Published : 03 Mar 2019 05:16 PM
Last Updated : 03 Mar 2019 05:16 PM
பாகிஸ்தானில் ராணுவத்தினரால் விடுவிக்கப்பட்ட இந்திய விமானப்படை வீரர் அபிநந்தனுக்குப் பெருமை சேர்க்கும் விதத்தில், இளைஞர்கள் பலர் அபிநந்தன் வைத்திருக்கும் மீசை போல் தங்கள் மீசையையும் வடிவமைத்துக் கொள்வதில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
புல்வாமா தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்கும் விதமாக பாகிஸ்தான் பாலகோட் பகுதியில் தீவிரவாத முகாம்கள் மீது இந்திய விமானப் படை தாக்குதல் நடத்தி திரும்பியது.
அப்போது, மிக் ரக விமானத்தை இயக்கிய விங் கமாண்டர் அபிநந்தன், பாகிஸ்தானின் எப்-16 வகை விமானத்தை சுட்டு வீழ்த்திய பின் விமானத்தில் கோளாறு ஏற்பட்டது.
இதனால், பாராசூட் மூலம் உயிர் தப்பிய அபிநந்தன் பாகிஸ்தான் பகுதிக்குள் விழுந்தார். அவரை ராணுவத்தினர் கைது செய்தனர். இரு நாட்களுக்குப் பின் சர்வதேச அழுத்தம் காரணமாக பாகிஸ்தான் ராணுவம் நேற்று முன்தினம் இரவு வாகா எல்லையில் அபிநந்தனை இந்திய அதிகாரிகளிடம் ஒப்படைத்தது.
அபிநந்தனின் வீரத்தையும், துணிச்சலையும் நாட்டு மக்கள் அனைவரும் புகழந்தும், வரவேற்றும் வருகின்றனர். உண்மையான ஹீரோவாக மக்கள் மத்தியில் ஜொலித்து வருகிறார் அபிநந்தன். அபிநந்தனுக்குப் புகழாரம் சூட்டும் வகையில் இளைஞர்கள் பலர் அபிநந்தன் வைத்திருக்கும் மீசையைப் போல் தங்கள் மீசையையும் வடிவமைத்துக் கொள்வதில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
கடந்த இரு நாட்களாக ட்விட்டர், ஃபேஸ்புக் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் அபிநந்தன் வைத்திருக்கும் மீசை குறித்த விவாதம் தீவிரமாக இருந்து வருகிறது. தாடி வைத்திருக்கும் ஏராளமான இளைஞர்கள் சலூன் கடை நோக்கி படையெடுத்து தங்கள் தாடியை மழித்து அபிநந்தன் மீசை வைக்க ஆர்வம் காட்டி வருகின்றனர்.
பெங்களூரில் சலூன் கடை வைத்திருக்கும் ஏராளமான சலூன் கடைகளில் அபிநந்தனைப் போல் மீசை வைத்துக் கொள்ளும் இளைஞர்களுக்கு 50 சதவீதம் கட்டணத்தில் தள்ளுபடி அளிக்கப்படுகிறது. இதனால், இளைஞர்கள் மத்தியில் இந்த மீசை டிரெண்டாகி வருகிறது.
இது தொடர்பாக பெங்களூரைச் சேர்ந்த சாந்த் முகமது(வயது 32) கூறுகையில், "அபிநந்தன் துணிச்சல் மிக்க வீரர். அவரின் மீசை எதிரிகளுக்கு அச்சத்தையும், வீரத்தையும் பறைசாற்றுகிறது. சல்மான்கான், அமீர்கான் என்னுடைய ஸ்டைல் குருவாக இருந்தாலும், அபிநந்தன்தான் என்னுடைய குரு. அதனால் அவரைப் போல் மீசை வைத்தேன். செகந்திராபாத்தில் உள்ள என்னுடைய உறவினர் அபிநந்தன் போல் மீசை வைத்து இன்று காலையில் வாட்ஸ்அப்பில் புகைப்படம் அனுப்பினார். அதைப் பார்த்து நானும் வைத்துக்கொண்டேன்" எனத் தெரிவித்தார்.
பெங்களூரில் சலூன் கடை வைத்திருக்கும் சமீர் கான் கூறுகையில், " இன்று காலையில் இருந்து 15-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் என்னிடம் அபிநந்தன் போன்று மீசை வைக்க வேண்டும் என்று விரும்பி அதைப் போன்று மீசை வைத்துச் சென்றுள்ளார்கள்" எனத் தெரிவித்தார்.
தற்போது மெல்லப் பரவி வரும் அபிநந்தன் மீசை ஸ்டைல், அடுத்த சில நாட்களில் நாடு முழுவதும் இளைஞர்கள் மத்தியில் அபிநந்தனின் கன்ஸ்லிங்கர் மீசை டிரெண்டாகப் போகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT