Published : 22 Mar 2019 06:05 PM
Last Updated : 22 Mar 2019 06:05 PM
மகாராஷ்டிராவில் காங்கிரஸ் கூட்டணியைச் சேர்ந்த முக்கிய தலைவர்கள் பாஜகவில் இணைந்து வருவதாலும், முஸ்லிம் வாக்கு வங்கி பிளவுபடும் சூழல் உள்ளதாலும் பாஜக கூட்டணி கூடுதல் ஆதாயம் ஏற்படும் சூழல் உள்ளது. அதேசமயம் காங்கிரஸ் கூட்டணியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரப் பிரதேசத்துக்கு அடுத்தபடியாக இரண்டாவதாக அதிகமான மக்களவைத் தொகுதிகளை கொண்ட மாநிலம் மகாராஷ்டிரா. இங்கு மொத்தம் 48 மக்களவைத் தொகுதிகள் உள்ளன. இதனால் அடுத்த ஆட்சிக்கு வருவது யார்? என்பதைத் தீர்மானிப்பதில் மகாராஷ்டிராவின் பங்கு மிக முக்கியமானது.
தேசியக் கட்சிகளான பாஜகவும், காங்கிரஸும் வலிமையாக உள்ள இந்த மாநிலத்தில் மாநிலக் கட்சிகளான சிவசேனாவும், தேசியவாத காங்கிரஸும் பலம் பொருந்திய கூட்டாளிகள். கடந்த மக்களவைத் தேர்தலில் பாஜக - சிவசேனா கூட்டணி இதுவரை இல்லாத வகையில் பெரும் வெற்றி பெற்றது.
2014- மக்களவை தேர்தல், மகாராஷ்டிரா
மொத்த தொகுதிகள் | 48 | வாக்கு சதவீதம் |
பாஜக | 24 | 27.30% |
சிவசேனா | 18 | 20.60% |
தேசியவாத காங்கிரஸ் | 4 | 16.00% |
காங்கிரஸ் | 2 | 18.10% |
இதைத் தவிர பாஜகவுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்ட சுவாபிமாண் பக்ஷா கட்சி ஒரு தொகுதியில் வெற்றி பெற்றது.
மகாராஷ்டிராவில் பாஜகவுடன் சிவசேனா நீண்டகால கூட்டாளி. கடந்த மக்களவைத் தேர்தல் வரை தொடர்ந்து வந்த இந்தக் கூட்டணி, அதன் பிறகு நடந்த மாநில சட்டப்பேரவை தேர்தலில் முறிந்தது. யாருக்கு அதிக தொகுதிகள் என்ற போட்டியில் இருகட்சிகளும் தனித்துப் போட்டியிட்டன. எனினும் யாருக்கும் பெரும்பான்மை இல்லாத நிலையில் தேர்தலுக்குப் பிந்தைய கூட்டணி ஆட்சியை அமைத்தன.
முஸ்லிம் வாக்கு வங்கி
மத்தியிலும், மாநிலத்திலும் பாஜக கூட்டணியில் சிவசேனா நீடித்து வருகிறது. சமீபகாலமாக பிரதமர் மோடியை கடுமையாக விமர்சித்து வந்த சிவசேனா கடைசி நேரத்தில் பாஜகவுடன் கூட்டணி அமைத்துப் போட்டியிடுகிறது. காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் இந்தத் தேர்தலில் கூட்டணி அமைத்துப் போட்டியிடுகின்றன. இந்நிலையில், உ.பி.யைப் போலவே மகாராஷ்டிராவில் அகிலேஷ் தலை மையிலான சமாஜ்வாதி - மாயாவதி தலைமையிலான பகுஜன் சமாஜ் கட்சிகள் கூட்டணி அமைத்து 48 தொகுதிகளிலும் போட்டியிட முடிவு செய்துள்ளன. மேலும், வேட்பாளர்கள் விரைவில் அறிவிக்கப்படுவார்கள் என்று கூட்டணித் தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.
அதுபோலவே, அசாதுதீன் ஓவைசி தலைமையிலான ஏஐஎம் ஐஎம் கட்சி, பிரகாஷ் அம்பேத்கரின் வஞ்சித் பகுஜன் அஹாதி (விபிஏ) தலித் அமைப்புடன் கூட்டணி வைத்துள்ளன. இதனால் பல தொகுதிகளில் மும்முனைப் போட்டி ஏற்பட்டுள்ளது. இதன் மூலம் முஸ்லிம்களின் வாக்குகள் பிரியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
காங்கிரஸ் கூட்டணி
இதுமட்டுமின்றி காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சிகளைச் சேர்ந்த மூத்த தலைவர்கள் அந்தந்த கட்சிகளில் இருந்து விலகி பாஜகவில் ஐக்கியமாகி வருகின்றனர். அகமது நகரைச் சேர்ந்த மகாராஷ்டிரா காங்கிரஸில் மூத்த தலைவரும், எதிர்க்கட்சி தலைவருமான ராதாகிருஷ்ண விகே பாட்டீலின் மகன் சுஜாய் விகே பாட்டீல் பாஜகவில் இணைந்துள்ளார்.
இது காங்கிரஸ் தலைமைக்கும், மகாராஷ்டிர காங்கிரஸாருக்கும் பெரும் அதிர்ச்சியைக் கொடுத்தது. 60 ஆண்டுகளுக்கும் மேலாக ராதாகிருஷ்ண விகே பாட்டீலின் குடும்பத்தார் காங்கிரஸில் இருந்து வருகின்றனர். ராதாகிருஷ்ண விகே பாட்டீலின் தந்தை பாலாசாகேப் பாட்டீலும் காங்கிரஸ் கட்சியின் முக்கியத் தலைவராக விளங்கினார்.
மேலும் ஆசியாவின் முதலாவது கூட்டுறவு சர்க்கரை ஆலையைத் தொடங்கியவர் பாலா சாகேப்பின் தந்தையான விட்டல்ராவ் விகே பாட்டீல் என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் இவர்களது சொந்த ஊரான அகமது நகரில் விகே பாட்டீல் குடும்பத்தாருக்கு அதிக செல்வாக்கு உள்ளது.
தேசியவாத காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த முன்னாள் துணை முதல்வர் விஜய்சிங் மொகித் பாட்டிலின் மகனும், மாநிலங்களவை உறுப்பினருமான ரஞ்சித்சிங் பாஜகவில் இணைந்தார். தேசியவாத காங்கிரஸ் மூத்த தலைவரும், அக்கட்சியின் மாநிலத் துணைத் தலைவருமான பாரதி பவார், பாஜகவில் விரைவில் இணையவுள்ளதாக அறிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT