Published : 29 Mar 2019 07:49 AM
Last Updated : 29 Mar 2019 07:49 AM
தெலங்கானாவைச் சேர்ந்த ஒரு விவசாயி தனது நிலப் பிரச்சினை குறித்து சமூக வலைத்தளமான பேஸ்புக்கில் புகார் செய்தார். இதை அறிந்த முதல்வர் அரை மணி நேரத்தில் பிரச்சினையை தீர்த்து வைத்தார்.
தெலங்கானா மாநிலம், மஞ்சேரியல் பகுதியைச் சேர்ந்தவர் சரத் (30). இவர் தனக்கு சொந்த மான 7 ஏக்கர் விவசாய நிலத்தில் பயிர் செய்து, குடும்பத்தை காப்பாற்றி வந்தார். இந்நிலையில், இவரது தந்தை கொண்டாபல்லி சங்கரய்யாவின் பெயரில் இருந்த நிலப் பட்டா, வேறொருவரின் பெயருக்கு மாற்றப்பட்டதை அறிந்த சரத் அதிர்ச்சி அடைந்தார்.
இதுகுறித்து மஞ்சேரியல் மாவட்ட ஆட்சியர் பாரதி ஹொல்லிகேரி மற்றும் பல்வேறு வருவாய் அதிகாரிகளிடம் புகார் செய்தார். கடந்த 11 மாதங்களாக இந்தப் புகார் மீது எவ்வித நடவடிக்கையும் இல்லை. இதனால் வெறுத்துப்போன சரத், கடந்த 18-ம் தேதி நெல்லெல்லா தாசில்தார் அலுவலகம் முன்பு நின்றபடி, தனது நிலப் பிரச்சினை குறித்து விளக்கி அதை வீடியோ காட்சியாக பதிவு செய்து, தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவேற்றம் செய்தார்.
இதைப் பார்த்த தெலங்கானா முதல்வர் கே. சந்திரசேகர ராவ், உடனடியாக சரத்தின் பேஸ்புக் பக்கத்தில் இருந்த செல்போன் எண்ணில் நேரடியாக தொடர்பு கொண்டு பேசினார். அப்போது நடந்த விவரத்தைத் தெரிவித்தார். இதில், வருவாய் ஆய்வாளர் களுக்கு தொடர்பு இருப்பதாகவும், இதனால் அரசின் விவசாய நலத்திட்டங்கள்கூட தனக்கு கிடைப்பதில்லை என்றும் கூறி வருத்தப்பட்டார்.
இதைக் கேட்ட முதல்வர் சந்திரசேகர ராவ், உடனடியாக இதுகுறித்த புகாரை பேக்ஸ் மூலம் அனுப்புமாறு கூறினார். ஆனால், பேக்ஸ் அனுப்ப 20 கி.மீ தொலைவில் உள்ள பெல்லம்பல்லிக்கு செல்ல வேண்டும் என பதிலளித்துள்ளார் சரத். இதனால், பேஸ்புக் மூலமாகவே புகார் தெரிவிக்குமாறு முதல்வர் கூறினார். அதன்படி சரத் புகார் செய்தார். இதையடுத்து, அதிகாரிகள் உன் வீட்டைத் தேடி வந்து பிரச்சினையை உடனடியாக தீர்த்து வைப்பார்கள் என்று முதல்வர் உறுதி அளித்தார்.
அதன்படி, அடுத்த அரை மணி நேரத்தில், மாவட்ட ஆட்சியர் பாரதி ஹொல்லிகேரி மற்றும் வருவாய் அதிகாரிகள் சரத்தின் வீட்டுக்கு சென்றனர். பின்னர் ஆவணங்களை சரிபார்த்து, நிலப் பட்டாவை பழையபடி சரத்தின் தந்தை பெயருக்கே மாற்றிக் கொடுத்தனர். இந்த பெயர் மாற்றத்துக்கு காரணமான கிராம வருவாய் அதிகாரி கருணாகர், வருவாய் ஆய்வாளர் பெத்திராஜு ஆகிய இருவரும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.
இதைத் தொடர்ந்து மீண்டும் சரத்தை தொடர்பு கொண்ட முதல்வர் சந்திரசேகர ராவ், உங்கள் பிரச்சினை எப்படி தீர்ந்தது என்பது குறித்து மற்றவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என அறிவுறுத்தினார். இதையடுத்து, சரத் முதல்வருக்கு நன்றி தெரிவித்தார்.
இதைத்தொடர்ந்து, தங்களது பிரச்சினைகள் குறித்து பேஸ்புக் மூலம் தெலங்கானா முதல்வருக்கு நேற்று பலர் புகார் தெரிவித்தனர். இதுகுறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு சம்பந் தபட்ட மாவட்ட ஆட்சியர்கள், எஸ்பி-களுக்கு முதல்வர் உத்தர விட்டார். முதல்வரின் இந்த செயலுக்கு மாநிலத்தில் பாராட்டு குவிந்து வருகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment