Published : 16 Apr 2019 04:47 PM
Last Updated : 16 Apr 2019 04:47 PM
நாடுமுழுவதும் மசூதிகளில் முஸ்லிம் பெண்களை அனுமதிக்கக்கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரணைக்கு உச்ச நீதிமன்றம் ஏற்றுக்கொண்டது.
மத்திய அரசு, தேசிய மகளிர் ஆணையம் உள்ளிட்ட அமைப்புகள் பதில் அளிக்க நோட்டீஸ் அனுப்ப நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
புனேவைச் சேர்ந்த முஸ்லிம் மதத்தைச் சேர்ந்த தம்பதி யாஸ்மின் ஜூபர் அகமது, ஜுபர் அகமது ஆகியோர் உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தனர். அதில், " நாடுமுழுவதும் பெண்கள் மசூதிக்குள் சென்று தொழுகை நடத்த அனுமதிக்க வேண்டும். பாலினரீதியான பாகுபாடுகள் இருக்கக் கூடாது. புனித மெக்கா நகரில் உள்ள மசூதியில் எநத விதமான பாலினபாகுபாடும் கடைபிடிக்கப்படுவதில்லை. இறைநம்பிக்கையுள்ள அனைத்து ஆண்களும், பெண்களும் ஒன்றாக இருந்து தொழுகை நடத்துகிறார்கள்.
தற்போது, பெண்கள் மசூதிகளில் ஜமாத் இ இஸ்லாமி, முஜாஹித் பிரிவைச் சேர்ந்தவர்களை மட்டும் அனுமதிக்கிறார்கள். சன்னி பிரிவில் உள்ள பெண்களுக்கு அனுமதியில்லை. மசூதிகளில் பெண்களுக்கு அனுமதி இருக்கிறது என்றபோதிலும் அவர்கள் வந்து செல்வதற்கும், தொழுகை நடத்துவதற்கும் தனிப்பாதை இருக்கிறது. ஆண்களுக்கும் தனிப்பாதை இருக்கிறது. பெண்களுக்கு இருக்கும் இந்த தடை அரசமைப்புச் சட்டம் 44பிரிவை மீறுவதாகும். சட்டவிரோதமானது, கண்ணியக்குறைவானது. இதை நீக்க வேண்டும் " எனத் தெரிவிக்கப்பட்டு இருந்தது.
இந்த மனு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் எஸ்.ஏ.போப்டே, எஸ். அப்துல் நசீர் முன்னிலையில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது சபரிமலை விவகாரத்தில் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ள காரணத்தால், இந்த மனுவை நாங்கள் விசாரணைக்கு ஏற்கிறோம்.
மனுதாரர் சமத்துவ உரிமை கேட்டு ஏதேனும் தனிமனிதர், மசூதிகளை பராமரிக்கும் மேலாண்மை செய்வோருக்கும் எதிராக மனுதாரர் மனு தாக்கல் செய்துள்ளாரா. அரசமைப்புச் சட்டப் பிரிவு14 என்பது அரசுக்கு எதிராகத்தானே தாக்கல் செய்ய முடியும்.
மசூதி அரசாங்காமா?, தேவாலயம் என்பது அரசாங்கமா?, கோயில் என்பது அரசாங்கமா?. நாங்கள் சிமெண்டால் கட்டப்பட்ட மசூதியிடம் பேசவில்லை அங்குள்ள மக்களைத்தான் குறிப்பிடுகிறோம். ஒரு மனிதருக்கு எதிராக மற்றொரு சக மனிதர் சமத்துவ உரிமையை வழங்காமல் தடுக்க முடியுமா என்று கேள்வி எழுப்பினார்.
அதற்கு வழக்கறிஞர் எதிர்ப்புத் தெரிவித்தார். அப்போது, நீதிபதிகள் அரசமைப்புச்சட்டம் பிரிவு 14ல் என்ன இருக்கிறது என்பதை படியுங்கள். நீங்கள் குறிப்பிடும் சட்டப்பிரிவு 14-ம் பிரிவு எங்களுக்குத் தெரியவில்லையே. எங்களுக்குத் தெரிந்த அந்த 14-ம்பிரிவு தொடங்கும்போதே ‘ஒரு அரசு குடிமக்களுக்கு மறுக்க முடியாது’ என்றுதான் தொடங்குகிறது. அரசிடம் இருந்து குடிமக்கள் நிவாரணம் பெற முடியும் என்று நீதிபதி போப்டே தெரிவித்தார்.
ஒரு கட்டத்தில் வழக்கறிஞர், பெண்கள் பலமுறை இமாமுக்கு கடிதம் எழுதியும் அவர்கள் அனுமதி கிடைக்கவில்லை. மசூதிக்குள் நுழைய போலீஸ் பாதுகாப்பையும் பெண்கள் கேட்டார்கள் என்று தெரிவித்தார்.
அதற்கு நீதிபதி போப்டே, " பெண்கள் வேறுயாருடைய வீட்டுக்குள் நுழைவதற்கும் விரும்பவில்லையே. அறிமுகமில்லாதவர்கள் வீட்டுக்குள் நுழைவதற்கு போலீஸ் அனுமதியை கேட்கவில்லையே, மசூதிக்குள் இருக்கும் ஆண்கள், பெண்கள் மசூதிக்குள் நுழைய விரும்பவில்லை என்றால், அது பெண்களுக்கு வழங்கும் சமத்துவ உரிமைக்கு எதிரானதுதானே. ஆதலால், அடிப்படை சமத்துவ உரிமை அரசுக்கு எதிராகத்தான் கோரமுடியும், தனிமனிதருக்கு எதிராக அல்ல" எனத் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT