Last Updated : 02 Mar, 2019 04:10 PM

 

Published : 02 Mar 2019 04:10 PM
Last Updated : 02 Mar 2019 04:10 PM

மரண தண்டனையில் இருந்து காப்பாற்றிய ஒரு கைதியின் சிறைவாசக் கவிதைகள்

பணத்துக்காக ஒரு குழந்தையைக் கடத்தி கொலை செய்த குற்றத்துக்காக மரண தண்டனை விதிக்கப்பட்ட கைதியின் கவிதைகள் அவரை தூக்கு மேடை செல்லாமல் காப்பாற்றியிருக்கிறது.

தியானேஷ்வர் சுரேஷ் போர்கர் என்ற நபர் 18 ஆண்டுகளுக்கு முன்னதாக குழந்தை ஒன்றை பணத்துக்காக கடத்தி கொலை செய்தார். அந்த வழக்கில் அவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. கீழ் நீதிமன்றம் விதித்த தண்டனையை பாம்பே உயர் நீதிமன்றமும் உறுதி செய்தது.

தண்டனை பெறும்போது தியானேஷ்வருக்கு வயது 22. தண்டனை விதிக்கப்பட்டு 18 வருடங்களுக்குப் பின்னர் அவர் தனது தண்டனையை குறைத்து ஆயுளாக்கக் கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

அந்த மனு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஏ.கே.சிக்ரி, அப்துல் நசீர், எம்.ஆர்.ஷா ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.

மனுவை விசாரித்த நீதிபதிகள் தங்கள் தீர்ப்பில், "மனுதாரரின் விவரங்களைப் பார்க்கும்போது அவர் இனியும் இத்தகைய கிரிமினல் குற்றங்களில் ஈடுபட வாய்ப்பில்லை எனத் தெரிகிறது. இனியும் அவரால் சமுதாயத்துக்கு அச்சுறுத்தல் இருக்காது என இந்த நீதிமன்றம் நம்புகிறது. சிறைவாசத்தின் போது அவர் எழுதிய கவிதைகள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன.

அவை அனைத்துமே அவர் மனம் திருந்தியதை உணர்த்துவதாகவே உள்ளது. அவர் தன்னை சீர்திருத்திக் கொள்ளும் முயற்சிகளை மேற்கொண்டிருக்கிறார். எனவே அவரது மரண தண்டனை ஆயுளாகக் குறைக்கப்படுகிறது." என்றனர்.

முன்னதாக சுரேஷ் போர்கர் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ஆனந்த் குரோவர், "18 ஆண்டு கால சிறைவாசத்தில் எனது கட்சிக்காரர் தான் செய்த குற்றத்தை உணர்ந்து மனம் திருந்தியதோடு அதற்கான படிப்பினையையும் பெற்றிருக்கிறார். அவர் சிறையில் இருந்தவாறே பட்டம் பயின்று தேறியுள்ளார். காந்திய சிந்தனை வகுப்புகளில் கலந்து கொண்டு பயிற்சி பெற்றிருக்கிறார்.

18 ஆண்டுகளுக்கு முன்னதாக அவர் செய்த குற்றங்களை நினைத்து வருந்தி அவர் எழுதியுள்ள கவிதைகளே அதற்கு சாட்சி" என்றார்.

சுரேஷின் கவிதைகள் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டன. அவரது கவிதைகளை வாசித்த நீதிபதிகள் அவரது நன்னடத்தையும் கருத்தில் கொண்டு மரண தண்டனையை ஆயுளாகக் குறைத்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x