Published : 23 Mar 2019 03:05 PM
Last Updated : 23 Mar 2019 03:05 PM
ஆந்திராவில் மீண்டும் ஆட்சியைத் தக்கவைக்கும் நோக்கில் சந்திரபாபு நாயுடு காய்களை நகர்த்த, அரசியல் களத்தில் அவரின் முதல்வர் கனவுக்கு கடும் போட்டியாக ஒய் எஸ்ஆர் ஜெகன்மோகன் ரெட்டி வளர்ந்து கொண்டிருக்கிறார்.
மற்றொரு பக்கம் ஆந்திராவில் தொங்கு சட்டப்பேரவை அமைந்தால், ஆட்சியைத் தீர்மானிக்கும் சக்தியாக பவன் கல்யாண் எழுச்சி பெற்று வருகிறார். இந்த 3 பேருக்கும் இடையில்தான் ஆந்திராவில் நடக்கும் சட்டப்பேரவை, மக்களவைத் தேர்தலில் போட்டி இருக்கும்.
மாநிலத்தில் காங்கிரஸ், பாஜக ஆகிய கட்சிகள் என மொத்தம் 5 முனைப் போட்டி இருந்தாலும், இவர்கள் 3 பேரும்தான் பிரதானமாக இருக்கப் போகிறார்கள்.
ஆந்திர மாநிலத்தில் உள்ள 175 சட்டப்பேரவை தொகுதிகளுக்கும், 25 மக்களவைத் தொகுதிகளுக்கும் வரும் ஏப்ரல் 11-ம் தேதி ஒரே கட்டமாகத் தேர்தல் நடத்தப்படுகிறது. ஒருங்கிணைந்த ஆந்திர மாநிலம் பிரிக்கப்பட்டபின் நடக்கும் 2-வது சட்டப்பேரவைத் தேர்தல் இதுவாகும்.
சாதி அரசியல்
ஆந்திர அரசியலைப் பொறுத்தவரை காலங்காலமாக அங்கு சாதி அரசியல்தான் பிரதானப்படுத்தப்பட்டு வருகிறது. அங்குள்ள வாக்காளர்களில் பெரும்பகுதியினர் சாதி அடிப்படையிலான அரசியல் தலைவர்களுக்கே தங்கள் வாக்குகளை அளித்து வெற்றி பெறவைத்துள்ளனனர்.
ரெட்டி, நாயுடு, காபு ஆகிய 3 பெரும் சாதியினர் மிக முக்கியமானவர்கள். இதில் ரெட்டி, நாயுடு சமூகத்தைச் சேர்ந்த தலைவர்கள்தான் பெரும்பாலும் ஆந்திராவை ஆண்டுள்ளார்கள். காபு சமூகத்தினர் வெற்றியைத் தீர்மானிக்கும் சக்தியாக இருந்து வருகிறார்கள்.
சிறிய பின்னோட்டம்:
காங்கிரஸ் கட்சிக்கு மாற்றாக, சுயமரியாதைக்காக கடந்த 1982-ம் ஆண்டு தெலுங்கு தேசம் கட்சியைத் தொடங்கிய என்.டி.ராமாராவ் ஒரே ஆண்டில் 1983-ம் ஆண்டில் ஆட்சியைப் பிடித்து இந்திய வரலாற்றில் சாதனை படைத்தார். ஆந்திர மக்கள், என்டிஆரை முதல்வராகப் பார்க்காமல் கடவுளாகக் கொண்டாடினார்கள்.
1995-ம் ஆண்டு, தெலுங்கு தேசம் கட்சிக்குள் பிளவு ஏற்பட்டவுடன் என்டிஆரின் மருமகன் சந்திராபாபு நாயுடு, மாமனாருக்கு எதிராக உருவாகி ஆட்சியைக் கைப்பற்றினார். சந்திரபாபு நாயுடு குறுக்கு வழியில் ஆட்சியைக் கைப்பற்றினார் என்று விமர்சிக்கப்பட்டாலும், அவரின் நிர்வாகத் திறமை, திறன், சாதுர்யம் அதை மாற்றியது.
கிங்மேக்கர்
அதன்பின் ஆந்திராவில் மட்டுமல்ல, நாட்டில் கிங் மேக்கராக சந்திரபாபு நாயுடு வலம் வந்தார். கடந்த 1996-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காத போது ஐ.கே. குஜ்ரால் ஆட்சிக்கு ஆதரவு தெரிவித்து ஆட்சியில் சந்திரபாபு நாயுடு பங்கேற்றார்.
1998-ம் ஆண்டில் வாஜ்பாய் அரசுக்கு ஆதரவு அளித்து வாஜ்பாய் அரசு அமைய சந்திரபாபு நாயுடு உதவி செய்தார். அதன்பின் 1999-ம் ஆண்டு நடந்த தேர்தலிலும் தெலுங்கு தேசம் கட்சி கணிசமாக 29 இடங்களில் வென்றது. மீண்டும் வாஜ்பாய் பிரதமராக அமர சந்திரபாபு நாயுடு ஆதரவு அளித்தார்.
கடினமான 10 ஆண்டுகள்
ஆனால் 2004-ம், 2009-ம் ஆண்டுகளில் நடந்த இரு மக்களவைத் தேர்தலும் தெலுங்கு தேசம் கட்சிக்கு பெருத்த சரிவு காத்திருந்தது. இரு தேர்தலிலும் 5 இடங்களுக்கு மேல் பெற முடியவில்லை. ஆந்திர மாநிலத்தைச் சிறப்பாக நிர்வகித்து, ஹைதராபாத் நகரைத் திட்டமிட்டுக் கட்டமைத்தவர் ஹைடெக் நகர்களை உருவாக்கியவர் என்றெல்லாம் சந்திரபாபு நாயுடு புகழப்பட்டு நாட்டிலேயே சிறந்த முதல்வர் என்று பெயரெடுத்தார்.
ஆனால், 2004-ம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலில் மிகுந்த நம்பிக்கையுடன் களத்தில் குதித்த சந்திரபாபு நாயுடுவுக்கு பேரதிர்ச்சி காத்திருந்தது. 2004-ம் ஆண்டில் ஒருங்கிணைந்த ஆந்திராவில் நடந்த தேர்தலில் 267 இடங்களில் காங்கிரஸ் 185 இடங்களில் வென்றது. சந்திரபாபு நாயுடுவுக்கு 47 இடங்கள் மட்டுமே கிடைத்தது.
2009-ம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலிலும் காங்கிரஸ் கட்சியே வென்றது. காங்கிரஸ் 156 இடங்களிலும், தெலுங்கு தேசம் கட்சி 28 சதவீத வாக்குகளுடன் 92 இடங்களிலும் வென்றது. ஏறக்குறைய 10 ஆண்டுகள் சந்திரபாபு நாயுடுவால் அரியணையைப் பிடிக்க முடியவில்லை.
ஆனால், இந்த நிலை 2014-ம் ஆண்டு மாறியது. ஆந்திராவில் மீண்டும் தெலுங்கு தேசம் கட்சி ஆட்சியைப் பிடித்தது. 117 இடங்களில் வென்று சந்திரபாபு நாயுடு மீண்டும் முதல்வரானார். இத்தேர்தலில் பாஜகவுடன் இணைந்து மக்களவைத் தேர்தலைச் சந்தித்த தெலுங்கு தேசம் கட்சி 16 இடங்களைக் கைப்பற்றியது.
ஜெகன் எழுச்சிக்கு காரணமான காங்.
இதில் குறிப்பிடவேண்டிய விஷயம் என்னவென்றால், காங்கிரஸ் சார்பில் கடந்த 2004-ம் ஆண்டில் இருந்து முதல்வராக இருந்த ஒய்எஸ்ஆர்ரெட்டி ஹெலிகாப்டர் விபத்தில் 2009-ம் ஆண்டு இறந்த பின் அவரின் மகன் ஜெகன்மோகன் ரெட்டி தன்னை முதல்வராக்க காங்கிரஸிடம் கோரினார்.
அதற்கு காங்கிரஸ் சம்மதிக்க மறுக்கவே அதனால் ஜெகன்மோகன் ரெட்டியால் உருவானதுதான் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி. கடந்த 2014-ம் ஆண்டு சட்டப்பேரவை, மக்களவை இரண்டிலும் காங்கிரஸ் கட்சியின் சரிவுக்கு பெரும் காரணமாக இருந்தார் ஜெகன்மோகன் ரெட்டி.
1.72 சதவீதம் வித்தியாசம்
2014-ம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலில் தெலுங்கு தேசம் கட்சிக்கு இணையாக 32 சதவீத வாக்கு சதவீதத்தைப் பெற்றார் ஜெகன்மோகன் ரெட்டி. ஆனாலும் 1.72சதவீத வித்தியாசத்தால் ஜெகன்மோகன் ரெட்டியால் ஆட்சியைக் கைப்பற்ற முடியவில்லை.
ஆதலால், வரும் சட்டப்பேரவை, மக்களவைத் தேர்தலில் சந்திரபாபு நாயுடுவின் முதல்வர் கனவுக்கும், கிங் மேக்கர் கனவுக்கும் பெரும் அச்சுறுத்தலாக இருப்பார் ஜெகன் மோகன். பல்வேறு கருத்துக் கணிப்புகளில் ஜெகன்மோகன் ரெட்டிக்குத்தான் ஆதரவு அதிகமாக இருப்பதாக தகவல்கள் வந்துள்ளன.
'பவர்ஸ்டார்' பவன் கல்யாண்
கடந்த 2014-ம் ஆண்டு சட்டப்பேரைவ தேர்தலில் சந்திரபாபு நாயுடுவுக்கு ஆதரவாகப் பிரச்சாரம் செய்தவர் ஜனசேனா கட்சியின் தலைவர் பவன். தெலுங்கு தேசம் கட்சி வெற்றிபெற கணிசமான காரணமாக பவன் கல்யாண் இருந்தார்.
ஆனால், இத்தேர்தலில் அவருக்கு எதிராக களமிறங்குகிறார் பவன் கல்யாண். இந்த முறை பவன் கல்யாணின் ஜனசேனா கட்சி, மாயாவதியின் பகுஜன் சமாஜ், இடதுசாரிகள் ஆகியோருடன் சேர்ந்து கூட்டணி அமைத்து சட்டப்பேரவை, மக்களவை இரண்டிலும் போட்டியிடுகிறது.
காபு சமூகம்
பவன் கல்யாண் காபு சமூகத்தைச் சேர்ந்தவர். ஆந்திராவில் காபு சமூகத்தினர் கிழக்கு, மேற்கு கோதாவரி பகுதிகளில் காபு சமூகத்து மக்கள் அதிகம்.
ஏறக்குறைய 36 சட்டப்பேரவை தொகுதிகள், 3 மக்களவைத் தொகுதிகள் காபு சமூகத்தினர் வாழும் பகுதியில் வருவதால், அவர்களின் வாக்குகளையும், தலித் வாக்குகளையும் குறிவைத்து பவன் கல்யாண் தனது தேர்தல்அரசியல் பயணத்தைத் தொடங்கியுள்ளார்.
17 சதவீதம் காபு சமூகத்தினர் இருப்பதால், நம்பிக்கையுடன் களமிறங்குகிறார் பவன் கல்யாண். காபு சமூகத்தினர் தங்களை ஓபிசி பிரிவில் சேர்க்கவும், 5 சதவீத இட ஒதுக்கீடு கேட்டும் கடுமையாகப் போராடினார்கள். அதற்கு ஒய்எஸ்ஆர் ஜெகன்மோகன் ஆதரவு தெரிவித்தபோது, சந்திரபாபு நாயுடு எதிர்த்தார். இந்தக் கோரிக்கை தேர்தலில் பெரிதாக எதிரொலிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நிலையற்ற தன்மை
கடந்த சட்டப்பேரவை தேர்தலில் சந்திரபாபு நாயுடு வெற்றிக்குத் துணை செய்த, பவன் கல்யாண் அவருக்கு எதிராக களத்தில் இறங்கியிருப்பது சந்திரபாபு நாயுடுவின் வாக்கு சதவீதத்தை கடுமையாகப் பாதிக்கும்.
இதுதவிர பிரிக்கப்பட்ட ஆந்திர மாநிலத்தில் இருந்து வளமான பகுதிகள் தெலங்கானா மாநிலத்தின் பக்கம் சென்றுவிட்டது. இதனால், கடந்த 2014-ம் ஆண்டு தேர்தலில் சந்திரபாபு நாயுடு வென்றபோதிலும் மாநிலத்தை மறுகட்டமைப்பு செய்ய வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டார்.
புதிய தலைநகரான அமராவதியை கட்டமைக்கப் போகிறேன் எனக் கூறி அதற்கு போதுமான நிதியில்லாமல் தடுமாறி வருகிறார் சந்திரபாபு. கடந்த 2014-ம் ஆண்டில் இருந்து மோடி அரசில் பங்கேற்று, ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து கிடைக்காத ஆத்திரத்தில் கடந்த ஆண்டு ஆட்சியில் இருந்து தெலுங்கு தேசம் விலகியது. காங்கிரஸ் பக்கம் தனது பார்வையைச் செலுத்தினார் சந்திரபாபு நாயுடு.
ஆனால், சமீபத்தில் தெலங்கானாவில் நடந்த சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸுடன் கூட்டணி அமைத்துப்போட்டியிட்ட சந்திரபாபு நாயுடுவை தெலுங்கு பேசும் மக்கள் ஏற்கவில்லை. கடந்த 4 ஆண்டுகளாக பாஜகவின் பக்கமும், திடீரென காங்கிரஸுடன் இணைந்ததையும் விரும்பாத மக்கள் பெரும் தோல்வி அடையச் செய்தனர். இதனால், ஆந்திராவில் தனித்துக் களமிறங்குகிறார். காங்கிரஸுடன் நட்புறவுடன் சந்திரபாபு நாயுடு இருந்தாலும், கூட்டணியை விரும்பவில்லை.
இதனால் மக்களின் ஆதரவைப் பெறும் நோக்கில் பல்வேறு நலத்திட்டங்களை சந்திரபாபு நாயுடு அவசரம், அவசரமாக அறிவித்தார். அதில் குறிப்பாக பசுபு-குங்குமா திட்டம், 94 மகளிர் சுயஉதவிக்குழுக்களுக்கு ரூ.10 ஆயிரம் அளித்தனர், விவசாயிகளுக்கான ரிது ரக்ஸ்னா, வேலையில்லா இளைஞர்களுக்கு உதவித்தொகை போன்றவற்றைச் செயல்படுத்தினார். ஆனால், இவையெல்லாம் தேர்தலில் சந்திரபாபு நாயுடுவுக்கு கைகொடுக்குமா எனத் தெரியவில்லை.
ஜெகனின் விஸ்வரூபம்
இவை ஒருபக்கம் இருக்க சந்திரபாபு நாயுடுவின் அரசில் நடந்த ஊழல்கள், நிர்வாகச் சீர்கேடுகள் ஆகியவற்றை விளக்கி கடந்த 5 ஆண்டுகளில் 3,500 கி.மீ .நடைபயணம் சென்று ஜெகன்மோகன் ரெட்டி மக்களைச் சந்தித்துள்ளார். இந்த நடைபயணத்தின் போது ஜெகன்மோகன் ரெட்டிக்கான மக்கள் மத்தியில் அதிகரித்துள்ளதாக கள ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
அதுமட்டுமல்லாமல் தெலங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவுடன் ஜெகன்மோகன் ரெட்டிக்கு நல்ல உறவு இருப்பதால் மக்களவை, சட்டப்பேரவை தேர்தலுக்குப் பின் இருவருக்கும் இடையே கூட்டணி ஏதும் ஏற்படலாம்.
மக்களவைத் தேர்தலுக்குப் பின் தெலங்கானாவில் டிஆர்எஸ் கட்சியும், ஆந்திராவில் ஒய்எஸ்ஆர் கட்சியும் மத்தியில் ஆட்சியாளர்களைத் தீர்மானிக்கும் சக்தியாக இருக்கப்போகிறார்கள் என்பது அரசியல் ஆய்வாளர்கள் கருத்தாக இருக்கிறது.
பதில் சொல்வாரா நாயுடு?
பாஜகவுடன் காங்கிரஸுடன் மாறி மாறி கூட்டணி வைத்த சந்திரபாபு நாயுடுவின் நிலைப்பாடு, தலைநகர் அமராவதியைக் கட்டமைக்காதது, சிறப்பு அந்தஸ்தை பெற்றுத்தர முடியாமை, விவசாயிகள் பிரச்சினை போன்றவை சந்திரபாபு நாயுடுக்கு தேர்தலில் பெரிய பிரச்சினையாக இருக்கும். குறிப்பாக பவன் கல்யாண் தலைமையில் அமைந்திருக்கும் மூன்றாவது அணி சந்திரபாபு நாயுடுவின் வெற்றியைப் பெரிதும் கேள்விக்குறியாக்கும் என்பது அரசியல் நோக்கர்களின் கருத்தாகும்.
பல்வேறு கருத்துக் கணிப்புகளில் ஜெகன்மோகன் ரெட்டிக்கு பெரும்பான்மை கிடைக்கும் என்று வந்தபோதிலும் கூட, தெலுங்கு தேசம் கட்சி கடும் போட்டி அளிக்கக்கூடும். ஒருவேளை ஆந்திராவில் யாருக்கும் பெரும்பான்மை இல்லாத சூழல் ஏற்படும் பட்சத்தில் ஆட்சியை தீர்மானிக்கும் சக்தியாக பவன் கல்யாண் மாறுவார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT