Published : 02 Mar 2019 02:03 PM
Last Updated : 02 Mar 2019 02:03 PM
காஷ்மீரில் நேற்று மாலை நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில் இந்தியா தரப்பில் நான்குபேர் உயிரிழந்ததைத் தொடர்ந்து துப்பாக்கிச் சண்டை நிறுத்தப்பட்டுள்ளது. எனினும் தேடுதல் வேட்டை மட்டும் தொடர்வதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்த விவரம் வருமாறு:
குப்வாரா மாவட்டம், ஹேண்ட்வாரா நகரில் தீவிரவாதிகளுடன் நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில் படுகாயமுற்று இரு போலீஸ்காரர்கள் உள்ளிட்ட நான்கு பேர் உயிரிழந்தனர். இச்சண்டையில் பொதுமக்களில் ஒருவரும் உயிரிழந்தார்.
ஹாண்ட்வாராவில் உள்ள பாபாகுண்ட் பகுதியில் உள்ள தீவிரவாதிகளின் நடமாட்டம் குறித்து நேற்று மாலை (வெள்ளிக்கிழமை) கிடைத்த நம்பகமான தகவல் ஒன்றின் அடிப்படையில் போலீசார் மற்றும் பாதுகாப்புப் படையினர் குவிக்கப்பட்டு தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
அங்கிருந்த தீவிரவாதிகள் அப்போது தேடுதல் வேட்டையில் ஈடுபட்டவர்களை நோக்கி கண்மூடித்தனமாக சுட்டதால் துப்பாக்கிச் சண்டை மோதல் வெடிக்கத் தொடங்கியது.
இச்சண்டையின்போது உயிரிழந்த காவல்துறை பணியாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதில் ஒருவர் அஹமத் கோலி இன்னொருவர் குலாம் முஸ்தபா பாரா என்பதும் அவர்கள் இருவரும் தேர்வுநிலை காவலர்கள் என்பதும் தெரியவந்துள்ளது. அவர்களுடன் உயிரிழந்த சிஆர்பிஎப் வீரர்கள் பிண்ட்டு மற்றும் வினோத் என்று அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இத்துப்பாக்கிச் சண்டையின்போது பொதுமக்களில் உயிரிழந்தார். அவர் பெயர் வாசீம் அஹ்மத் மிர் என்பதும் அறியப்பட்டுள்ளது.
துப்பாக்கிச் சண்டை நிறுத்தம்
இந்நிலையில் துப்பாக்கிச் சண்டை நிறுத்தப்படுவதாகவும் அதே நேரம் தேடுதல் வேட்டை தொடரும் என்றும் அறிவிக்கப்படுவதாக உயரதிகாரிகள் இன்று தெரிவித்துள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT