Published : 14 Mar 2019 04:06 PM
Last Updated : 14 Mar 2019 04:06 PM
உ.பி.யில் நேற்று காங்கிரஸ் பொதுச்செயலாளரான பிரியங்கா திடீர் என 'பீம் ஆர்மி' தலைவரான ராவண் என்கிற சந்திரசேகர் ஆசாத்தை நேற்று சந்தித்தார். இதனால், காங்கிரஸ் அம்மாநிலத்தின் தாழ்த்தப்பட்டோர் வாக்குகளைக் குறி வைப்பதாகக் கருதப்படுகிறது.
மாயாவதி தலைமையிலான பகுஜன் சமாஜ் கட்சியை நிறுவியவர் கன்ஷிராம். இவரது பிறந்த நாள் நாளை வெள்ளிக்கிழமை டெல்லியில் கொண்டாடப்படுகிறது. இதில் கலந்துகொள்ள, உ.பி.யின் சஹரான்பூரில் இருந்து பீம் ஆர்மியின் நிறுவனரும் அதன் தலைவருமான ராவண் ஊர்வலமாகக் கிளம்பினார். கடந்த செவ்வாய்க்கிழமை அரசு அனுமதியில்லாமல் நடந்த இந்த ஊர்வலத்தில் கலவரம் ஏற்பட்டது.
இதனால், ராவண் உட்பட 27 பேர் மீது வழக்குப் பதிவாகி கைது செய்யப்பட்டனர். இதில், உடல்நலம் குன்றியதால் மீரட் அரசு மருத்துவமனையில் ராவண் சிகிச்சை பெற்று வருகிறார். இவரை உ.பி. மேற்குப் பகுதி பொதுச்செயலாளரான ஜோதிர் ஆதித்ய சிந்தியாவுடன் நேற்று திடீர் என பிரியங்கா நேரில் வந்து சந்தித்தார். இவர்களுடன் தம் கட்சியின் உ.பி. மாநிலத் தலைவரான ராஜ்பப்பரும் உடன் இருந்தார்.
இதன் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய பிரியங்கா, ''மத்திய, மாநில அரசுகள் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு பெற்றுத் தருவதில் தோல்வி கண்டுள்ளது. இதை எதிர்த்து ராவண் போன்றோர் குரல் கொடுத்தால் அவர்களை கைது செய்து சிறையில் அடைக்கப்படுகின்றனர்'' எனத் தெரிவித்தார்.
இந்தச் சந்திப்பு உ.பி. அரசியலில் முக்கியத்துவம் பெற்றுள்ளது. ஏனெனில், உ.பி.யின் மேற்குப் பகுதியில் உள்ள தாழ்த்தப்பட்டோர் இடையே ராவணுக்கு செல்வாக்கு கூடி வருகிறது. ராவண், ‘பீம் ஆர்மி பெயரில் ஒரு அரசியல் கட்சியும் தொடங்கியுள்ளார். எனவே, அவருக்கு தம் கூட்டணியில் காங்கிரஸ் சேர வாய்ப்பளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த வருடம் சஹரான்பூரில் அம்பேத்கர் பெயரில் ராவண் ஒரு மாபெரும் ஊர்வலம் நடத்தினார். இதில் அவர்களுடன் தாக்கூர் சமூகத்தினருக்கும் மோதல் ஏற்பட்டு கலவரம் மூண்டது. இதனால், ராவண் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். கைதிற்குப் பின் ராவண், உ.பி. மேற்குப் பகுதியின் தாழ்த்தப்பட்ட சமூகத்தினர் இடையே அதிக பிரபலம் அடைந்து வருகிறார்.
உ.பி.யில் தாழ்த்தப்பட்டோரின் புதிய தலைவராக ராவண் உருவெடுத்து வருகிறார். பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவி மாயாவதிக்கு அடுத்தபடியாக ராவணுக்கு செல்வாக்கு கூடியுள்ளது. எனவே, ராவணைச் சேர்ப்பதன் மூலம், தாழ்த்தப்பட்டோர் வாக்குகளை பெறலாம் என காங்கிரஸ் திட்டமிடுகிறது. இதன் காரணமாகவே ராவணை பிரியங்கா சந்தித்திருப்பதாகக் கருதப்படுகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT