Published : 04 Mar 2019 12:06 PM
Last Updated : 04 Mar 2019 12:06 PM
புல்வாமா தாக்குதலுக்கு பதிலடியாக பாலகோட் பகுதியில் தீவிரவாதிகள் மீது இந்திய விமானப்படை நடத்திய தாக்குதலை அரசியலுக்கு பயன்படுத்தவில்லையா என்று பாஜக தேசியத் தலைவர் அமித் ஷாவுக்கு காங்கிரஸ் கட்சி கேள்வி எழுப்பியுள்ளது.
புல்வாமா தாக்குதலுக்குப் பதிலடியாக பாகிஸ்தானின் பாலகோட் பகுதியில் இந்திய விமானப்படை அதிரடித் தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் ஏராளமான தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இந்த தாக்குதல் நடந்த அன்று அறிக்கை வெளியிட்ட மத்திய வெளியுறவுத்துறையும், பாலகோட் தாக்குதலில் ஏராளமான தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர் என்று தெரிவித்தது. ஆனால், எண்ணிக்கையைத் தெரிவிக்கவில்லை. அதேபோல விமானப்படை தளபதியும் இப்போதுள்ள நிலையில் எண்ணிக்கையை தெளிவாகக் கூற இயலாது என்று தெரிவித்தார்.
இந்நிலையில் அகமதாபாத்தில் நேற்று ஒரு நிகழ்ச்சியில் பேசிய பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா, " பாலகோட் தாக்குதலில் பாகிஸ்தானின் ஜெய்ஷ் இ முகமது தீவிரவாதிகள் 250க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர் " என்று தெரிவித்தார்.
மேலும் ஜெய்ஷ் இ முகமது தீவிரவாத அமைப்பின் தலைவர் மசூத் அசாரின் சகோதரர் வெளியிட்ட ஆடியோவிலும், இந்திய விமானப்படை தீவிரவாதிகள் தங்கி இருந்த இடத்தில் தாக்குதல் நடத்தியது உண்மைதான் என்று தெரிவித்தார்.
இந்த சூழலில் பாஜக தேசியத் தலைவர் அமித் ஷாவின் பேச்சை காங்கிரஸ் தலைவர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
காங்கிரஸ் மூத்த தலைவர் மணிஷ் திவாரி ட்விட்டரில் கூறுகையில், " ஏர்மார்ஷல் கபூர் கூறுகையில், பாலகோட் தாக்குதலில் கொல்லப்பட்ட தீவிரவாதிகள் எண்ணிக்கையை உடனடியாக கூறுவது கடினம். முகாம்கள் மீது தாக்குதல் நடத்தினோம் என்றார். ஆனால், அமித்ஷா 250 தீவிரவாதிகள் விமானப்படைத் தாக்குதலில் கொல்லப்பட்டதாகக் கூறுகிறார். விமானப்படைத் தாக்குதலை அரசியலுக்கு பயன்படுத்தவில்லையா " எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.
முன்னாள் மத்திய அமைச்சரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான கபில் சிபல் ட்விட்டரில் கூறுகையில், " பிரதமர் மோடி அவர்களே, சர்வதேச ஊடகங்களான, நியூயார்க் டைம்ஸ், லண்டனைச் சேர்ந்த் ஜேன் தகவல் குழுமம், வாஷிங்டன் போஸ்ட், டெய்லி டெலிகிராப், ராய்டர்ஸ், தி கார்டியன் ஆகிய பத்திரிகைகள் பாலகோட் தாக்குதலில் தீவிரவாதிகள் பலியாகவில்லை என்று செய்தி வெளியிட்டுள்ளன. தீவிரவாதத்தை அரசியலாக்குகிறீர்கள் " எனத் தெரிவித்துள்ளார்.
முன்னாள் நிதி அமைச்சர் ப.சிதம்பர் ட்விட்டரில் கூறுகையில், " இந்திய விமானப் படையின் வீர நடவடிக்கையைப் பாராட்டிய முதல் மனிதர் திரு ராகுல் காந்தி என்பதைப் பிரதமர் மோடி மறந்து விட்டார். விமானப்படை துணை மார்ஷல், பாலகோட் தாக்குதலில் தீவிரவாதிகள் உயிர் பலி குறித்து கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டார். ஆனால், வெளியுறவுத்துறை அமைச்சகமோ, மக்களோ அல்லது ராணுவத்தினரோ யாரும் உயிரிழக்கவில்லை என்கிறது. ஆனால், 300 முதல் 350 உயிரிழப்புகள் ஏற்பட்டது என யார் வெளியிட்டார்கள்?. இந்தியக் குடிமகன் என்ற முறையில் என்னுடைய அரசை நான் நம்புகிறேன். ஆனால் உலகம். நம்ப வேண்டுமே? அதற்கான முயற்சியை அரசு எடுக்க வேண்டும் என்று சிலர் சொன்னதில் என்ன தவறு? " எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT