Last Updated : 24 Apr, 2019 12:00 AM

 

Published : 24 Apr 2019 12:00 AM
Last Updated : 24 Apr 2019 12:00 AM

நீதித்துறை, அரசியல் வட்டாரத்தை உலுக்கும் தலைமை நீதிபதி மீதான புகார்

உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் மீதான பாலியல் குற்றச்சாட்டும் அது தொடர்பாக எழுந்துவரும் அரசியல் விமர்சனங்களும் நாட்டின் நீதித்துறையையே உலுக்கும் பிரச்சினையாக உருவெடுத்துள்ளது.

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் மீது அவரது இல்ல அலுவலகத்தில் பணியாற்றிய 35 வயது பெண் நீதிமன்ற அலுவலர் கடந்த வாரம் பாலியல் குற்றச்சாட்டு எழுப்பினார். இந்த விவகாரம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், கடந்த 20-ம் தேதி, தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய், நீதிபதிகள் அருண் மிஸ்ரா, சஞ்சீவ் கன்னா அடங்கிய அமர்வு கூடி இந்த விவகாரத்தை விசாரித்தது. அப் போது தலைமை நீதிபதி, ‘‘என்னு டைய 20 ஆண்டுகால நீதித் துறை பணிக்கு களங்கம் கற்பிக்கும் வகையில் இந்த குற்றச்சாட்டு கூறப்பட்டுள்ளது. எனது வங்கிக் கணக்கில் ரூ.6,80,000 மற்றும் பி.எஃப் பணம் மட்டுமே உள்ளது. என்னை பணத்தால் விலை கொடுத்து வாங்க முடியாத நிலையில், என்னையும் தலைமை நீதிபதி அலுவலகத்தையும் முடக் கும் வகையில் இந்த பாலியல் குற்றச்சாட்டு கூறப்பட்டுள்ளது. இதன்மூலம் நீதித்துறை சுதந்திரத் திற்கே ஆபத்து ஏற்பட்டுள்ளது. நான் முக்கியமான வழக்குகளை விசாரிக்க இருப்பதால் என்னை மிரட்ட இந்தப் புகார் கூறப்பட்டுள்ளது. நான் இதற்காக பயப்படாமல் எனது பணிகளை செய்வேன். இதன் பின்னணியில் மிகப்பெரிய சக்தி உள்ளது’’ என்றும் குறிப்பிட்டார்.

இந்த அமர்வு எந்த குறிப்பிட்ட உத்தரவையும் பிறப்பிக்காத நிலையில், ‘இந்த விவகாரம் நீதித் துறையின் மாண்பு தொடர்பானது என்பதால் பத்திரிகைகள் அறிவுக் கூர்மையுடன் சிந்தித்து இதுதொடர் பான செய்திகளை பிரசுரிப்பதில் கட்டுப்பாடு காக்க வேண்டும்’ என்று குறிப்பிட்டிருந்தது.

‘தனக்குத் தானே விசாரிக்கலாமா?’

இந்த விவகாரத்தின் உண்மைத் தன்மை குறித்து விசாரணை நடத்துவது ஒருபுறம் இருந்தாலும், ஒரு தலைமை நீதிபதி மீது பாலியல் குற்றச்சாட்டு வரும்போது அதுகுறித்த வழக்கை அவரே விசாரிக்கலாமா? இது சட்டத்துக்கு முரணானது இல்லையா? தன்னை நிரபராதி என்று நிரூபிக்க தலைமை நீதிபதி இருக்கையை பயன்படுத்தலாமா? என்று நாடு முழுவதும் பல்வேறு தரப்பில் கேள்வி எழுந்தது. உச்ச நீதிமன்ற பார் அசோசியேஷன் மற்றும் உச்ச நீதிமன்ற பதிவு வழக்கறிஞர்கள் சங்கம் ஆகிய இரண்டும் இந்த வழக்கை தலைமை நீதிபதி விசாரித்ததில் நீதிமன்ற நடைமுறை மீறப்பட்டுள்ளது. இதுகுறித்து தன்னிச்சையான விசாரணைக் குழு அமைத்து விசாரணை நடத்த வேண்டும் என்று கூறியிருந்தன. ஆனால், உச்ச நீதிமன்ற பணியாளர்கள் சங்கம் தலைமை நீதிபதிக்கு முழு ஆதரவு அளித்ததுடன் அவருக்கு எதிராகவும், அவரை பதவியில் இருந்து நீக்கவும் மிகப்பெரிய சதி நடப்பதாக குற்றம்சாட்டி இருந்தது.

இந்நிலையில், குஜராத் மாநில உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கத் தலைவரும் மூத்த வழக்கறிஞருமான யதின் ஓஜா, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு நேரடியாக கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். அதில், ‘‘உங்கள் வங்கிக் கணக்கில் ரூ.6,80,000 மட்டுமே இருப்பதாக குறிப்பிட்டுள்ள நீங்கள், உங்கள் மகன் மற்றும் மருமகன் ஆகியோ ரின் வருமான வரிக் கணக்கு விவரங் களை தாக்கல் செய்யத் தயாரா? இந்தியாவில் எந்த வழக்கறிஞரா லும் சம்பாதிக்க முடியாத தொகையை அவர்கள் வருமான மாக காட்டியிருப்பது எப்படி? நீங்கள் தலைமை நீதிபதியாக இல்லா விட்டால், அவர்களது வருமானத் தில் 10 சதவீதம் கூட சம்பாதித் திருக்க வாய்ப்பில்லை’’ என கடுமையான குற்றச்சாட்டுகளை மறைமுகமாக குறிப்பிட்டுள்ளார்.

இதுமட்டுமின்றி, பாலியல் புகார் குற்றம் சாட்டிய பெண் எப்படி கடந்த அக்டோபர் 3-ம் தேதி, தலைமை நீதிபதி பதவியேற்பு விழாவில் அவரது சிறப்பு அழைப்பின்பேரில் விருந்தினராக பங்கேற்க முடிந்தது. அவரது சகோதரருக்கு உச்ச நீதிமன்ற விதிகளை மீறி எப்படி பணி வழங்கப்பட்டது போன்ற கேள்விகளையும் எழுப்பியுள்ளார். மேலும், குஜராத் உயர் நீதிமன்ற நீதிபதி ஏ.ஏ.குரேஷி அங்கிருந்து மும்பை உயர் நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது, அதை எதிர்த்து வழக்கறிஞர்கள் போராட்டம் நடத்தியபோது, அவருக்கு பதவி உயர்வு அளிப்பதாக வாய்மொழியாக கூறி அதை நிறைவேற்றாதது உள்ளிட்ட சர்ச்சைக்குரிய கருத்துகளையும் தெரிவித்துள்ளார்.

ரூ.1.5 கோடி பேரம்

இந்த கடித விவகாரம் ஒருபுறம் நீதித் துறையை உலுக்கிக் கொண்டிருக்கும் நிலையில், உச்ச நீதிமன்ற வழக்கறிஞர் உத்சவ் பெயின் என்பவர் தனது முகநூல் பதிவில், ‘தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய்க்கு எதிராக பாலியல் விவகாரத்தை எடுத்து நடத்த என்னிடம் தரகர் ஒருவர் பேரம் பேசினார்’ என்று புதிய சர்ச்சையை கிளப்பிவிட்டுள்ளார். ‘நான் இந்த வழக்கை எடுக்கத் தயங்கியபோது, எனக்கு ரூ.1.5 கோடி வரை தருவதற்கு அவர் பேரம் பேசினார். தலைமை நீதிபதிக்கு எதிராக அவரது தீர்ப்பால் பாதிக்கப்பட்ட கார்ப்பரேட் நிறுவனங்களின் சதி இருப்பதாக சந்தேகிக்கிறேன்’ என்றும் குறிப்பிட்டுள்ளார்.

பாலியல் விவகாரத்தில் அடுத்தடுத்து தொடர் சர்ச்சைகள் எழுந்துள்ளதால், இந்த விவகாரத் தில் அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து முடிவு செய்யும்படி இரண் டாவது மூத்த அந்தஸ்தில் உள்ள நீதிபதி எஸ்.ஏ.பாப்தேயிடம் தலைமை நீதிபதி கேட்டுக் கொண் டுள்ளார். அவரது உத்தரவின்படி, நீதிபதிகள் அருண் மிஸ்ரா, ரோஹின்டன் நாரிமன், தீபக் குப்தா ஆகியோர் அடங்கிய அமர்வு நேற்று கூடி, வழக்கறிஞர் உத்சவ் பெயின் வெளியிட்டுள்ள தகவலை தாமாக முன்வந்து வழக்காக எடுத்துக் கொண்டுள்ளது. அவர் கூறியுள்ள ரூ.1.5 கோடி பேரம் உள்ளிட்ட தகவல்களுக்கான ஆதாரங்களை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யும்படி கேட்டு, நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளது. இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட உள்ளது.

நாட்டின் உயர்ந்த பதவிகளில் ஒன்றான உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பதவியில் உள்ள ஒருவர் மீது எழுந்துள்ள குற்றச்சாட்டும், அதில் இணைத்து பேசப்படும் அரசியல் பின்னணிகளும் நாடு முழுவதும் நீதித் துறை, அரசியல் வட்டாரம் மற்றும் பொதுமக்கள் மத்தியில் பல்வேறு விவாதங்களை ஏற்படுத்தியுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x