Last Updated : 20 Mar, 2019 10:40 AM

 

Published : 20 Mar 2019 10:40 AM
Last Updated : 20 Mar 2019 10:40 AM

வருடத்திற்கு ரூ.6000 பிரதமர் நிதி உதவி: பல்வேறு காரணங்களால் பெற முடியாமல் உள்ள 67.11 லட்சம் விவசாயிகள்

'பிஎம் கிசான் யோஜ்னா' எனும் பிரதமர் நிதி உதவி திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு வருடந்தோறும் ரூ.6000 அளிக்கப்படுகிறது. இதை பல்வேறு காரணங்களால் தமிழகம் உள்ளிட்ட பல மாநிலங்களில் 67.11 லட்சம் விவசாயிகள் பெற முடியாமல் உள்ளது.

நாட்டின் 12.5 கோடி சிறு, குறு விவசாயிகளுக்கு நிதி உதவியாக வருடம் ஒன்றுக்கு ரூ.6000-ஐ கடந்த பட்ஜெட்டில் மத்திய அரசு அறிவித்தது. மக்களவைத் தேர்தலை மனதில் வைத்து இந்த திட்டம் அமலாக்கப்பட்டதாகக் கருதப்பட்டது. ஏனெனில், பிரதமர் நரேந்திர மோடி அரசிற்கு எதிராக விவசாயிகள் பல்வேறு போராட்டங்களை தொடர்ந்து நடத்தி வந்தனர். இதனால், விவசாயிகளை சமாளிக்க வேண்டிய கட்டாயம் மத்திய அரசிற்கு இருந்தது.

இந்நிலையில், பிரதமர் நிதி உதவியின் முதல் தவணையான ரூ.2000 நாட்டின் விவசாயிகள் கணக்கில் செலுத்தியாகி விட்டது. எனினும், சிக்கிம், புதுடெல்லி மற்றும் மேற்கு வங்க மாநில அரசுகள் தம் விவசாயிகளின் விவரங்களை அனுப்பாமையால் அவர்களுக்கு நிதி உதவி செலுத்தப்படவில்லை.

மேலும், மத்தியப் பிரதேசம், அருணாச்சலப் பிரதேசம், ராஜஸ்தான், மேகாலயா மற்றும் லட்சத்தீவுகள் முறையான ஆவணங்கள் சமர்ப்பிக்கவில்லை. எனவே, இந்த மாநிலத்தின் பல விவசாயிகளுக்கும் அதன் பலன் பெறமுடியாமல் உள்ளது.

இதுவன்றி தமிழகம் போன்ற சில மாநிலங்களின் விவசாயிகள் சமர்ப்பித்த ஆவணங்களிலும் குறைகள் இருந்தன. இதனால், அம்மாநிலங்களின் ஒரு பகுதி விவசாயிகளுக்கும் நிதி உதவியின் பலன் கிடைக்கவில்லை. இவர்கள் அனைவரின் எண்ணிக்கை 67.11 லட்சம் ஆகும்.

இது குறித்து ‘இந்து தமிழ் திசை’ இணையத்திடம் மத்திய விவசாயத்துறை அமைச்சக வட்டாரம், ''இதுவரையும் யூனியன் பிரதேசம் உட்பட 33 மாநிலங்களில் 4.76 கோடி விவசாயப் பயனாளிகளின் ஆவணங்கள் பொது நிதி நிர்வாக முறை (பிஎப்எம்எஸ்) இணையத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டன.

இதில், 3.11 கோடி பயனாளிகளின் ஆவணங்களில் குறைகளினால் ஏற்கப்படாமல் உள்ளன. இதை சரிபார்த்து அவர்களிடம் மீண்டும் பெற்று பெறாதவர்களுக்கு நிதி உதவி அளிக்கலாமா என மத்திய அரசு மத்திய தேர்தல் ஆணையத்திடம் யோசனை கேட்டு கடிதம் எழுதப்பட்டுள்ளது'' எனத் தெரிவித்தனர்.

பிரதமர் நிதி உதவியின் கீழ் முதல் தவணையாக விவசாயிகளின் வங்கிக்கணக்கில் இதுவரை சுமார் 2.75 கோடி ரூபாய் செலுத்தப்பட்டுள்ளது. இந்த தொகை, பஞ்சாப், ஹரியாணா, உ.பி., குஜராத், இமாச்சலப் பிரதேசம், உத்தராகண்ட், ஆந்திரா, அசாம் மற்றும் அந்தமான் நிகோபர் தீவுகளின் விவசாயிகள் சுமார் 40 சதவீதம் பேருக்குக் கிடைத்துள்ளது.

இதே முதல் தவணை, ஜம்மு-காஷ்மீர், தாத்ரா நாகர் ஹவேலி, தமிழகம், மற்றும் தெலங்கானா ஆகியவற்றில் 20 முதல் 40 சதவீத விவசாயிகளுக்கு மட்டும் செலுத்தப்பட்டுள்ளது. இதை பெற்றவர்களில் சுமார் 65 சதவீதம் பேர் பாஜக அல்லது அக்கட்சியின் ஆதரவு பெற்ற மாநிலங்களைச் சேர்ந்தவர்கள்.

இதுவரையும் முதல் தவணை பெறாதவர்கள் தேர்தல் நடத்தை விதிகள் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டுவிட்டால் அவர்கள் அந்தத் தொகையைப் பெற மேலும் நான்கு மாதங்கள் ஆகலாம். இதை பெற்றவர்களுக்கு அடுத்த தவணையான ரூ.2000  வரும் ஏப்ரலில் செலுத்தப்பட்டு விடும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x