Published : 22 Apr 2019 01:42 PM
Last Updated : 22 Apr 2019 01:42 PM
அரசியலில் எதுவும் நிலையானது அல்ல; சவால்களை சந்தித்தே ஆக வேண்டும் என காங்கிரஸ் கட்சியின் கிழக்கு டெல்லி தொகுதி வேட்பாளர் ஷீலா தீட்சித் கூறியுள்ளார்.
மேலும் டெல்லிக்கு மாநில அந்தஸ்து வழங்க நாடாளுமன்றத்தால் மட்டுமே முடியும் எனவும் கூறியுள்ளார்.
டெல்லியில் 7 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக மே 12-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இந்நிலையில் காங்கிரஸ் கட்சி இன்று திங்கள்கிழமை 6 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை அறிவித்தது. தெற்கு டெல்லி வேட்பாளர் மட்டும் இன்னும் அறிவிக்கப்படவில்லை.
இந்நிலையில், கிழக்கு டெல்லி வேட்பாளராக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் டெல்லி முன்னாள் முதல்வருமான ஷீலா தீட்சித் போட்டியிடுகிறார்.
வேட்பாளராக அறிவிக்கப்பட்ட பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், "எனக்கு அளிக்கப்பட்டுள்ள பொறுப்பை நான் சிறப்பாக செய்வேன். கிழக்கு டெல்லியில் இருந்து நான் ஏற்கெனவே போட்டியிட்டிருக்கிறேன்.
இங்குள்ள மக்களுக்கு என்னை நன்றாகத் தெரியும். மெட்ரோ சேவையை இங்கிருந்துதான் தொடங்கினோம். மக்களுக்குப் பணியாற்றியே பெயர் சம்பாதித்து வைத்திருக்கிறோம்.
டெல்லிக்கு மாநில அந்தஸ்து வேண்டும் என்று ஆம் ஆத்மி கட்சி கோரி வருகிறது. எங்கள் ஆட்சிக்காலத்தில் நாங்களும் இதற்காக முயற்சி செய்திருக்கிரோம். இந்த விஷயத்தில் அழுத்தத்தால் வெற்றி காண முடியாது. நாடாளுமன்றம் இதுதொடர்பாக முடிவு செய்ய வேண்டும். நாடாளுமன்றம் இவ்விவகாரத்தை கிடப்பில் போடும்வரை எதுவும் நடக்காது.
பாஜக, ஆம் ஆத்மி கட்சிகளை எதிர்த்துப் போராட வேண்டியிருக்கிறது. அரசியலில் எதுவும் நிலையானது அல்ல. சவால்களை எதிர்கொண்டே ஆக வேண்டும்" என்று கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT