Published : 21 Mar 2019 11:43 AM
Last Updated : 21 Mar 2019 11:43 AM
மக்களவை தேர்தலில் கூட்டணிக்காக மற்ற கட்சிகளுடன் பேச காங்கிரஸ் அமைத்த குழு செயல்படாமல் இருப்பது தெரியவந்துள்ளது.
ஏ.கே.அந்தோனி தலைமையிலான இக்குழுவின் உறுப்பினர்களாக அகமது பட்டேல், குலாநபி ஆசாத் மற்றும் அசோக் கெல்லோட் ஆகியோர் இடம் பெற்றிருந்தனர்.
கடந்த சில மாதங்களுக்கு முன் இந்தக் குழு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியால் அமைக்கப்பட்டது. இக்குழுவினர் மற்ற அரசியல் கட்சி தலைவர்களிடம் பேசி தேர்தலில் போட்டியிட கூட்டணிக்கான தொடக்ககட்ட பேச்சுவார்த்தை நடத்தும் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால், இக்குழு இதுவரையும் ஒரு கட்சி தலைவருடனும் பேசியதாகத் தெரியவில்லை. இந்த பணிக்காக அவ்வாறு ஒரு குழுவை காங்கிரஸ் அமைத்திருப்பதாகவும் மற்ற கட்சிகளுக்கு தெரியாமல் போனது.
புதிய கட்சிகளிடம் பேசவில்லை என்றாலும், ஏற்கனவே உள்ள காங்கிரஸின் கூட்டணி உறுப்பினர்களிடமும் அக்குழுவினர் பேசாமல் இருந்ததாகக் கூறப்படுகிறது. இவர்களுடன் பேச்சுவார்த்தைகளை ராகுல் காந்தியே நேரடியாகப் பேசி உள்ளார்.
வழக்கமாக இதுபோன்ற குழுக்களை கூட்டணிக்காகப் பேச அமைக்கப்பட்ட பின் அவர்கள் தொடக்கக் கட்ட பேச்சுவார்த்தையை மற்ற கட்சிகளுடன் பேசி முடிப்பர். பிறகு கடைசிக்கட்டமாக காங்கிரஸ் தலைவரால் பேசப்பட்டு கூட்டணி இறுதி செய்யப்படும் வழக்கமாக இருந்தது.
இந்தமுறை அதுபோல் அன்றி தமிழகத்தின் திமுக, கர்நாடகாவின் மதசார்பற்ற ஜனதா தளம் ஆகிய கட்சிகள் ராகுலிடம் நேரடியாகப் பேசி கூட்டணியை முடித்திருந்தனர். மகாராஷ்டிராவின் கூட்டணிக் கட்சியான தேசிய்வாதக் காங்கிரஸ் தலைவர் சரத்பவாரும் ராகுலுடன் நேரடியாகவே பேசி இருந்தார்.
மேற்கு வங்க மாநிலத்தில் கூட்டணிக்காக மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சியின் தேசிய செயலாளரான சீதாராம் யெச்சுரியும் நேரடியாக ராகுலையே சந்தித்து பேசினார். எனினும், டெல்லியில் ஆம் ஆத்மி கட்சியிடம் கூட காங்கிரஸ் அமைத்த குழுவினர் பேசவில்லை.
ஆம் ஆத்மி தலைவர்களுடன் டெல்லியின் முன்னாள் முதல்வரும் காங்கிரஸ் மாநிலத் தலைவருமான ஷீலா தீட்சித் பேசினார். இந்த பேச்சுவார்த்தையில் பலனில்லை என்பதால் ராகுல் அதில் நேரடியாகத் தலையிட்டிருந்தார்.
டெல்லி மற்றும் மேற்குவங்க மாநிலங்களில் இதுவரையும் கூட்டணி அமையாமல் இருக்க ராகுலின் நேரடி தலையீடே காரணம் எனக் கருதப்படுகிறது. உ.பி.யில் மட்டும் காங்கிரஸின் புதிய பொதுச்செயலாளரான பிரியங்கா வதேரா கூட்டணி பேசி வருகிறார்.
ஆனால், உ.பி.யில் அப்னா தளம் கட்சியின் கிருஷ்ணா பட்டேல் பிரிவு மற்றும் மஹான் தளம் ஆகிய சிறிய கட்சிகளே காங்கிரஸ் கூட்டணியில் வந்துள்ளன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT