகுதியில் உள்ள சோப்ரா பகுதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளர் முகமது சலிம், வாக்குப்பதிவு எவ்வாறு நடக்கிறது என்பதை ஆய்வு செய்ய வந்தார். அப்போது, சோப்ரா பகுதியில் உள்ள இஸ்லாம்பூரில் வந்த போது திடீரென சாலையில் இருந்து மர்ம நபர்கள் சிலர் முகமது சலிம் கார் மீது கல்வீசி தாக்குதல் நடத்தினார்கள். இதில் அவரின் கார் கண்ணாடி உடைந்தது. வாகனத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டதாகவும் கூறப்படுகிறது.
இது குறித்து மார்க்சிஸ்ட் வேட்பாளர் முகமது சலிம் கூறுகையில், " என் வாகனம் மீது தாக்குதல் நடத்தியபின்பும் போலீஸார் வரவில்லை. வாக்குப்பதிவு மையங்களை சிலர் கைப்பற்றியுள்ளார்கள். போலீஸார் அங்கு செல்லவில்லை. மக்கள் பதற்றத்துடன் இருக்கிறார்கள்" எனத் தெரிவித்தார். அதன்பின் பாதுகாப்பாக முகமது சலிம் கட்டியின் அலுவலகத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
இதற்கிடையே பாஜகவின் டார்ஜ்லிங் தொகுதி ஒருங்கிணைப்பாளர் மனபேந்த்ரா சக்ரவர்த்தி தி இந்துவிடம்(ஆங்கிலம்) கூறுகையில், " டார்ஜ்லிங் தொகுதியில் பல்வேறு இடங்களில் பதற்றமான சூழல் நிலவுகிறது. பாஜகவின் ஏஜென்டுகளை வாக்கு மையங்களுக்கு செல்லவிடாமல் தடுக்கிறார்கள். ஆண், பெண் வாக்காளர்கள் மிரட்டப்பட்டு வாக்குப்பதிவு மையத்துக்குள்ளே வைக்கப்பட்டுள்ளனர். சோப்ரா பகுதியில் உள்ள ராய்கஞ்ச் பகுதியில் எங்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது 144, 151 மற்றும் 159 மற்றும் 189 எண் கொண்ட வாக்குப்பதிவு மையங்களை திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினர் கைப்பற்றியுள்ளனர்" எனத் தெரிவித்தார்.
ராய்கஞ்ச் பகுதியில் வன்முறை ஏற்பட்டதைத் தொடர்ந்து அங்கு போலீஸார் வன்முறையில் ஈடுபட்டவர்களை கலைக்கும் முயற்சியில் ஈடுபட்டு கண்ணீர் புகைக் குண்டுகளை வீசியும், தடியடியும் நடத்தினார்கள்.
மேலும், தேசிய சோப்ரா பகுதியில் தேசிய நெடுஞ்சாலையில் அமர்ந்து போராட்டம் நடத்தியவர்களையும் போலீஸார் தடியடி நடத்தி கலைத்தனர். இதனால் அப்பகுதியில் பதற்றமான சூழல் நிலவுகிறது. பாதுகாப்புக்காக கூடுதல் போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT