Last Updated : 24 Mar, 2019 12:26 PM

 

Published : 24 Mar 2019 12:26 PM
Last Updated : 24 Mar 2019 12:26 PM

தந்தையை ஓரம் கட்டிய தனயன்; முலாயம் சிங்கின் ஆசம்கார்க் தொகுதியில் அகிலேஷ் போட்டி

சமாஜ்வாதி கட்சியின் தலைவர் முலாயம் சிங் யாதவ் கடந்த முறை போட்டியிட்ட ஆசாரம்கார்க் தொகுதியில் இந்த முறை  அகிலேஷ் யாதவ் போட்டியிடுவதாக இன்று அறிவித்துள்ளார்.

சமாஜ்வாதி கட்சி சார்பில் நட்சத்திரப் பேச்சாளர்கள் பட்டியலும் இன்று வெளியிடப்பட்டது. அதிலும் முலாயம் சிங் யாதவ் பெயர் இல்லை. அந்தப் பட்டியலில் அகிலேஷ் யாதவ், ஆசம் கான், டிம்பிள் யாதவ், ஜெயாபச்சன், ராம் கோபால் யாதவ் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

இத்தேர்தலில் முலாயம் சிங் போட்டியிடுவாரா என்கிற சந்தேகம் இருந்த நிலையில், வெற்றிக்கு உத்தரவாதம் அளிக்கும் மெய்ன்பூரி தொகுதியில் மட்டும் போட்டியிடுகிறார்.

உத்தரப் பிரதேசத்தில் உள்ள 80 மக்களவைத் தொகுதிகளில் மாயாவதி தலைமையிலான பகுஜன் சமாஜ் கட்சியுடன் கூட்டணி அமைத்து அகிலேஷ் யாதவ் தலைமையிலான சமாஜ்வாதி கட்சி களம் காண்கிறது. இதில் 80 தொகுதிகளில் 37 தொகுதிகளில் சமாஜ்வாதி கட்சி போட்டியிடுகிறது.

இந்த முறை தான் மக்களவைத் தேர்தலில் போட்டியிடுவதாக முன்னாள் முதல்வராக அகிலேஷ் யாதவ் இன்று அறிவித்துள்ளார்.

அதற்காக உத்தரப் பிரதேசத்தின் கிழக்குப் பகுதியில் உள்ள கடந்த 2014-ம் ஆண்டு தனது தந்தை முலாயம் சிங் யாதவ் போட்டியிட்ட ஆசம்கார்க் தொகுதியில் இந்த முறை அகிலேஷ் யாதவ்  போட்டியிடுவதாக அறிவித்துள்ளார். கடந்த முறை ஆசம்கார்க் தவிர்த்து மெய்ன்பூரியிலும் முலாயம் சிங் போட்டியிட்டு வென்றாலும் அதை ராஜினாமா செய்தார். ஆனால், ஆசம்கார்க் தொகுதியில் 63 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் முலாயம் சிங் கடந்த முறை வென்றார்.

அத்தொகுதியில் இப்போது அகிலேஷ் யாதவ் போட்டியிடுகிறார். உ.பி.யின் கிழக்குப்பகுதியில் பாஜக வலுவாக இருக்குகிறது. இங்குதான் வாரணாசி, கோரக்பூர் தொகுதிகளும் இருக்கின்றன.

ஆசம்கார்க் தொகுதியில் யாதவர்கள், ஜாதவ், முஸ்லிம்கள் என கணிசமான அளவுக்கு இருக்கிறார்கள். குறிப்பாக ஓபிசி அதிகம், ஜாதவர்கள் 56 சதவீதமும், தலித் மக்களும் அதிகமாக இருக்கிறார்கள். தற்போது பகுஜன் சமாஜ் கட்சியின் ஆதரவும் அகிலேஷுக்கு இருப்பதால், இத்தொகுதியில் தலித் வாக்குகளும் எளிதாகக் கிடைக்கும் என்பதால், ஆசம்கார்க் தொகுதியைத் தேர்வு செய்தார்.

கடந்த 1996-ம் ஆண்டில் இருந்து ஆசம்கார்க் தொகுதியில் முஸ்லிம்கள், யாதவர்கள்தான் இங்கு வெற்றி பெற்று வந்துள்ளனர். கடந்த 1996, 1999-ல் சமாஜ்வாதி கட்சி சார்பில் ராமாகாந்த் யாதவும், கடந்த 2004-ம் ஆண்டு பகுஜன் சமாஜ் கட்சியும், 2009-ல் பாஜகவும் வென்றன.

கடந்த 2014-ம் ஆண்டில் சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ் கட்சி இணைந்து ஆசம்கார்க் தொகுதியில் 63 சதவீத வாக்குகளைப் பெற்றன. பாஜக வேட்பாளர் ராமாகாந்த் 28 சதவீத வாக்குகளையே பெற்றார். ஆதலால், இந்த முறை இந்தத் தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர், காங்கிரஸ் வேட்பாளருக்கு மிகப்பெரிய தோல்வி காத்திருக்கிறது

ஆசம் கான் போட்டி

அதேசமயம், கட்சியின் மூத்த தலைவர் ஆசம் கான் ராம்பூரில் களம் இறங்குகிறார். ராம்பூரில் முஸ்லிம்கள் 50 சதவீதம் வரை இருக்கிறார்கள். கடந்த 1980களில் இருந்து 6 முறை முஸ்லிம் வேட்பாளர்கள் வென்று வருகின்றனர். இந்தத் தொகுதியில் பாஜகவும் மூன்று முறை வென்றுள்ளது. கடந்த 2014-ம் ஆண்டில் பாஜகவின் நேபால் சிங்கிடம் 23 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் சமாஜ்வாதி கட்சி தோற்றது. இத்தொகுதியில் பகுஜன் சமாஜ், சமாஜ்வாதி இணைந்தால் வாக்கு சதவீதம் 43 சதவீதத்துக்கும் அதிகமாகும். ஆனால், பாஜகவுக்கு 38 சதவீதத்துக்கு மேல் இல்லை. காங்கிரஸ் கட்சிக்கு 16 சதவீதம் மட்டுமே இருக்கிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x