Published : 20 Mar 2019 02:13 PM
Last Updated : 20 Mar 2019 02:13 PM
தங்கள் நண்பரைத் தாக்கிய பேராசிரியருடன் சமரசம் பேச வந்துள்ளதாக கூறிக்கொண்டு நுழைந்த வெளியாட்கள் தாக்கியதால் ஆசிரியர்கள் காயமடைந்த சம்பவம் ராஜஸ்தான் பல்கலை. ஒன்றில் நேற்று நடந்தது.
ஜூன்ஜூனு நகரில் அமைந்துள்ள ஜக்தீஷ் பிரசாத் டிப்ரெவாலா பல்கலைக்கழக வளாகத்தில் நடந்த இச்சம்பவம் குறித்து சதார் காவல்நிலைய அதிகாரி சுரேஷ் குமார் ஏஎன்ஐயிடம் தெரிவித்ததாவது:
''பல்கலை. வளாகத்தில் ஏதோ சண்டை நடைபெறுவதாக தகவல் கிடைத்ததை அடுத்து போலீஸார் செல்வதற்குள் அங்கே மிகப்பெரிய சண்டையே நடந்து கொண்டிருந்தது. வெளியாட்கள் இருவரும் பேராசிரியரைத் தாக்குவதற்காகவே அங்கு வந்துள்ளனர் என்பதை நாங்கள் தெரிந்துகொண்டோம்.
எங்களைப் பார்த்ததும் சண்டையை நிறுத்தினர். இதில் இரு பேராசிரியர்கள் காயமடைந்திருந்தனர். வெளியாட்கள் இருவரும் காயமடைந்திருந்தனர். பிறகு வளாகத்திற்குள் நுழைந்தவர்களிடம் விசாரித்தோம்.
அதில் ஒருவர் கூறுகையில், ''இப்பல்கலைக்கழகப் பேராசிரியர் ஒருவர் என் உறவினரை அறைந்தார். இதனை வந்து நேரில் விசாரிக்குமாறு என் உறவினர் என்னை அழைத்தார். நானும் என் நண்பனும் என்ன நடந்தது என்பதைக் கேட்பதற்காக அங்கு சென்றோம். ஆனால் அங்கு சென்றதும் ஆசிரியர்களும் கல்லூரி ஊழியர்களும் எங்களைப் பலமுறை தாக்கினர்'' என்று அழுதுகொண்டே தெரிவித்தார்.
முழுமையாக விசாரித்ததில் சில தினங்களுக்கு முன் நடந்த ஒரு பிரச்சினையில் ஆசிரியர் மாணவரைத் திட்டியிருக்கிறார். இதனால் ஆத்திரமடைந்த மாணவர் ஆசிரியரைத் தாக்கும் நோக்கத்துடனேயே தனது நண்பர்களை அழைத்து வந்ததாகத் தெரிகிறது''.
இவ்வாறு சதார் காவல்நிலைய அதிகாரி தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT