Published : 10 Mar 2019 10:56 AM
Last Updated : 10 Mar 2019 10:56 AM
மக்களவைத் தேர்தல் பிரச்சாரத்தின் போது, அரசியல் கட்சிகள், வேட்பாளர்கள் யாரும், எந்த ராணுவ வீரர்களின் புகைப்படங்களையும், செயல்பாடுகள் குறித்து படங்களையும் பிரச்சாரங்களிலும், விளம்பரங்களிலும் பயன்படுத்தக் கூடாது என்று தேர்தல் ஆணையம் எச்சரித்துள்ளது.
கடந்த 2013-ம் ஆண்டு இதேபோன்று தேர்தல் பிரச்சாரத்தில் பயன்படுத்தப்பட்டபோது, அதைத் தடை செய்து தேர்தல் ஆணையம் அறிக்கை வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.
புல்வாமா தாக்குதலுக்கு பதிலடியாக இந்திய விமானப்படை பாகிஸ்தானின் பாலகோட் பகுதியில் தீவிரவாத முகாம்கள் மீது இந்திய விமானப்படையினர் குண்டுவீசி அழித்தனர். இதில் 350 தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது.
பாகிஸ்தான் போர் விமானமான எப்-16 ரக விமானத்தைச் சுட்ட இந்திய விமானப்படை வீரர் அபிநந்தன் பாகிஸ்தான் ராணுவத்திடம் சிக்கினார். 2 நாட்களுக்குப் பின் சர்வதேச அழுத்தம் காரணமாகப் பாகிஸ்தான் ராணுவம் அபிநந்தனை விடுவித்தது. இந்த சம்பவங்களைக் குறிப்பிட்டு டெல்லியில் பல்வேறு இடங்களில் பாஜகவின் விளம்பரங்கள் வைக்கப்பட்டு இருந்தன. குறிப்பாக பாஜக தேசியத் தலைவர் அமித்ஷா, பிரதமர் மோடி ஆகியோரோடு அபிநந்தன் புகைப்படமும் இடம் பெற்றருந்துத. இந்த புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் அதிகமாகப் பகிரப்பட்டு விவாதிக்கப்பட்டது.
இதையடுத்து, முன்னாள் கப்பற்படத் தளபதியான ராமதாஸ், ராணுவ வீரர்களின் புகைப்படங்களை அரசியல் கட்சிகள், தலைவர்கள் பிரச்சாரத்துக்கு பயன்படுத்துவதைத் தடை செய்ய வேண்டும் எனக் கோரி தேர்தல் ஆணையத்துக்குக் கடிதம் எழுதி இருந்தார். இதைத் தொடர்ந்து இந்த உத்தரவை தேர்தல் ஆணையம் பிறப்பித்துள்ளது.
இந்நிலையில், அனைத்து அரசியல் கட்சிகளின் தலைவர்களுக்கும் தேர்தல் ஆணையத்தின் செயலாளர் பிரமோத் குமார் சர்மா கடிதம் எழுதியுள்ளார்.
அதில், ராணுவ தளபதி, ராணுவ வீரர்களின் புகைப்படங்கள் மற்றும் ராணுவ விழாக்கள் தொடர்பான புகைப்படங்களை சில அரசியல் கட்சிகள் தேர்தல் பிரச்சாரத்துக்கு பயன்படுத்துகின்றன என்று பாதுகாப்பு அமைச்சகம் எங்கள் கவனத்துக்குக் கொண்டுவந்தது.
ராணுவ வீரர்கள் நமது தேசத்தின் எல்லையைக் காக்கும் பணியில் இருப்பவர்கள். நவீன ஜனநாயகத்தில் எந்த அரசியல் கட்சிக்கும் சாராமல் ராணுவ வீரர்கள் நடுநிலை வகிப்பவர்கள். ஆதலால், ராணுவ தளபதி, ராணுவ வீரர்களின் புகைப்படங்கள் மற்றும் ராணுவ விழாக்கள் தொடர்பான புகைப்படங்களை தேர்தல் தொடர்பான விளம்பரங்களுக்கோ, பிரச்சாரத்துக்கோ எந்த வகையிலும் பயன்படுத்தக்கூடாது. இது தொடர்பாக அரசியல் கட்சிகளின் தலைவர்கள் தங்கள் கட்சியினருக்கும், வேட்பாளர்களுக்கும் உரிய அறிவுறுத்தல்களை வழங்க வேண்டும்
இவ்வாறு அந்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT