Last Updated : 16 Mar, 2019 09:24 AM

 

Published : 16 Mar 2019 09:24 AM
Last Updated : 16 Mar 2019 09:24 AM

பூலான் தேவி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட ஷேர்சிங் ராணா தேர்தலில் போட்டி

உத்தரபிரதேச மாநிலத்தில் சமாஜ்வாதி கட்சியின் எம்பியாக இருந்த பூலான்தேவி, 2001-ல் சுட்டுக் கொல்லப்பட்டார். இதில் கொலை குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட ஷேர்சிங் ராணா. உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு செய்துள்ளார். தற்போது ஜாமீனில் உள்ளார். மேலும் ராஷ்டிரவாதி ஜன்லோக் (ஆர்ஜேபி) என்ற கட்சியை நடத்தி வருகிறார்.

இதுகுறித்து ராணா கூறும்போது, ‘ஹரியானாவின் கர்னால் மற்றும் உ.பி.யின் கவுதம் புத் நகர் ஆகிய தொகுதிகளில் போட்டியிடுவோம். இதற்காக தேசிய கட்சிகளுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம். ஓரிரு தினங்களில் அதன் இறுதி முடிவு அறிவிக்கப்படும்’ என்றார்.

தேர்தலில் ராணா போட்டியிடுவது இது முதன்முறை அல்ல. இதற்கு முன் 2012 உ.பி. சட்டப்பேரவை தேர்தலில் ஜேவர் தொகுதியில் போட்டியிட்டு தோற்றார். பூலான்தேவி கொலை வழக்கில் சிக்கிய ராணாவை டெல்லி உயர் நீதிமன்றம் குற்றவாளி என 2014-ல் அறிவித்தது.

இதற்காக, ஆயுள் தண்டனையுடன் ரூ.1 லட்சம் அபராதமும் விதித்திருந்தது.

உத்தராகண்டை சேர்ந்த பகுஜன் சமாஜின் முன்னாள் எம்பியின் மகளை கடந்த வருடம் திருமணம் செய்து ராணா பரபரப்பை ஏற்படுத்தினார். இதற்கு முன் 2004-ல் டெல்லியின் திஹார் சிறையில் இருந்து தப்பினார் ராணா. பிறகு மீண்டும் கைதானவர், ஆப்கானிஸ்தானில் உள்ள தம் தாகூர் வம்சத்தின் அரசர் பிருதிவிராஜ் சவுகான் சமாதிக்கு அஞ்சலி செலுத்த சென்றதாகவும் தெரிவித்திருந்தார்

உ.பி.யின் ஜலோன் மாவட்டத்தின் கால்பியில் உள்ள பேமாய் கிராமத்தை சேர்ந்தவர் பூலான் தேவி. இக்கிராமத்தின் உயர் சமூகத்தினரால் பாலியல் சித்தரவதைக்கு உள்ளானதால் பழி தீர்க்க துப்பாக்கி ஏந்தினார்.

தன்னை சித்தரவதைக்குள்ளாக்கிய தாக்கூர் சமூகத்தினர் 22 பேரை பேமாய் கிராமத்தில் சுட்டுக் கொலை செய்தார். இதன் பிறகு பிரபலமாகி ‘சம்பல் ராணி’ என்றழைக்கப்பட்டார். பிறகு சரணடைந்த பூலான்தேவியை, தனது சமாஜ்வாதியில் சேர்த்தார் முலாயம்சிங். பிறகு, மக்களவை தேர்தலில் உபியின் மிர்சாபூர் தொகுதியிலும் போட்டியிட்டு இருமுறை எம்.பி.யாக இருந்த அவர், 2001-ல் சுட்டுக் கொல்லப்பட்டார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x