Published : 23 Mar 2019 10:55 AM
Last Updated : 23 Mar 2019 10:55 AM
உ.பி.யின் வாரணாசியில் மீண்டும் போட்டியிடும் பிரதமர் நரேந்திர மோடியை எதிர்க்க பிரவீன் பாய் தொகாடியா விருப்பம் தெரிவித்திருக்கிறார். தான் புதிதாகத் தொடவங்கிய ’இந்துஸ்தான் நிர்மான் தளம்’ கட்சியின் வேட்பாளர் பட்டியலை நேற்று வெளியிடும் போது அவர் இதை தெரிவித்தார்.
இதுகுறித்து தொகாடியா கூறும்போது, ‘ஐந்து வருட வாய்ப்பு கிடைத்த பின்பும் ராமர் கோயில் உள்ளிட்ட இந்துக்களின் கோரிக்கைகளை பாஜக நிறைவேற்றவில்லை. இதனால், வாரணாசியில் மோடியை எதிர்த்து அல்லது அயோத்தியில் நான் போட்டியிட விரும்புகிறேன்.’ எனத் தெரிவித்தார்.
வாரணாசியில் ‘பீம் ஆர்மி’ கட்சியின் தலைவர் ராவண் எனும் சந்திரசேர ஆசாத்தும் போட்டியிட விருப்பம் தெரிவித்துள்ளார். இவருக்கு மற்ற கட்சிகளின் ஆதரவும் கிடைத்தால் தொகாடியா அயோத்திக்கும் மாறி விடுவார் எனக் கருதப்படுகிறது.
பாஜகவின் தோழமை அமைப்பான விஷ்வ இந்து பரிஷத்தின்(விஹெச்பி) சர்வதேச பொதுச்செயலாளராக பல வருடங்கள் பதவி வகித்தவர் தொகாடியா. குஜராத்தை சேர்ந்த தொகாடியாவுடன் அங்கு முதல்வராக இருந்தது முதல் மோடியுடன் மோதல் இருந்தது.
இந்நிலையில், கடந்த வருடம் விஹெச்பியின் பொதுச்செயலாளர் பதவிக்கு புதிதாக விநாயக் ராவ் தேஷ் பாண்டே தேந்தெடுக்கப்பட்டார். இதனால், கடும் அதிருப்தி அடைந்த தொகாடியா, விஹெச்பியில் இருந்து வெளியேறினார்.
இதேபோல், ராமர் கோயில் கட்டுவதற்காக என புதிதாக ’அந்தராஷ்டிரிய இந்து பரிஷத்’ எனும் பெயரில் ஒரு அமைப்பை தொடங்கினார். இத்துடன் தேர்தலிலும் போட்டியிடும் பொருட்டு இந்துஸ்தான் நிர்மான் தளம் எனக் கட்சியையும் துவக்கி இருந்தார்.
நேற்று தன் கட்சி சார்பில் மக்களவைக்கு போட்டியிடும் 41 வேட்பாளர்களின் முதல் பட்டியலை வெளியிட்டார். உபி 19, குஜராத் 9, அசாம் 7, ஒடிஸா 5 மற்றும் ஹரியானாவில் ஒரு வேட்பாளரும் இடம் பெற்றுள்ளனர்.
சுமார் 12 மாநிலங்களில் நூற்றுக்கும் மேற்பட்ட வேட்பாளர்களை நிறுத்த தொகாடியா திட்டமிட்டுள்ளார். எனினும், எந்த கட்சிகளுடனும் கூட்டணி இல்லை எனவும் அறிவித்துள்ளார்.
காந்தி நகரில் போட்டியிடும் பாஜகவின் தேசிய தலைவர் அமித்ஷாவை எதிர்த்து தம் கட்சி சார்பிலும் வேட்பாளரை அறிவித்துள்ளார் தொகாடியா.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT