Published : 19 Mar 2019 02:54 PM
Last Updated : 19 Mar 2019 02:54 PM
மக்களவைத் தேர்தலுக்குப் பிறகு எந்தக் கூட்டணிக்கும் பெரும்பான்மை கிடைக்காது சில கருத்துக் கணிப்புகள் தெரிவித்துள்ள நிலையில் பாஜக, காங்கிரஸ் கட்சிகளுக்கு மாற்றாகப் போட்டியிடும் தெலங்கானா ராஷ்டிர சமிதி எந்த அளவுக்கு வெற்றி பெறும் என்ற கேள்வி எழுந்துள்ளது.
ஒருங்கிணைந்த ஆந்திர மாநிலத்தில் இருந்து 2014-ம் ஆண்டு தனியாகப் பிரிந்து தெலங்கானா மாநிலம் உருவானது. தெலங்கானா மாநிலம் உருவாக பெரும் போராட்டம் நடத்தி வென்றி கண்ட தெலங்கானா ராஷ்டிர சமிதியும், அதன் தலைவர் சந்திரசேகர் ராவும் இந்த மாநிலத்தைப் பொறுத்தவரை அசைக்க முடியாத சக்திகள்.
கடந்த 2014-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலுடன் சேர்ந்து நடந்த சட்டப் பேரவை தேர்தலில், சந்திரசேகர் ராவ் தலைமையிலான தெலங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சி வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது.
மக்களவைத் தேர்தலுடன் சேர்ந்து தான் சட்டப்பேரவைத் தேர்தல் நடத்தப்பட வேண்டும். ஆனால் சட்டப்பேரவையைக் கலைத்துவிட்டு 6 மாதங்கள் முன்கூட்டியே டிசம்பரில் தேர்தலைச் சந்தித்தார் சந்திரசேகர் ராவ். மக்களவைத் தேர்தலில் பாஜக மற்றும் காங்கிரஸின் ஆதிக்கம் அதிகம் இருக்கும் என்பதால் அதன் தாக்கம் சட்டப்பேரவைத் தேர்தலிலும் எதிரொலிக்கும் என சந்திரசேகர் ராவ் கருதினார்.
மோடி அலை வீசினாலும் சரி, பாஜக எதிர்ப்பு அலை வீசினாலும் சரி அதனால் எதிராளியான காங்கிரஸுக்கே பயன் கிட்டும் என்பதால் முன்கூட்டியே சட்டப்பேரவைத் தேர்தலை எதிர்கொண்டு பெரும் வெற்றி பெற்று மீண்டும் முதல்வராகப் பதவியில் அமர்ந்தார் சந்திரசேகர் ராவ்.
தெலங்கானா ராஷ்டிர சமிதியை வீழ்த்த காங்கிரஸுடன் கரம் கோத்த ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் முயற்சி சட்டப்பேரவைத் தேர்தலில் பலன் அளிக்கவில்லை. தனித்துப் போட்டியிட்ட பாஜகவும் தோல்வியைச் சந்தித்தது.
2018-ம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் தெலங்கானாவில் மொத்தமுள்ள 119 தொகுதிகளில் தெலங்கானா ராஷ்டிர சமிதி 88 இடங்களில் வெற்றி பெற்றது. முந்தைய தேர்தலுடன் ஒப்பிடுகையில் கூடுதலாக 25 இடங்களை வென்றது. அக்கட்சியின் ஆதரவுடன் போட்டியிட்ட ஏஐஎம்ஐஎம் 7 இடங்களை வென்றது. அதேசமயம் எதிர்க்கட்சியான காங்கிரஸ் 19 தொகுதிகளில் மட்டுமே வென்றது. முந்தைய தேர்தலில் 15 இடங்களில் வென்ற தெலுங்கு தேசம் 2018 சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் கூட்டணியில் 2 இடங்களில் மட்டுமே வென்றது. தனித்துப் போட்டியிட்ட பாஜக ஓரிடத்தில் மட்டுமே வென்றது.
2014- மக்களவைத் தேர்தல், தெலங்கானா
மொத்த தொகுதிகள் | 17 | வாக்கு சதவீதம் |
தெலங்கானா ராஷ்டிர சமிதி | 11 | 39.90%
|
காங்கிரஸ் | 2 | 20.5%
|
தெலுங்கு தேசம் | 1 | 3.7%
|
பாஜக | 1 | 8.50%
|
ஓய்எஸ்ஆர் காங் | 1 | 2.90%
|
ஏஐஎம்ஐஎம் | 1 | 1.40%
|
2019 மக்களவைத் தேர்தல்
நடைபெறவுள்ள மக்களவைத் தேர்தலில் தெலங்கானா ராஷ்டிர சமிதி தனித்துப் போட்டியிடும் நிலையில், காங்கிரஸ், தெலுங்கு தேசத்துடன் கூட்டணி அமைத்துப் போட்டியிட விரும்பியது. ஆனால் 2018-ம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலில் ஏற்பட்ட படுதோல்வியால் தெலுங்கு தேசத்துடன் கூட்டணி அமைக்க காங்கிரஸ் விரும்பவில்லை. பாஜக, ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சிகளும் தனியாகக் களம் காண்கின்றன.
இம்மாநிலத்தில் தற்போதைய நிலவரப்படி ஆளும் தெலங்கானா ராஷ்டிர சமிதி மக்களவைத் தேர்தலிலும் பெரும் வெற்றி பெறும் என சமீபத்திய கருத்துக் கணிப்புகள் தெரிவிக்கின்றன. தெலங்கானாவில் உள்ள 17 மக்களவைத் தொகுதிகளில் 15 தொகுதிகள் வரை தெலங்கானா ராஷ்டிர சமதி வெற்றி பெறும் என கருத்துக் கணிப்புகள் கூறுகின்றன. அதற்கு ஏற்பவே சந்திரசேகர் ராவும் தனது பிரச்சார வியூகத்தை வகுத்து செயல்பட்டு வருகிறார்.
மக்களவைத் தேர்தலில் எந்தக் கட்சிக்கும் அறுதிப் பெரும்பான்மை இல்லை என கூறப்படும் நிலையில் சந்திரசேகர் ராவ் பெறப்போகும் வெற்றிகள் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. பாஜக - காங்கிரஸ் இரண்டு கட்சிகளையும் சம தூரத்தில் வைத்திருக்கும் சந்திரசேகர் ராவின் அரசியல் அவருக்கு தேர்தல் வெற்றியைக் கொடுக்கலாம்.
ஆனாலும் தேர்தலுக்குப் பிறகு இரு கட்சிகளையும் தவிர்த்து விட்டு மத்தியில் ஒரு அரசு அமைய வாய்ப்பில்லை. பாஜக, காங்கிரஸ் அல்லாத மாற்று அணி என்கிற சந்திரசேகர் ராவின் முழுக்கம் தேசிய அரசியலில் வெற்றி பெறுமா என்பது சந்தேகமே.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT