Last Updated : 02 Mar, 2019 11:03 AM

 

Published : 02 Mar 2019 11:03 AM
Last Updated : 02 Mar 2019 11:03 AM

அபிநந்தனுக்கு முதல் எண் ஜெர்ஸி: வானையும், எங்கள் மனங்களையும் ஆளுகிறாய்: புகழாரம் சூட்டிய பிசிசிஐ

பாகிஸ்தானில் இருந்து தாயகம் திரும்பிய அபிநந்தனை தேசமே புகழ்ந்து வரும் நிலையில் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம்(பிசிசிஐ) வித்தியாசமாக புகழாரம் சூட்டியுள்ளது.

புல்வாமா தாக்குதலுக்கு பதிலடியாக  பாகிஸ்தான் எல்லைக்குள் சென்று தாக்குதல் நடத்தியபோது, அந்நாட்டு விமானப்படையால் இந்திய விமானப்படை வீரர் அபிந்தன் வர்த்தமான் சிறைபிடிக்கப்பட்டார். அதன்பின் சர்வதேச அழுத்தம், இந்தியாவின் நெருக்கடிகள் காரணமாக, அபிநந்தன் இரண்டரை நாட்களுக்குப்பின் நேற்று இரவு 9.20 மணிக்கு அடாரி-வாகா எல்லையில் இந்திய அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டார்.

தாயகம் திரும்பும் அபிநந்தனை வரவேற்க ஏராளமான மக்கள் காத்திருந்தனர். தாயகத்துக்குள் அபிநந்தன் வந்ததும் அவரை வரவேற்று அரசியல் கட்சித் தலைவர்கள், சினிமா, விளையாட்டு பிரபலங்கள் பலர் ட்விட்டரில் வாழ்த்துத் தெரிவித்தனர்.

இதில் வித்தியாசமாக இந்தியக் கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம்(பிசிசிஐ) அபிந்தனுக்கு புகழாரம் சூட்டி தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டது.

உலகக்கோப்பை போட்டியில் பங்கேற்கும் இந்திய அணிக்கான ஆடை(ஜெர்ஸி) அறிமுகம் நேற்று நடந்தது. அந்த ஆடை வெளிர்நீலம், அடர்நீலம் கலந்து வடிவமைக்கப்பட்டு இருந்தது. ஒவ்வொரு வீரருக்கும், ஒவ்வொரு ஆடையிலும் பிரத்யேக எண் வழங்கப்பட்டு  இருக்கும்.

அந்த வகையில் அபிநந்தனுக்கு புகழாரம் சூட்டும் வகையில் ஜெர்ஸியில் 'விங் கமாண்டர் அபிநந்தன்' என்று பெயரிட்டு,  முதல் எண்ணை  வழங்கி அவருக்குப் புகழாரம் சூட்டப்பட்டது.

மேலும், ட்விட்டரில் வெளியிட்ட செய்தியில், " அபிநந்தனை வரவேற்கிறோம். வானையும் ஆள்கிறாய், எங்கள் மனங்களையும் ஆள்கிறாய். உன்னுடைய துணிச்சலும், மரியாதையும் அடுத்து வரும் தலைமுறைக்கு உதாரணமாக இருக்கும் " எனத் தெரிவிக்கப்பட்டு இருந்தது.

மேலும், இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி ட்விட்டரில் கூறுகையில், " உண்மையான ஹீரோ உங்களுக்கு தலைவணங்குகிறேன், ஜெய்ஹிந்த்" எனத் தெரிவித்துள்ளார். சச்சின் டெண்டுல்கரின் ட்வீட்டில் ". உங்களுடைய துணிச்சல், சுயநலமின்மை, பாதுகாப்புணர்வு மூலம் ஹீரோ என்ற 4 எழுத்து வார்த்தைக்கு அதிகமாக கற்றுக்கொடுத்துவிட்டாய். எங்களுடைய ஹீரோ எங்கள் மீதான நம்பிக்கையை அதிகரிக்கச் செய்துள்ளார் " எனத் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x