Published : 02 Apr 2019 12:00 AM
Last Updated : 02 Apr 2019 12:00 AM
உ.பி.யில் மொத்தம் உள்ள 80 தொகுதிகளில் மாயாவதியின் பகுஜன் சமாஜ் (பிஎஸ்பி), அஜித் சிங்கின் ராஷ்டிரிய லோக் தளம் (ஆர்எல்டி) ஆகியோருடன் சமாஜ்வாதி கூட்டணி அமைத்து போட்டியிடுகிறது.
பிஎஸ்பிக்கு 38-ம், ஆர்எல்டிக்கு 3-ம் போக, 37 தொகுதிகள் சமாஜ்வாதிக்கு கிடைத்துள்ளன. காங்கிரஸ் தலைவர்களான ராகுல் காந்தி, சோனியா காந்திக்காக இரண்டு தொகுதிகளில் வேட்பாளர்கள் நிறுத்தப்படவில்லை. இதில் யாதவர் சமூகம் அதிகம் வசிக்கும் மெயின்புரியில் முலாயம்சிங் நேற்று வேட்பு மனு தாக்கல் செய்தார்.
அப்போது செய்தியாளர்கள், ‘மக்களவையில் இந்த முறை யாருக்கு மெஜாரிட்டி கிடைக்கும்’ என்ற கேள்வி எழுப்பினர். அதற்கு சமாஜ்வாதிக்கு எனப் பதிலளித்தார். அவருக்காக மாயாவதியும் மெயின்புரியில் ஏப்ரல் 19-ல் பிரச்சாரம் செய்ய இருப்பது குறித்து அவர் கூறும்போது, ‘‘இதைப் பற்றி மகன் அகிலேஷ் அறிவார்’’ என்றார். உங்கள் கூட்டணி வென்றால் மாயாவதி பிரதமர் ஆவாரா? எனும் கேள்விக்கு, ‘‘நான் பிரதமர் வேட்பாளர் இல்லை’’ என முலாயம் பதிலளித்தார். தான் பிரதமராவது குறித்த முடிவை மக்களவை தேர்தலுக்கு பின் எடுக்க இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
சுமார் 35 சதவிகிதம் யாதவர்கள் வசிக்கும் மெயின்புரி, முலாயம் சிங்கின் வெற்றித் தொகுதியாகக் கருதப்படுகிறது. இங்கு கடந்த எட்டு தேர்தல்களிலும் தொடர்ந்து சமாஜ்வாதி வெற்றி பெற்று வருகிறது. மெயின்புரிவாசிகளால் இன்னும்கூட ‘உபி முதல்வர்’ என்றழைக்கப்படும் முலாயம், 1996, 2004, 2009 மற்றும் 2014-ல் வெற்றி பெற்றிருந்தார். 1996-க்கு பின் பாஜகவால் மெயின்புரியில் வெல்ல முடியவில்லை. ஆசம்கரில் இந்தமுறை அகிலேஷ் போட்டியிடுகிறார்.
முலாயமின் சகோதரரான ஷிவ்பால்சிங் யாதவ் சமாஜ்வாதியில் இருந்து விலகி பிரகதிஷீல் சமாஜ்வாதி லோகியா எனும் பெயரில் புதிய கட்சி தொடங்கி உள்ளார். அருகிலுள்ள பெரோஸாபாத்தில் போட்டியிடும் ஷிவ்பால், மெயின்புரியில் வேட்பாளரை நிறுத்தவில்லை. காங்கிரஸும் இங்கு யாரையும் போட்டியிட வைக்கவில்லை. இந்தமுறை மாயாவதி கட்சியின் வாக்குகளும் கிடைக்கும் என்பதால் முலாயமின் வெற்றி உறுதியாகி விட்டது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT