Last Updated : 15 Mar, 2019 06:33 PM

 

Published : 15 Mar 2019 06:33 PM
Last Updated : 15 Mar 2019 06:33 PM

மீண்டும் ஆம் ஆத்மியுடன் கூட்டணிக்கு முயற்சி? டெல்லி கட்சியினரிடம் கருத்து கேட்கும் காங்கிரஸ்

டெல்லியில் ஆம் ஆத்மியுடன் கூட்டணி வைக்க காங்கிரஸ் மீண்டும் முயல்கிறது. இதன் மீது தம் டெல்லி கட்சியினரிடம் கருத்து கேட்டு முடிவு செய்ய உள்ளது.

 

பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராக எதிர்கட்சிகள் ஒன்றிணையத் துவங்கியது முதல் ஆம் ஆத்மி-காங்கிரஸ் கூட்டணிக்கு முயற்சி நடைபெறுகிறது. இந்த கூட்டணியால் டெல்லி சட்டப்பேரவை தேர்தலில் சிக்கல் வரும் என காங்கிரஸ் தவிர்த்து வந்தது.

 

எனினும், காங்கிரஸுடன் கூட்டணி வைப்பதால் மக்களவையில் தனக்கு டெல்லி, ஹரியானா, பஞ்சாப் உள்ளிட்டப் பல்வேறு மாநிலங்களில் பலன் கிடைக்கும் என ஆம் ஆத்மி கருதியது. இதனால், அதன் தேசிய அமைப்பாளரும், டெல்லி முதல்வருமான அர்விந்த் கேஜ்ரிவால் தொடர்ந்து கூட்டணிக்கு முயன்றார்.

 

எனினும், டெல்லியில் தொடர்ந்து மூன்றுமுறை முதல்வராக இருந்த ஷீலா தீட்சித் உள்ளிட்ட காங்கிரஸ் தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். சோனியா காந்தி, ராகுல் காந்தியை நேரில் சந்தித்தும் இதை வலியுறுத்தினர்.

 

இதன் காரணமாக காங்கிரஸ் தலைவரான ராகுல் டெல்லியின் ஏழு தொகுதியிகளிலும் காங்கிரஸ் தனித்து போட்டியிடுவதாக அறிவித்திருந்தார். இத்துடன் முற்றுப்பெற்ற கூட்டணிக்கான முயற்சி மீண்டும் ஆம் ஆத்மியுடன் துவங்கி உள்ளது.

 

காங்கிரஸ் கட்சியினருக்கு இடையிலான அதன் தலைமைக்கான தொடர்பிற்காக ‘சக்தி ஆப்’ எனும் பெயரில் ஒரு கைப்பேசி செயலில் உள்ளது. இந்த செயலியில் ஆம் ஆத்மியுடன் கூட்டணி வைக்கலாமா? எனக் காங்கிரஸ் தலைமை கருத்து கேட்டுள்ளது.

 

இதன் மீது காங்கிரஸின் தேசிய நிர்வாகியான பி.சி.சாக்கோவின் குரல் பதிவு அந்த சக்தி செயலியில் நேற்று பதிவேற்றம் செய்யப்பட்டுளது. இதனால், டெல்லி காங்கிரஸ் தலைவர்கள் தம் தலைமை மீது அதிருப்திக்கு உள்ளாகி இருக்கின்றனர்.

 

இது குறித்து டெல்லி மாநில காங்கிரஸ் தலைவர் ஷீலா தீட்சித் கூறும்போது, ‘ஆம் ஆத்மியுடன் கூட்டணி வைப்பதில்லை என ராகுல் முடிவு செய்து அறிவித்து விட்டார். இதன் பிறகு அதன் மீது கருத்து கேட்பது சரியல்ல. இதனால், யாரும் குழப்படைய மாட்டார்கள்.’ எனத் தெரிவித்தார்.

 

இந்நிலையில், சக்தி ஆப்பில் துவரை சுமார் 55,000 காங்கிரஸார் கருத்து கூறி உள்ளனர். ஆனால், அதன் விவரம் என்ன என்பது குறித்து தகவல் இல்லை.

 

சக்தி செயலியை நிர்வாகிக்கும் காங்கிரஸ் இணையதளப் பிரிவு, ராகுல் காந்தியின் நேரடி நிர்வாகத்தில் உள்ளது. எனவே, மீண்டும் ஆம் ஆத்மியுடன் கூட்டணிக்கான முயற்சியை ஆங்கிரஸ் துவக்கி இருப்பதாகக் கருதப்படுகிறது.

 

டெல்லியின் ஒரு தொகுதியில் பொதுவேட்பாளரை நிறுத்தி விட்டு மீதியுள்ள ஆறில் தனக்கும் காங்கிரஸுக்கும் சரிபாதியாக பிரிக்க கேஜ்ரிவால் திட்டமிடுகிறார். பொது வேட்பாளாக இருவரது பெயர் சர்ச்சையில் உள்ளது.

 

பாஜகவில் இருந்து வெளியேறிய முன்னாள் மத்திய நிதிஅமைச்சர் யஷ்வந்த் சின்ஹா அல்லது அக்கட்சியின் அதிருப்தி தலைவரான சத்ருகன் சின்ஹாவின் பெயரும் அதில் இடம் பெற்றுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x