Published : 30 Apr 2019 04:08 PM
Last Updated : 30 Apr 2019 04:08 PM

சாரதா சிட்பண்ட்ஸ் வழக்கு: முதலில் எங்களை திருப்திப்படுத்துங்கள்: சிபிஐ வழக்கறிஞரை கேள்வியால் துளைத்த உச்ச நீதிமன்றம்

சாரதா சிட்பண்ட்ஸ் ஊழல் வழக்கில் கொல்கத்தா முன்னாள் போலீஸ் ஆணையர் ராஜிவ் குமாரை கைது செய்யும் முன் எங்கள் கேள்விகளுக்கு பதில் அளித்து திருப்திபடுத்துங்கள் என்று சிபிஐ வழக்கறிஞரை கேள்வியால் உச்ச நீதிமன்றம் துளைத்து எடுத்தது.

ரோஸ் சிட்பண்ட்ஸ், சாரதா சிட்பண்ட்ஸ் மோசடி வழக்குகளை விசாரித்து வந்த மேற்குவங்க போலீஸ் அதிகாரி ராஜிவ் குமார், முறையாக விசாரிக்கவில்லை என வழக்குகள் சிபிஐக்கு மாற்றப்பட்டன. விசாரணை ஆவணங்களில் பல்வேறு குளறுபடிகள் இருப்பதாகவும் அது தொடர்பாக விசாரணை நடத்தப் பலமுறை சம்மன் அனுப்பியும் ராஜீவ் குமார் ஆஜராகவில்லை. கொல்கத்தா நகர போலீஸ் கமிஷனராக ராஜீவ் குமார் பணியாற்றி வந்தார். .

இந்நிலையில், கடந்த பிப்ரவரி 8-ம் தேதி ராஜிவ் குமார் இல்லத்துக்குச் சென்ற சிபிஐ அதிகாரிகள் அவரிடம் விசாரணை நடத்த முயன்றனர். ஆனால், வீட்டு வாயிலில் பாதுகாப்பில் இருந்த கொல்கத்தா போலீஸாருக்கும், சிபிஐ அதிகாரிகளுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

ஆவணங்கள் இல்லாமல் வந்திருப்பதாகக் கூறி சிபிஐ அதிகாரிகளை உள்ளே செல்ல அனுமதிக்க மறுத்தவிட்ட கொல்கத்தா போலீஸார், அவர்களை வலுக்கட்டாயமாக அழைத்துச் சென்று பின்னர் விடுவித்தனர். அதன்பின் உச்ச நீதிமன்றத்தின் உத்தரவின் பெயரில் ராஜிவ்குமார் ஷில்லாங்கில் சிபிஐ அலுவலகத்தில் ஆஜரானார். ஆனால், நீதிமன்றத்தின் அனுமதியில்லாமல் கைது செய்யக்கூடாது என்று தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில், சாராத சிட்பண்ட் வழக்கில் முக்கிய ஆதாரங்களை அழித்துவிட்டதால், ராஜிவ் குமாரை பாதுகாப்பில் எடுத்து விசாரணை நடத்த வேண்டும் எனக் கோரி சிபிஐ தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டு இருந்தது.

இந்த மனு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகய் தலைமையிலான அமர்வு முன் இன்று விசாரணைக்கு வந்தது. சிபிஐ தரப்பில் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தாவும், ராஜிவ் குமார் சார்பில் வழக்கறிஞர் இந்திரா ஜெய்சிங்கும் ஆஜராகினார்கள்.

அப்போது சிபிஐ வழக்கறிஞர் துஷார் மேத்தா வாதிடுகையில், சிபிஐ அதிகாரிகள் ஷில்லாங்கில், ராஜீவ் குமாரை விசாரிக்கும் போது, அவர் விசாரணைக்கு ஒத்துழைக்கவில்லை. மிகவும் அகங்காரத்துடன் பதில் அளித்தார். அவர் ஏராளமான ஆவணங்களை அழித்துவிட்டார் என்பதால் அவரிடம் விசாரிக்க கைது செய்வது அவசியம் " என்று தெரிவித்தார்.

அதற்கு தலைமை நீதிபதி ரஞ்சன் கோகய், " எந்தவிதமான ஆதாரங்களை மறைப்பதற்கு, அழிப்பதற்கு ராஜீவ்குமார் செயல்பட்டார் என்பதில் நாங்கள் கேட்கும் கேள்விகளுக்கு நீங்கள் பதில் அளித்து எங்களை திருப்திபடுத்துங்கள். நீங்கள் அளிக்கும் பதில் எங்களுக்கு திருப்திகரமாக இருந்தால், நீங்கள் ராஜீவ்குமாரை கைது செய்ய அனுமதி வழங்குகிறோம்.எங்களை திருப்திசெய்துவிட்டு நீங்கள் என்ன வேண்டுமானாலும் செய்யலாம்" எனத் தெரிவித்தார்.

ராஜீவ்குமார் சார்பில் ஆஜராகிய வழக்கறிஞர் இந்திரா ஜெய் சிங் வாதிடுகையில், " ராஜீவ் குமார் எந்தவகையான ஆதாரங்களை அழித்தார் என்பதற்கான சான்றுகளை வழங்குகள் என்று நீதிமன்றம் இதற்கு முன் 3 முறை சிபிஐக்கு வாய்ப்பு வழங்கிவிட்டது. ஆனால், இதுவரை வழங்கவில்லை. " எனத் தெரிவித்தார்.

அப்போது தலைமை நீதிபதி ரஞ்சன் கோகய் கூறுகையில், " ராஜீவ் குமார் தொடர்பாக சிபிஐ அளித்த ஆதாரங்கள் போதுமானதாக இல்லை. அதிகாரப்பூர்வமான ஆவணங்கள் அடிப்படையில்  எங்களுக்கு ஆதாரம் தேவை. இந்த வழக்கை விசாரிக்கும் விசாரணை அதிகாரி ஆதாரங்களை மறைக்க வேண்டும் என்று ராஜீவ் குமார் ஏதேனும் உத்தரவுகள் பிறப்பித்துள்ளார் என்பது குறித்து பிரமாணப் பத்திரங்கள் தாக்கல் செய்துள்ளீர்களா" எனக் கேள்வி எழுப்பினார்.

அதற்கு பதில் அளித்து துஷார் மேத்தா வாதிடுகையில் " மேற்குவங்கம் சாரதா சிட்பண்ட் ஊழல் வழக்கு தொடர்பாக சிறப்பு புலனாய்வு குழு அமைத்தபின் அதற்கு பொறுப்பேற்று அன்றாட பணிகளை ராஜீவ்குமார்தான் பார்த்து வந்தார். இந்த விசாரணையின்போது, வழக்கின் முக்கிய ஆதாரங்களான லேப்டாப், மொபைல்போன் ஆகியவற்றை குற்றம்சாட்டப்பட்டவர்களிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்டது. அதை மறைத்திருக்கலாம்.

சில டைரிகள் கைப்பற்றப்பட்ட நிலையில் அதில் குற்றம்சாட்டப்பட்டவர்கள் சில முக்கிய புள்ளிகளுக்கு வழங்கிய பணம் வழங்கிய விவரங்கள் இல்லை. அது குறித்து கேட்டால் தனக்கு தெரியாது என்று குமார் கூறுகிறார் " என்று தெரிவித்தார்.

அதற்கு தலைமை நீதிபதி ரஞ்சன் கோகய், " ராஜிவ் குமாருக்கும், அந்த குற்றச்சாட்டுகளுக்கும் நேரடி தொடர்பு இருக்கிறது என்று மீண்டும் கூறுகிறீர்களா. அவர் விசாரணை அதிகாரி அல்ல. விசாரணை குழுவில் ஒரு உறுப்பினர். ஆனால், நீங்களோ நேரடியாக ஆதாரங்களை மறைத்தார் என்று கூறுகிறீர்கள் " எனத் தெரிவித்தார்.

அதற்கு துஷார் மேத்தா வாதிடுகையில், " கடந்த பிப்ரவரி 3-ம் தேதி சிபிஐ அதிகாரிகள் ராஜீவ் குமாரிடம் விசாரிக்க சென்றபோது,  கொல்கத்தா போலீஸார் தாக்கினார். முதல்வர் மம்தா பானர்ஜி தர்ணாவில் ஈடுபட்டார். அப்படியென்றால், ராஜிவ்குமார் இல்லத்தில் என்ன இருந்தது, சிபிஐ அதிகாரிகளை சோதனயிட விடாமல் ஏன் கொல்கத்தா போலீஸார் தடுத்தனர்" என கேட்டார்.

அதற்கு தலைமை நீதிபதி ரஞ்சன் கோகய், " சிபிஐக்கு உண்மையிலேயே ஏதேனும் சந்தேகம் இருந்திருந்தால், ராஜிவ் குமார் வீட்டில் ஆதாரங்கள் இருக்கும் என நீங்கள் சந்தேகப்பட்டிருந்தால், ஏன் தேடுதல் வாரண்ட் நீதிமன்றத்தில் இருந்து வாங்கவில்லை. முறையான ஆதாரங்களை மே 1-ம் தேதிக்குள் தாக்கல் செய்யவேண்டும் " என்று கேட்டார்.

ராஜிவ் குமார் தரப்பில் தனக்கு எதிராக மிகப்பெரிய சதியை பாஜக தலைவர்கள் செய்கிறார்கள் என்று வாதிடப்பட்டது.

 

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x