Published : 29 Apr 2019 01:40 PM
Last Updated : 29 Apr 2019 01:40 PM

ரஃபேல் தீர்ப்பு விவகாரம்: பாஜக எம்.பி. அவமதிப்பு வழக்கிற்கு எதிராக ராகுல் காந்தி பிரமாணப் பத்திரம் தாக்கல்

ரஃபேல் வழக்கின் தீர்ப்பை தவறாக தெரிவித்தது தொடர்பாக பாஜக எம்.பி. தொடர்ந்த அவமதிப்பு வழக்கில், நீதிமன்றம் அளித்த நோட்டிஸூக்கு ராகுல் காந்தி சார்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

28 பக்கங்கள் கொண்ட அந்த பதில் மனுவில், 'சவுகிதார் சோர் ஹே'(காவலாளி திருடன்) என்ற வார்த்தை அரசியலோடு தொடர்புடைய வார்த்தை. இந்த வார்த்தையை எந்தவிதமான உள்நோக்கமும் இன்றிதான் பயன்படுத்தினேன் என்று கூறி ராகுல் காந்தி வருத்தம் தெரிவித்துள்ளார். ஆனால், மன்னிப்பு கோருகிறேன் என்ற வார்த்தையை இந்த முறையும் ராகுல்  பயன்படுத்தவில்லை.

ராகுல் காந்தி சார்பில் இன்று தாக்கல் செய்யப்பட்ட விளக்க மனு, ஏற்கெனவே அளித்த விளக்கத்தைப் போன்று, நகல் எடுக்கப்பட்டதாக இருந்ததே தவிர புதிதாக ஏதும். சூழல்நிலை காரணமாகவும், தேர்தல் பரபரப்பில் இருந்ததால்தான் பேசினேன் எனத் தெரிவித்துள்ளார்.

சர்ச்சையான கருத்து

ரஃபேல் போர் விமான ஒப்பந்தம் தீர்ப்பு குறித்த சீராய்வு மனு வழக்கில் கடந்த 10-ம் தேதி உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. அமேதியில் வேட்புமனுத் தாக்கல் செய்துமுடித்துவிட்டு வந்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியிடம் ரஃபேல் ஒப்பந்தத் தீர்ப்பு குறித்து நிருபர்கள் கேள்வி எழுப்பினார்கள். அதற்கு பதில் அளித்த ராகுல் காந்தி, "காவலாளி என கூறிக் கொள்பவர் திருடன் என்று நீதிமன்றமே கூறிவிட்டது" என்று தெரிவித்தார்.

அவமதிப்பு வழக்கு

நீதிமன்றத்தின் உத்தரவை தனக்கு ஏற்றார்போல் ராகுல் காந்தி பேசியது, தேசிய நாளேடுகளிலும், தொலைக்காட்சிகளிலும் வெளியானது. இதனால், பாஜகவைச் சேர்ந்தவரும், டெல்லி எம்.பி.யுமான மீனாட்சி லெகி, உச்ச நீதிமன்றத்தில் ராகுல் காந்திக்கு எதிராக கிரிமினல் அவமதிப்பு வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த மனு தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், நீதிபதிகள் தீபக் குப்தா, சஞ்சீவ் கண்ணா  தலைமையிலான அமர்வு முன் கடந்த 15-ம் தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் தாங்கள் ராகுல் காந்தி கூறிய கருத்துகளைப் போல் ஏதும் கூறவில்லை. ராகுல் காந்தி தனதுபேச்சுக்குக்கு உரிய விளக்கத்தை 23-ம் தேதிக்குள் அளிக்க உத்தரவிட்டிருந்தனர்.

ராகுல் விளக்கம்

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி சார்பில் உச்ச நீதிமன்றத்தில் அளிக்கப்பட்ட விளக்கத்தில், " ரஃபேல் வழக்கில் நீதிமன்றத் தீர்ப்பின்போது பிரச்சாரத்தில் இருந்தபோது பேசிவிட்டேன். ஆனால், தீர்ப்பின் சாரம்சம் தெரியாமல் பேசிய என்னுடைய வார்த்தைகளை எதிர்க்கட்சிகள் தவறாகப் பயன்படுத்திக் கொண்டன. நீதிமன்றத்தின் உத்தரவுகளை, மாண்புகளை மதிக்காத வகையில் செயல்பட வேண்டும் என்ற எந்த உள்நோக்கமும் எனக்கு இல்லை. என்னுடைய வார்த்தைகள் தவறாக அர்த்தம் கொள்ளப்பட்டவைக்கு நான் வருத்தம் தெரிவிக்கிறேன்" எனத் தெரிவித்தார்.

ஆனால், இந்த விளக்கத்தை ஏற்க மறுத்த தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், நீதிபதிகள் தீபக் குப்தா, சஞ்சய் கண்ணா தலைமையிலான அமர்வு ராகுல் காந்திக்கு அவமதிப்பு நோட்டீஸ் வழங்க உத்தரவிட்டனர்.

நாளை விசாரணை

30-ம் தேதி(நாளை) இந்த வழக்கு மீண்டும் விசாரிக்கப்படும். அப்போது, கடந்த டிசம்பர் 14-ம் தேதி அளிக்கப்பட்ட ரஃபேல் தீர்ப்புக்கு எதிரான சீராய்வு மனுவுடன் இந்த வழக்கும் சேர்த்து விசாரிக்கப்படும் என நீதிபதிகள் தெரிவித்தனர்.

இந்நிலையில் ராகுல் காந்தி சார்பில் இன்று 28 பக்கங்கள் கொண்ட விளக்க மனு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில் புதிதாக எந்த விஷயங்களும் சேர்க்கப்படவில்லை, முதல்முறையாக தாக்கல் செய்த விளக்கத்தில் குறிப்பிட்டுள்ளதையே ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

பிரமாணப்பத்திரம்

குறிப்பாக, தன்னுடைய விளக்கத்தில் ராகுல் காந்தி, " நீதிமன்றம் அளித்த தீர்ப்பு, தெரிவித்த கருத்துக்கள், கண்டுபிடிப்புகள் தொடர்பாக பொதுக்கூட்டங்களிலோ, ஊடங்களிலோ நான் பேசும்போது அது குறித்து விமர்சித்து பேசும் குணம் படைத்தவர் அல்ல. ரஃபேல் விமானங்கள் தொடர்பா 'சவுகிதார் சோர் ஹே' எனும் வார்த்தையை காங்கிரஸ் கட்சி பலமாதங்களாக தேர்தல் பிரச்சாரமாக பயன்படுத்தி வருகிறது.

மக்களவைத் தேர்தலில் இந்த வார்த்தை ஆழ்ந்த, கட்டுப்படுத்த முடியாத விவாதங்களை ஏற்படுத்தி இருக்கிறது. நான் தெரிவித்த கருத்துக்களை எதிர்க்கட்சிகள் துரதிருஷ்டமாக தவறாக ஒப்பீடு செய்து பயன்படுத்துகிறார்கள். அரசியல் ஆதாரம் தேடுகிறார்கள்.

நான் தெரிவித்த கருத்து என்பது என்னிடம் ஊடகங்கள், காங்கிரஸ் கட்சியினர், தொண்டர்கள், என்னைச் சுற்றியிருந்தோர் தெரிவித்த செய்தியின் அடிப்படையில்தான் பேசினேன். ரஃபேல் விவகாரம் குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று நாங்கள் கோரிக்கை விடுத்துவரும் நிலையில் அதற்கு சாதகமாக தீர்ப்பு கிடைத்தவுடன் வெற்றியின்பால் வரும் வார்த்தைதான்.

நாட்டில் பல மாதங்களாக அரசியல், சமூக வட்டாரங்களில் ரஃபேல் ஒப்பந்தம் முக்கிய விவாதமாக இருந்து வந்தது. என்னுடைய மனதில் உள்நோக்கம் இன்று தெரிவிக்கப்பட்ட கருத்து. நீதிமன்றத்தை நேரடியாகவோ, மறைமுகமாகவோ, மூன்றாம்நபர் மூலமோ நீதிமன்ற உத்தரவுகளை அவதிக்கவும், மீறவும், தலையிடவும் எனக்கு எந்த நோக்கமும் இல்லை." என்று தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x