Published : 20 Sep 2014 11:02 AM
Last Updated : 20 Sep 2014 11:02 AM
வெள்ள சேதத்திலிருந்து இன்னும் பாதியளவு கூட மீளாத நிலையில் ஜம்மு-காஷ்மீர் மாநிலத்துக்கு புதிய சிக்கல் எழுந்துள்ளது. அங்கு 15 வயதுக்கு உட்பட்ட 13 லட்சம் குழந்தைகளுக்கு தட்டம்மை தடுப்பூசி போட வேண்டிய நிலையில், ஒரு லட்சம் தடுப் பூசிகளே கையிருப்பில் உள்ளன.
இதனால், 12 லட்சம் அம்மை தடுப்பூசிகளை வெளிச்சந்தையில் வாங்க மாநில அரசு முடிவு செய்துள்ளது.
இது தொடர்பாக ஜம்மு-காஷ்மீர் முதல்வர் ஒமர் அப்துல்லா கூறியதா வது: 15 வயதுக்கு உட்பட்ட 13 லட்சம் குழந்தைகளுக்கு அம்மை தடுப்பூசி போட வேண்டியுள் ளது. அப்போதுதான் அம்மை நோய் பேரழிவிலிருந்து தற்காத்துக் கொள்ள முடியும். ஆனால், மத்திய அரசிடமிருந்து இதுவரை ஒரு லட்சம் அம்மைத் தடுப்பூசிகளை கிடைக்கப்பெற்றுள்ளன. எஞ்சிய 12 லட்சம் அம்மைத் தடுப்பூசிகளை மத்திய அரசிடமிருந்து வரும்வரை காத்திருக்காமல், வெளிச் சந்தையில் வாங்கும்படி அதிகாரி களுக்கு உத்தரவிடப் பட்டுள்ளது.
மத்திய அரசு மிகவும் உதவி கரமாக உள்ளது. இருப்பினும் எதிர்பார்த்த தேவைகளை முழுமை யாகப் பெறுவதற்கு வெள்ளம் இடையூறாக உள்ளது. நேற்றைய தினம்வரை முதல்வர் நிவாரண நிதியில் ரூ.55 கோடி வைப்பு நிதியாகச் செலுத்தப் பட்டுள்ளது. இதில் பெரும்பாலும் 7, 8 மாநிலங்களால் கொடுக்கப் பட்டவை. அதிகபட்ச தொகையை உ.பி. முதல்வர் அகிலேஷ் யாதவ் கொடுத்துள்ளார். அவருக்கு நன்றி. மற்ற மாநிலங்கள் ரூ. 5 கோடி கொடுத்துள்ளன. குளோரின் மாத்திரைகள் வாங்குவதற்கும், தடுப்பூசி வாங்குவதற்கும் போதிய நிதி உள்ளது. 50 லட்சம் குளோரின் மாத்திரைகளுக்கான தேவையுள்ள நிலையில், இதுவரை 10 லட்சம் மாத்திரைகள் தருவிக்கப்பட் டுள்ளன. என்னவெல்லாம் வாங்க வேண்டியிருக்குமோ அவற்றை வெளிச்சந்தையில் வாங்கவும் முயற்சி செய்கிறோம்.
வெள்ள சேதத்தால் ஏற்பட்ட மொத்த இழப்பு எவ்வளவு என்பதை முன்கூட்டியே கூறுவது கடினம். இறுதிகட்ட மதிப்பீடுக்குப் பிறகே, மத்திய அரசை அணுகுவோம். ஆனால், நிச்சயமாக சேதமதிப்பு பல ஆயிரம் கோடியாக இருக்கும்.
வீடுகள், கடைகள், வர்த்தக அமைப்புகள், சாலைகள், பாலங்கள், குடிநீர் விநியோக கட்ட மைப்புகள், வேளாண் பயிர்கள் என அனைத்துத் துறைகளிலும் சேதம் அதிகமாக உள்ளது.
உதாரணமாக இரு நாட்க ளுக்கு முன் அனந்த்நாக் மாவட்டத்தில் 1,500 வீடுகள் முற்றிலும் சேதமடைந் ததாகத் தெரியவந்தது. தற்போது இந்த எண்ணிக்கை 8,000-ஐ தாண்டி யுள்ளது, என்றார்.
நெருங்கும் குளிர்காலம்.. தவிப்பில் மக்கள்..
குளிர்காலம் நெருங்கிக் கொண்டிருப்பது ஜம்மு-காஷ்மீர் மக்களை மேலும் கவலைக்குள்ளாக்கியி ருக்கிறது. ஏற்கெனவே பல ஆயிரக்கணக்கானோர் வீடுகளை முற்றிலும் இழந்து விட்டனர். மேலும் ஆயிரக்கணக்கானோரின் வீடுகள் உடனடியாக மீண்டும் வசிப்பதற்கு ஏதுவானவையாக இல்லை. இன்னும் சில ஆயிரக்கணக்கானோரின் வீடுகளைப் புதுப்பிக்க கால அவகாசம் இல்லை. வெள்ளம் முற்றிலுமாக வடியவில்லை.
ஆனால், அதற்குள் குளிர்காலம் நெருங்கி விட்டது. தற்போதே, இரவு நேரத்தில் தட்பவெட்ப நிலை 7-8 டிகிரி செல்சியஸாக உள்ளது. இதனால், குளிர்தாங்காமல் மக்கள் தவித்து வருகின்றனர். குளிர்காலத்தின் உச்ச கட்ட குளிரை எதிர்கொள்வதற்கு அம்மக்கள் இன்னும் தயாராகவில்லை.
குறிப்பாக ஸ்ரீநகர், மேஜூர் நகர், சட்டாபால், பெமினா பகுதிகளில் ஏழைமக்கள் அதிக அளவில் வசிக் கின்றனர். மற்ற மாநிலங்களிலிருந்து புலம் பெயர்ந்து, வாகன ஓட்டிகளாகவும், படகோட்டிகளாகவும் சுற்றுலாப் பயணிகளை நம்பி வாழ்பவர்கள் ஏராளம். இவர்களுக்கு குடியிருப்பு வசதி ஏற்படுத்திக் கொடுப்பது மாநில அரசின் முன் உள்ள மிகப்பெரிய சவாலாகும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT